அரிவாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்: 75 ரௌடிகள் கைது

சக ரௌடி ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக சென்னையின் புறநகர் பகுதியில் ஒரே இடத்தில் கூடி அரிவாளால் கேக்வெட்டி கொண்டாடிய 75 ரௌடிகளை சென்னை நகரக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

இவர்களில் பலரும் பல்வேறு குற்றங்களுக்காக நீண்டகாலமாக தேடப்பட்டு வருபவர்கள் என்றும் இவர்களில் 8 பேர் மீது கொலை வழக்குகள் உள்ளன எனவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

நீண்டகாலமாகத் தேடப்பட்டுவந்த பல்லு மதன் என்ற குற்றவாளியை செவ்வாய்க்கிழமையன்று மாலையில் பள்ளிக்கரணையில் காவல்துறை சுற்றிவளைத்தது.

மதன் தன்னுடைய காரில் ஆயுதங்களுடன் எங்கோ கிளம்பிச்சென்று கொண்டிருந்த நிலையில் அவர் காவல்துறையால் பிடிக்கப்பட்டார்.

மதன் எங்கு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார் என்று காவல்துறையினர் விசாரித்தபோது பினு என்ற ரவுடியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக செல்வதாக அவர் கூறியிருக்கிறார்.

Image caption அரிவாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்

இந்தக் கொண்டாட்டத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகளும் கலந்துகொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து அம்பத்தூர் துணை ஆணையருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இணை ஆணையர் சந்தோஷ்குமார், துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் ஆகியோர் தலைமையில் 10 ஆய்வாளர்கள் 15 துணை ஆய்வாளர்கள், 40 காவலர்கள் ஒன்று திரட்டப்பட்டு இந்த ரௌடிகளைப் பிடிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டது.

பூந்தமல்லியை அடுத்து உள்ள மலையம்பாக்கத்தில் ஆறு வழிச் சாலையை ஒட்டியுள்ள வேலு என்பவருடைய லாரி ஷெட்டில் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனங்களில் இரவு 9 மணியளவில் அந்த லாரி ஷெட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த ரௌடிகள் மலையம்பாக்கம் கிராமத்திற்குள் தப்பி ஓடினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கிராம மக்கள் உதவியுடன் கைதுசெய்யப்பட்டனர்.

காவல்துறை அங்கு வருவதற்கு முன்பாகவே ரௌடி பினு தன்னுடைய பிறந்த நாளை, பெரிய கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிவிட்டார்.

ஒட்டுமொத்தமாக 75 பேர் இந்த நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்டனர்.

முக்கியமான ரௌடிகளான பினு, விக்கி, கனகு ஆகியோர் தப்பிவிட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 88 செல்பேசிகள், 17 கத்திகள், 45 இருசக்கர வாகனங்கள், 7 கார்கள், 1 ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இரவு 9 மணிக்குத் துவங்கிய இந்தத் தேடுதல் வேட்டை காலை ஐந்து மணிவரை நடைபெற்றதாக இதில் ஈடுபட்ட இணை ஆணயர் சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

வேறு குற்றங்களைத் திட்டமிடுவதற்காக அவர்கள் கூடவில்லையென்றும் பிறந்த நாள் கொண்டாடவே கூடினர் என்றும் சந்தோஷ்குமார் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட ரௌடிகள் அனைவரும் அவர்கள் மீது வழக்குகள் உள்ள காவல்நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

ரௌடிகள் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு இடம் கொடுத்த லாரி ஷெட்டின் உரிமையாளர் வேலு தலைமறைவாகிவிட்டார்.

அவரது மனைவி புஷ்பராணியிடம் இது குறித்து கேட்டபோது, "எனக்கு எதுவும் தெரியாது. என் கணவர் சனிக்கிழமையே ஊருக்குச் சென்றுவிட்டார். அவருக்குத் தெரியாமல்தான் இது நடந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

தற்போது அந்த இடத்தை காவல்துறை தரைமட்டமாக்கியுள்ளது. ஒரே நேரத்தில் 75 ரௌடிகள் கைது செய்யப்படுவது தமிழகத்தில் இதுதான் முதல் முறை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்