"ஆட்டோ ஓட்டுநரிடம் ஆங்கிலத்தில் பேசினால் அடிப்பார்"

படத்தின் காப்புரிமை Getty Images

பேச்சாற்றல் மிகையாக இருப்பதும் சில நேரங்களில் சிக்கலில் சிக்கவைக்கும் என்பதற்கு உதாரணம் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் சசி தரூர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அவர் அந்த மொழியில் சிறப்பாகவே எழுதக்கூடியவர். மொழி ஆளுமை பெற்றவராக இருந்தாலும் சில வார்த்தை பிரயோகங்களால் அவர் பிரச்சனைளையும் விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார்.

'Fargo' and 'Interlocutor' போன்ற அடிப்படை ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடாக இருந்தாலும் சரி, விமானத்தில், குறைந்த கட்டண வகுப்பை "கால்நடை வகுப்பு” என்று சொன்ன சந்தர்பத்திலும் சரி, சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவார் சசி.

சசி தரூருடன் பிபிசி நேர்காணல்

"நான் எந்த அகராதியையும் பார்த்து வார்த்தைகளை உபயோகிக்கவில்லை, என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயல்பான வார்த்தைகளையே பயன்படுத்துகிறேன். அதன் பொருள் புரியாதவர்கள் அகராதியைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்" என்கிறார் சசி தரூர்.

இந்தியாவின் இயல்பு நிலைமை

ஜெய்பூரின் நெளச்சந்தி இலக்கிய விழா போன்ற நெரிசலான இடத்தில் பேட்டி காண்பது சற்றே சிரமம் என்ற போதிலும், புன்னகைத்த முகத்துடன் நேரான பார்வையுடன் சுருக்கமான நேர்காணல் தர சசி தரூர் தயாராகவே இருந்தார்.

"இந்தியாவின் யதார்த்த நிலைமை வித்தியாசமானது. இந்திய கிராமம் ஒன்றின் கதையை ஆங்கிலத்தில் எழுத முடியாது. ஆனால், உபமன்யு சாட்டர்ஜியின் 'இங்லிஷ் ஆகஸ்ட' போன்று ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கதையை எழுத வேண்டுமானால் அதை என்னால் ஆங்கிலத்தில் மட்டுமே சிந்திக்க முடியும் என்பதால், அதை ஆங்கிலத்திலேயே எழுதுவேன். அதேபோல் ஒரு ஆட்டோ ஓட்டநருடன் பேசும்போது ஆங்கிலத்தில் பேசினால், அவர் என்னை அடிப்பார்" என்கிறார் சசி தரூர்.

இந்திய எழுத்தாளர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகளும், கட்டுரைகளும் சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகின்றன. ஆசிரியர், பத்திரிகையாளர், தன்னார்வ தொண்டு அமைப்பு அல்லது கணினி வல்லுநர்கள் என பல தரப்பினரும் ஆங்கிலத்தில் எழுதி பிரபலமாகியுள்ளனர்.

அவர்கள் லட்சக்கணக்கான டாலர்கள் முன்தொகை பெறும் வகையில் பிரபலமாகி வருவதால், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை உலக அளவில் கொண்டு வரும் முயற்சிகளில் சசி தரூர் ஈடுபட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை @ShashiTharoor

இந்திய மொழிகளில்

லண்டனில் வெளியாகும் 'லிட்ரோ' என்ற இலக்கிய பத்திரிகையின் 'இந்தியா மொழிபெயர்ப்பு' (Translating India) என்ற புதிய இதழின் சிறப்பு ஆசிரியரான சசி தரூர், இந்திய மொழி எழுத்தாளர்களின் 11 கதைகளை தேர்ந்தெடுத்துள்ளார். சர்வதேச அளவில் அறியப்பட்ட 20-25 இந்திய எழுத்தாளர்களில் ஏழு அல்லது எட்டு பேரின் பெயர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சசி தரூர் கூறுகிறார்.

