பாரதியார் பல்கலை: கைதான துணைவேந்தரால் நியமிக்கப்பட்டவர்களிடம் விசாரணை

  • 5 பிப்ரவரி 2018
கணபதி படத்தின் காப்புரிமை www.b-u.ac.in

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டிற்காக துணைவேந்தர் கணபதி கைதானதை அடுத்து, அவரால் பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட அலுவலர்களும் விசாரிக்கப்படுவார்கள் என லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயிற்சி காலத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த சுரேஷை உதவி பேராசிரியராக பணியமர்த்த துணைவேந்தர் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு இடைத்தரகராக வேதியல் துறை தலைவர் தர்மராஜ் செயல்பட்டதாகவும் சுரேஷ் அளித்த புகாரின் பேரில்,விசாரணை நடத்தப்பட்டு இருவரும் கைதாகினர்.

பாரதியார் பல்கலை. துணைவேந்தர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு

புதிதாக பதிவாகியுள்ள லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டோடு, ஏற்கனவே துணைவேந்தர் மீதான மற்றொரு வழக்கில், தகுதியற்றவர்களை அவர் பணியில் அமர்த்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் விசாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

''லஞ்சம் வாங்கிய புகாரில் துணைவேந்தர் கணபதி கைதாகியுள்ளதால், அவரால் பணியில் சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்துவோம். கணபதி பதவி ஏற்றுக்கொண்ட சமயத்தில் இருந்து, கைதான காலம்வரை அவரால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவார்கள்,'' என லஞ்சஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி தட்சிணாமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை www.b-u.ac.in
Image caption ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் கணபதி

கைதான துணைவேந்தர் கணபதி மற்றும் தர்மராஜ் ஆகியோர் பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பிணை கேட்டு அளிக்கப்பட்ட மனு, நாளை (பிப்ரவரி6) லஞ்சஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், கணபதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யவும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்கவுள்ளதாகவும் லஞ்சஒழிப்புதுறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பதவியில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் கைதானது பற்றியும், தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணிநியமனம் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்றும் எழுந்துள்ள கோரிக்கை குறித்து உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவாலிடம் கேட்டபோது, ''துணைவேந்தர் கணபதியால் பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்கள், அப்பதவிக்கு தகுதியற்றவர்கள் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. விரைவில் அவர்களும் விசாரிக்கப்படுவார்கள்" என்றார்.

மேலும் ''பாரதியார் பல்கலைகழகத்தில் கணபதிக்கு முன்பாக துணைவேந்தர் பதவி வகித்த ஜேம்ஸ் பிச்சை மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் மீதும் ஊழல் வழக்குகள் நடந்து வருகின்றன. அனைத்து வழக்குகளும் விரைவில் தீரக்கப்படும்,'' என்றார்.

துணைவேந்தர் நியமனம் முன்பை போல அல்லாமல், மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய செயலர், ''துணைவேந்தரை தேர்தெடுக்கும் குழுவில் ஒரு நபர் மட்டுமே இருந்து வந்தார். தற்போது அந்த குழுவில் மூன்று நபர்களை நியமித்துள்ளோம். சமீபத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், சென்னை மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பதவிக்கு, தகுதியின் அடிப்படையில், தேர்வான நபர்கள், நேர்காணல் நடத்தப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :