செய்தித்தாளில் இன்று: “இந்தியாவில் ஆட்டோ ரிக்‌ஷாவை விட விமானத்தின் கட்டணம் குறைவு”

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்:

படத்தின் காப்புரிமை RAVEENDRAN

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்தூர் மேலாண்மை சங்கத்தின் சர்வதேச மேலாண்மை மாநாட்டில் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா,'' நம் நாட்டில், தற்போது ஆட்டோ ரிக்‌ஷாக்களில் வசூலிக்கப்படுவதை விட, விமான பயணத்திற்கு குறைவாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு நான் கூறுவதை சிலர் முட்டாள்தனம் என கூறலாம். ஆனால், இதுதான் உண்மை'' என கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

படத்தின் காப்புரிமை Getty Images

சென்ற ஆண்டே மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தேசிய அளவிலான நீட் பொதுத் தேர்வை கடைபிடிக்குமாறு தமிழக அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து தமிழக அரசே நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை தொடங்கவுள்ளதாக அறிவித்து, தற்சமயம் தலைநகர் சென்னையில் மட்டும் 10 பயிற்சி மையங்கள் செயற்படுவதாக அறிவித்திருந்தாலும் உண்மையில் ஒரே ஒரு பயிற்சி மையமே செயல்பட்டு கொண்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது முதற்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சுமார் இரண்டு லட்சம் பேர் பங்கேற்ற பெங்களுருவில் நடந்த பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி "10 சதவீத கமிஷன் அரசாங்கம்" என்று அடையாளம் காணப்படும் அளவுக்கு மோசமான ஆட்சியை நடத்துவதாக குற்றஞ்சாட்டியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

''தமிழகத்துக்குத் தண்ணீர் வேண்டுமா? காவிரி தண்ணீர் வேண்டுமா? என்று தமிழக மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். காவிரி தண்ணீர் வேண்டும் என்றால் கிடைக் காது. சும்மா நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். தண்ணீர் வேண்டுமானால் ஏற்பாடு செய்ய முடியும். கடல்நீரைச் சுத்திகரித்து 24 மணி நேரமும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு கொடுக்க முடியும். இது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா?'' என பாஜகவை சேர்ந்த எம்.பி சுப்பிரமணிய சுவாமி கூறியதாக தினந்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள அல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை ஒன்று உயிரிழந்துள்ளது. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளையொன்று திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தது. தனது உரிமையாளர்களால் கேலி செய்யப்பட்ட மற்றொரு காளை ஆறு கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று ரயிலில் அடிபட்டு காயத்துடன் உயிர் தப்பியதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தலையங்கத்தை எழுதியுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். அதில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை நெருங்கிய காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தல் முடிவுகள் உத்வேகம் அளித்துள்ளதாகவும், ஆனால் அது செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி

டெல்லியில் உள்ள தமிழக அரசின் விருந்தினர் இல்லத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு இல்லம் பெயரை மாற்றம் செய்ய தமிழக அரசு துணைபோவது அண்ணாவுக்குச் செய்யும் துரோகம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :