“நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்” என்ன சொல்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

கடந்தவாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து பேசினார். இது குறித்து பேசப்படுவது இது முதல்முறையல்ல. பலர் பல காலமாக இது குறித்து பேசி இருக்கிறார்கள். நரேந்திர மோதியும் இதற்கு ஆதரவாகதான் பல காலமாக பேசி வருகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இப்போது இதில் முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷியும் இணைந்து இருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தேர்தல் நடத்துவதுதான் நல்ல முறை என்கிறார் குரைஷி.

நாடு தழுவிய விவாதம்

சண்டிகரில் பிபிசி பஞ்சாபியிடம் பேசிய அவர், "கொள்கை ரீதியாக இது நல்ல முறை என்று தோன்றும் ஆனால் சட்ட ரீதியாகவும், அரசமைப்பு ரீதியாகவும் அது அதிக சிக்கலானது. அதனால்தான் பிரதமரே இது குறித்து தேச அளவிலான விவாதத்தை கோரி இருக்கிறார்." என்கிறார்.

தலைமை தேர்தல் ஆணையராக 2010ஆம் ஆண்டு பணியாற்றிய குரைஷி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது பல பலன்களை தரும் என்கிறார்.

"வாக்காளரும் ஒருவர். வாக்குசாவடியும் ஒன்று. இரண்டு தேர்தல்களையும் ஒரே தேர்தல் அலுவலரே நடத்தி விடுவார். அதுமட்டுமல்ல, தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அனைத்தும் ஒன்றுதான். தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வதையும் இது சுலபமாக்கும். இவ்வகையில் இது நல்ல யோசனைதான்." என்கிறார் குரைஷி.

அதே நேரம் இப்படி இரண்டு தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. அதுவும் களையப்பட வேண்டும் என்கிறார் அவர்.

பிரதமர் முன்னெடுக்க வேண்டும்

படத்தின் காப்புரிமை Getty Images

"அரசமைப்புச் சட்டம் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஐந்தாண்டு கால ஆட்சியை வழங்குகிறது. இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தும் பட்சத்தில், நாடாளுமன்றம் முன்பே சில காரணங்களால் கலைந்தால், சட்டமன்றத்தையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமா...? இதற்கு மாநிலத்தை ஆளும் கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா? இதற்குதான் தேச அளவிலான விவாதம் தேவை" என்கிறார் குரைஷி.

மேலும், "தேர்தல் ஆணையம் இது தொடர்பான விவாதத்தை முன்னெடுப்பதைவிட, பிரதமரே இதனை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் முன்னெடுத்தால், அந்த விவாதத்தில் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இருக்காது. இரண்டாம் அல்லது மூன்றாம் கட்ட தலைவர்கள்தான் கலந்துக் கொள்வார்கள்." என்றார் அவர்.

அரசியல் கட்சிகளிடம் இது தொடர்பான ஒருமித்த கருத்தை உருவாக்க முடியுமா என்று கேட்டதற்கு, அவர், "ஏற்கெனவே பல கட்சிகள், இது விரும்பதக்க யோசனைதான். ஆனால், அதற்கான சாத்திய கூறுகளை யோசிக்க வேண்டும் என்று கூறி உள்ளன." என்கிறார்.

"இப்போதைய தேர்தல் முறை அதிக செலவுக்கு வழிவகுக்கிறது. பணம், ஆதிக்கம் செலுத்துகிறது. அது சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது." என்கிறார்.

"எப்போதும் நாம் தேர்தலுக்கு தயாராகி கொண்டே இருந்தால், எப்போதும் பதற்றமாகவேதான் இருப்போம். நாடு முழுவதும் ஐந்தாண்டுக்கு ஒரு தேர்தல் என்பதுதான் நல்லது." என்கிறார் குரைஷி.

தேர்தலை விரும்புவார்கள்

அடிக்கடி தேர்தல் நடத்துவதிலும் சில நன்மைகள் இருக்கின்றன. அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதை ஏழைகள் விரும்புவார்கள். அது அவர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரத்தை அளிக்கும். பொறுப்புகோருவதற்கும் வழிவகுக்கும் என்கிறார்.

உள்ளூர் அளவிலான பிரச்சனைகள் வேறு, தேசிய அளவிலான சிக்கல்கள் வேறு. இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடக்கும் பட்சத்தில் எதை முன் வைப்பது என்பதில் குழப்பம் வரலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்