'லிட்ரோ' பத்திரிகையின் இந்த பதிப்பில் வங்க மொழி எழுத்தாளர் சங்கீதா பந்தியோபாத்யாய், தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன், மலையாள எழுத்தாளர்கள் கே.ஆர். மீரா, பால் ஜகாரியா, மான்ஸி மற்றும் பென்யாமின், ஹிந்தி மொழி எழுத்தாளர் மனீஷா குல்ஸ்ரேஷ்டா, கன்னட மொழி எழுத்தாளர் விவேக் ஷாந்த், ஆங்கிலத்தில் சுஷ்மிதா பட்டாச்சார்யா மற்றும் அனிதா கோவியாஸின் கதைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதும் அவை பிரபலமாவதும் சுலபமானதல்ல என்பதை பத்திரிகையின் தலையங்கத்தில் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு சிக்கல்கள்

பிபிசி செய்தியாளரிடம் பேசிய சசி தரூர், "இந்திய மொழி எழுத்தாளர்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஏனென்றால் சர்வதேச சமூதாயத்திடம் அவர்கள் அதிக பரிச்சயம் அற்றவர்கள். அதற்கு காரணம் இந்திய எழுத்தாளர்களின் சிறந்த மொழிபெயர்ப்புகள் கிடைப்பதில்லை."

மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை சுட்டிக்காட்டும் சசி தரூர், "ஒவ்வொரு வார்த்தையின் பின்புலத்திலும் ஒரு கலாசார சிந்தனை உள்ளது, அதை சரிவர புரிந்து கொள்ள அகராதி பயன்படாது, அதற்கான சரியான வார்த்தையும் ஆங்கிலத்தில் இருக்காது. உதாரணமாக நீ, நீங்கள் என்ற சொல் பிரயோகங்களை ஆங்கிலத்தில் கூற ’you’ என்ற ஒரே வார்த்தைதான் உள்ளது" என்று விளக்குகிறார்.

மேலும், "இரு மொழிப் புலவராக இருந்தாலும், வார்த்தை பிரயோகத்தில் வல்லவரானாலும், வட்டார சொல்லாடல்களை, வார்த்தைகளை சர்வதேச அளவில் வெவ்வேறு இடங்களில் உள்ள வாசகர்களுக்கு புரிய வைக்கும் மொழிபெயர்ப்பாளரின் முயற்சி கடினமானதே. வார்த்தைகளின் தாக்கம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும் தன்மையையும் கொண்டிருப்பதால் அகராதியின் உதவியை நாடினாலும் அது முழுப் பலனையும் தருமா என்பது கேள்விக்குறியே" என்று யதார்த்தத்தை முன்வைக்கிறார் சசி தரூர்.

"இந்திய மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்படும் போது, ​​பல்வேறு நுட்பமான விஷயங்கள் இழக்கப்படுகின்றன, எனவே நம் இலக்கியத்தை புரிந்து கொள்ள வெளிநாட்டவர்களுக்கு சில சமயங்களில் சிக்கல் ஏற்படுகிறது" என்கிறார் சசி தரூர்.

ஆனால் ஆங்கிலத்திற்கு இந்தியாவில் நியாயமற்ற உயர் நிலையை வழங்கியிருப்பதாக கூறும் லிட்ரோ பத்திரிகை ஆசிரியர் எரிக் அகோடோவின் கருத்துடன் சசி தரூர் உடன்படவில்லை. ஜெய்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்ட எரிக், "பிரிட்டனின் உயர்நிலை ஆங்கிலத்தை நாங்கள் ஊக்குவிக்கவில்லை, அதில் எங்களுக்கு எந்விதமான ஆர்வமும் இல்லை, இந்த பத்திரிகை மூலம், இந்தியாவில் இருந்து எழும் குரல்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வர விரும்புகிறோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை @ShashiTharoor

எது சிறந்த எழுத்து?

இந்தியாவில், ஆங்கிலத்திற்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாக எரிக் நம்புகிறார். "ஒரு சில நபர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஆங்கிலத்திற்கு, இந்த நாட்டில் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே இந்தியாவை விட்டு சென்றுவிட்டனர், அதேசமயம் இந்திய மொழிகள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளன."

இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படுவதை புறக்கணிக்கமுடியாது என்று சசி தரூர் நம்புகிறார், ஏனெனில், எழுத்தின் தரத்தை மதிப்பிடுபவர்களுக்கு தரமான சிறந்த எழுத்து என்ன என்பது நன்றாக தெரியும் என்று அவர் கூறுகிறார்.

இந்திய மொழி எழுத்தாளர்கள் பலர் ஆங்கிலப் புலமை பெற்றவர்களாக இருந்தபோதிலும், தங்களது சொந்த மொழியில் எழுதவே அவர்கள் தீர்மானிக்கின்றனர். அவர்களுக்கு ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் எழுதப்பட்ட இலக்கியம் பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ தெரியவில்லை என்பது அதன் பொருளல்ல.

குறைந்தது 60-70 சதவிகித இந்திய எழுத்தாளர்கள் சர்வதேச அளவிலான நவீன இலக்கியங்களை படித்தவர்களாக இருப்பினும் தங்கள் மொழியின் வழியாக கருத்துகளை படைக்க விரும்புகிறார்கள். தங்களது கருத்துகளும், எண்ணங்களும் பிற மொழியை விட சொந்த மொழியிலேயே படித்து புரிந்துக் கொள்ளப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்."

14 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளம் கற்றார்

உதாரணமாக, ஹிந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மா மற்றும் கன்னட எழுத்தாளர் யூ.ஆர் அனந்தமூர்த்தி பற்றி குறிப்பிடுகிறார் சசி தரூர்.

ஆங்கில மொழி செய்தியாளராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பணிபுரிந்த ஓ.வி விஜயன், பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு மலையாளம் கற்றுக்கொண்டு, பின்னர் மலையாள மொழி எழுத்தாளராக உருவான சுவராசியமான கதையை சுட்டிக்காட்டுகிறார்.

ஆங்கிலமும் ஒரு இந்திய மொழியே என்று சசி தரூர் சொல்வது கேலியாகவோ விளையாட்டாகவோ அல்ல. தான் சொல்லும் பொருள் அறிந்து இதனைச் சொல்கிறார் அவர். சேதன் பகத் எழுதும் ஆங்கில நடையை வெளிநாடுகளில் வசிப்பவர்களால் சரியாக புரிந்துக் கொள்ளமுடியாது என்றும், அதேபோல் தில்லி பல்கலைக் கழகத்தில் பேசப்படும் ஆங்கிலத்தை ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கருதுகிறார் சசி தரூர்.

சசி தரூரிடம் கேட்கப்படும் கேள்விகள், நேரடியாகவோ, கடுமையானதாகவோ, எளிமையானதாகவோ எப்படி இருந்தாலும் சரி, அவர் புன்னகையுடன், கண்களின் பிரகாசத்துடன் இயல்பாகவே பேசுகிறார்.

"கோழையே சசி தரூர், எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறாய்" என்று தொலைகாட்சி ஒருங்கிணைப்பாளர் உரக்க கூச்சலிட்டபோது சசி தரூருக்கு என்ன தோன்றியது? இந்த கேள்வியை சசி தரூரிடம் முன்வைத்தோம்.

கேள்வியை கேட்டதும் வாய்விட்டு சிரித்த சசி தரூர், "விவேகமற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அதற்கு தகுதியில்லாதவர்கள் அவர்கள். ஏன் நான் பதில் சொல்ல வேண்டும்? இந்த நாட்டில் எந்தவொரு பிரச்சினை பற்றியும் பேச தயாராகவே இருக்கிறேன். ஆனால் விவேகத்துடன் முறையாக பேச வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்." என்று பதிலளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :