செய்தித்தாளில் இன்று: ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி

படத்தின் காப்புரிமை Getty Images

''தமிழகத்தில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.19 ஆயிரத்து 355.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட ரூ.19 ஆயிரத்து 592.58 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இதன் மூலம் கூடுதலாக ரூ.237 கோடி கிடைத்து இருக்கிறது.'' என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்தது.

''சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம், நெமிலி தாலுகாவை உள்ளடக்கி சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது'' எனவும் தினத்தந்தியின் மற்றொரு செய்தி கூறுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

படத்தின் காப்புரிமை SEYLLOU

தமிழகத்திலுள்ள குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீடு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ள செய்தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் பிரதான செய்தியாக இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரை மையமாக கொண்டு செயல்படும் அஸ்சென்டஸ் நிறுவனம் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பெரியளவிலான தரவு மையங்களை அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் முதலீட்டில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமலர்

''உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், தினகரனின் அதிமுக அம்மா அணி அங்கீகரிக்கப்பட்ட கட்சியே இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது'' என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தபடி, தண்டனை காலம் முடிவதற்கு முன்னதாகவே தமிழக சிறைகளிலிருந்து குறிப்பிட்ட கைதிகளை வெளியிடுவதற்கான வரைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதற்கென அமைப்பட்டுள்ள குழு, விடுதலை செய்யப்படவுள்ள 1,600 கைதிகளை தேர்ந்தெடுக்கும் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

முதலில் சிவசேனா தற்போது ஆந்திரப்பிரதேசத்தில் ஆளும் தெலுங்கு தேச கட்சி என பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகள் அதிலிருந்து அதிருப்தி அடைந்து, வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இது பிஜேபிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தலையங்க கட்டுரை.

தினமணி

''திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்து கொள்ளும் திருமணத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதி ஆவணக் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து கூறியுள்ளது`'' என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :