தமிழகத்தில் தரக்குறைவான சமையல் எண்ணெய் விற்பனை: புற்றுநோய் ஆபத்தா?

  • 6 பிப்ரவரி 2018

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் விற்கப்படும் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களை சோதனை செய்ததில், முப்பது சதவீதம் எண்ணெய் மாதிரிகள் தரம் குறைந்தவையாகவும், போலியான விளம்பரம் செய்யப்பட்டவையாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையரகம் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் சுமார் 930 எண்ணெய் மாதிரிகளை சோதனை செய்தது.

அதில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட விதவிதமான எண்ணெய்கள், செக்கு எண்ணெய், பல பிரண்டுகளின் பெயர்களில் மற்றும் பிராண்ட் இல்லாமல் விற்கப்படும் எண்ணெய் மாதிரிகளை சோதனை செய்ததில் முப்பது சதவீத எண்ணெய் மாதிரிகள் தரம் குறைந்தவை என்று நிரூபணம் ஆகியுள்ளது.

போலியான விளம்பரங்களால் ஏமாற்றம்

எண்ணெய்யில் உள்ள கலப்படம் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாக பேசிய உணவுபாதுகாப்புத் துறையின் ஆணையர் அமுதா, ''சில கடைகளில் எடுத்த மாதிரிகளில் கடலை பருப்பு அல்லது சூரியகாந்தி படத்தை பாக்கெட்டில் அச்சிட்டுவிட்டு, குறைந்த அளவு சூரியகாந்தி எண்ணெய்யுடன், பாமாயில் கலந்து விற்பதைக் கண்டறிந்தோம். சமையல் எண்ணெய் என்ற பெயரில் எண்ணெய் விற்கப்படுகிறது. சமையல் எண்ணெய் என்ற ஒரு எண்ணெய் தனியாக தயாரிக்கப்படுவதில்லை. எண்ணெய் வித்துகளைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய்யை நாம் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். அனைத்து எண்ணெய்களிலும் உணவுபாதுகாப்பு துறையின் முத்திரை, தயாரிப்பாளர் உரிமம் எண் உள்ளதா என்று நுகர்வோர் பார்த்துவாங்கவேண்டும்,'' என்றார்.

Image caption உணவுபாதுகாப்புத் துறையின் ஆணையர் அமுதா

''நுகர்வோரை ஈர்க்கும் வகையில் போலியான வாசகங்கள் அல்லது விளம்பர யுக்திகளைக் கொண்டு ஏமாற்றும் எண்ணெய் நிறுவங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.,'' என்று தெரிவித்தார்.

சென்னை போன்ற நகரப்பகுதிகளில் செக்கு எண்ணெய் கடைகள் அதிகரித்துவவருவது குறித்து கேட்டபோது, ''செக்கு எண்ணெய்க்கு என தனி தரம் நிர்ணயம் செய்யப்படவில்லை. மற்ற எண்ணெய்களுக்கு இருக்கும் அதே தரம் செக்கு எண்ணெய்யில் உள்ளதா என்று பார்ப்போம். ஆனால், எண்ணெய் விற்கும் நிறுவனம் லேபிலில் கூறியுள்ள தரம் மற்றும் மர செக்கு அல்லது இயந்திர செக்கு மூலம் எடுக்கப்பட்ட எண்ணெய் என்று அச்சிட்டிருந்தால், அதே தரம் உள்ளதா என்று சோதிப்போம். பெரும்பாலும் எண்ணெய் விற்கும் கடைகளில் பாகெட்களில் அடைத்து விற்கவேண்டும் என்றும் பாத்திரங்களில் வைத்து விற்கக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்,'' என்று தெரிவித்தார்.

இலவசம் என்றால் ஏமாற வேண்டாம்

ஒரு பொருள் வாங்கினால், அதைப்போன்ற மற்றொன்று இலவசம் என்று விற்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறிய அவர், ''ஒரு பொருளின் அதை விலை கொண்ட மற்றொரு பொருளை எவ்வாறு இலவசமாக விற்கமுடியும் என்று நுகர்வோர் யோசிக்கவேண்டும். சூப்பர் மார்க்கெட்களில் காலாவதியாகும் தேதியை நெருங்கும் பொருட்கள் இலவசமாக தரப்படலாம். பொருளின் காலாவதி தேதியை கவனத்துடன் பார்த்து வாங்கவேண்டும் என நுகர்வோரை அறிவுறுத்துகின்றோம்'' என்று குறிப்பிட்டார் அமுதா.

புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு

கலப்பட எண்ணெய்யை விற்றதற்காக ஒரு எண்ணெய் நிறுவனத்தின் மீது வழக்கு நடந்துவருவதாக கூறிய அவர் பிரபல எண்ணெய் நிறுவனங்கள், சிறிய கடைகளில் விற்கப்படும் எண்ணெய் என பலவகையான எண்ணெய் மாதிரிகளை எடுத்து இந்தமுறை சோதனைக்கு உட்படுத்தியாக கூறினார்.

சமீபத்தில் எண்ணெய் உற்பத்தி செய்வோர் மற்றும் எண்ணெய் பேக்கிங் செய்யும் நிறுவனங்களுக்கு கட்டாயமாக பின்பற்றவேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி கொழுப்பு இல்லாத எண்ணெய் அல்லது கொழுப்பை குறைக்கும் எண்ணெய் போன்ற தகவல்கள் எண்ணெய் லேபிலில் இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது. நுகர்வோர்கள் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் கலப்படம் குறித்த புகார்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்திவந்தால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்கிறார் தமிழக அரசின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் ஊட்டச்சத்து உணவு மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

''கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய்யில் விதவிதமான எண்ணெய்கள் இருப்பதால், ஒவ்வொரு எண்ணெய்யின் சூடாகும் நேரம் வித்தியாசப்படும், காலாவதி ஆகும் நாட்கள் வேறுபடும். இதை அறியாமல் தொடர்ந்து அதை பயன்படுத்திவந்தால் முதலில் வாந்தி, வயிற்றுப்போக்கு என தொடங்கி புற்றுநோய் ஏற்படக்கூடும். ஒரு எண்ணெய் சூடான பின் மற்ற எண்ணெய் சூடாகும் வரை, முந்தைய எண்ணெய் கொதிநிலையில் இருப்பதால், அது மீண்டும் சூடாக்கப்படுவதற்கு சமம்'' என்றார்.

''குறைந்தபட்சம் ஒரே பிரண்ட் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தாமல், அவ்வப்போது மாற்றுங்கள் என்று கூறுகிறோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் எண்ணெய்யை, உள்ளுரில் வாங்கும் எண்ணெய் என விதவிதமான எண்ணெய்களை கலந்து, சூடாகி ஒரு உணவு தயாரிப்பில் பயன்படுத்தவேண்டாம். காலாவதியாகும் தேதியை பார்த்து வாங்கவேண்டும் என்று கூறுகிறோம்'' என்று மருத்துவர் மீனாட்சி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :