தன்யஸ்ரீயை காப்பற்ற ரூ.16 லட்சம் நிதியளித்த முகம் தெரியாதவர்கள்

தன்யஸ்ரீயை காப்பற்ற 16 லட்ச ரூபாய் கொடுத்த முகம் தெரியாதவர்கள்

பட மூலாதாரம், MILAAP.ORG

சென்னையில் குடிபோதையில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற நான்கு வயது சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில் படுகாயமடைந்த தன்யஸ்ரீக்கு உதவுவதற்காக, ஒரு நிதிதிரட்டும் தளம் மூலம் 16 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தன்யஸ்ரீக்காக நிதியுதவி அளித்துள்ளனர். தன்யஸ்ரீ மருத்துவமனையில் உடல்நலம் தேறி வருகிறார்.

இந்த நிதி திரட்டும் பிரசாரம், சென்னையில் உள்ள தன்யஸ்ரீயின் வீட்டின் அருகில் வசிக்கும் ஒரு இளைஞர் குழுவினரால் தொடங்கப்பட்டது.

''அவள் குணமடைகிறாள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் சதீஷ் குமார் மோகன். தன்யஸ்ரீக்காக நிதிதிரட்டும் முயற்சியைத் தொடங்கியவர்களில் இவரும் ஒருவர்.

வாட்ஸ் அப் குழுவின் மூலம் இந்த விபத்து குறித்து தானும் தனது நண்பர்களும் அறிந்துகொண்டதாக பிபிசியிடம் கூறினார் மென்பொருள் பொறியாளரான மோகன்.

அந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்த 20 பேரும் தன்யஸ்ரீயின் வீட்டின் அருகில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கின்றனர். தன்யஸ்ரீக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அவரது குடும்பத்திற்கு நிதியுதவி தேவைப்படுகிறது என்றும் அந்த குழுவில் உள்ள ஒருவர் மெசேஜ் செய்துள்ளார்.

இதே போல முன்பும் வாட்ஸ் ஆப் குழுக்களில் மெசேஜ் அனுப்பி, உதவிக்கு பணம் திரட்டியுள்ளதால் இதுவும் வழக்கமான ஒன்றாக இருந்தது என்கிறார் மோகன்.

இந்தியாவில் மேசேஜிங் தளங்களை, மாதத்திற்கு 200 மில்லயன் பயனாளிகள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் செய்திகள் விரைவாகப் பயணிக்கின்றன.

பட மூலாதாரம், MILAAP.ORG

"தன்யஸ்ரீக்கு முதுகெலும்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சைக்கு நிறைய பணம் தேவைப்பட்டது" என்கிறார் மோகன்.

தன்யஸ்ரீயின் சிகிச்சைக்கு தேவையான நிதி திரட்டுவதற்காக ஒரு இணையப் பிரசாரத்தை தொடங்கலாம் என மோகனின் நண்பர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.'' இதன் மூலம் இந்த செய்தியை பலருக்குக் கொண்டு செல்லலாம் என என்னிடம் கூறினார்கள்'' என்கிறார் மோகன்.

பிறகு தன்யஸ்ரீயின் தந்தை ஸ்ரீதரை சந்தித்த மோகன், தன்யஸ்ரீக்கு உதவுவதற்காக தாங்கள் நிதி திரட்டுவது குறித்து விளக்கியுள்ளார்.

தனது மகள் விரைவில் குணமடைவார் என நம்புவதாக பிபிசியிடம் கூறிய ஸ்ரீதர், பண உதவி அளித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தன்யஸ்ரீயின் புகைப்படம் மற்றும் அவருக்கு என்ன நடந்தது என்ற செய்தியுடன், ஜனவரி 31-ம் தேதி இந்த பிரசாரம் தொடங்கப்பட்டது.

ஜனவரி 31-ம் தேதியன்றுதான் இது தொடங்கப்பட்ட போதிலும், இந்த பிரசாரம் விதிவிலக்காக நன்றாக செயல்பட்டதாக கூறுகிறார் நிதி திரட்டும் தளத்தின் தொடர்பு அதிகாரி ஆர்த்தி ராஜன்.

100 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை நிதியுதவி வந்துள்ளதாகக் கூறுகிறார் ஆர்த்தி ராஜன். 20 லட்சம் திரட்ட வேண்டும் என இலக்கு வைத்துள்ள நிலையில், இன்னும் 3 லட்சத்து 85 ஆயிரம் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளது. இலக்கை எட்டுவதற்கு இன்னும் 21 நாட்கள் மீதமுள்ளது.

தன்யஸ்ரீயின் தந்தையுடன் ஆர்த்தி ராஜன் தொடர்ந்து பேசிவருகிறார்.

''கடந்த இரவு, ஸ்ரீதரிடம் பேசினேன். தன்யஸ்ரீ கண்முழித்து தனது சசோதரியை அடையாளம் கண்டதாகவும், தோசையும், பாலும் சாப்பிட்டதாகவும் கூறினார்'' என்கிறார் ஆர்த்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :