கரூரில் மாணவனை கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியர்

ஒரே வாரத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் ஓர் ஆசிரியர் இடையே நடந்துள்ள இருவேறு கத்தி குத்து சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கண்டித்த தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஹரன். அதேபள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளவர் பாபு. சம்பவத்தன்று பள்ளி வகுப்புகளை பார்வையிட்டு வந்த பாபு காலியாக இருந்த வகுப்பறைக்குள் சில மாணவர்கள் தனியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அம்மாணவர்களை விசாரித்து ஒவ்வொரு மாணவராக வகுப்பறைக்கு அனுப்பிவைத்தார்.

கடைசியாக பிளஸ்-1 படிக்கும் ஹரிஹரனிடம் விசாரித்து கொண்டிருந்தார். திடீரென ஹரிஹரன் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தலைமை ஆசிரியர் பாபுவை வயிறு, முகத்தில் சரமாரியாக குத்தினார். இதனால் நிலை குலைந்து விழுந்த பாபுவின் அலறல் கேட்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

தப்பியோடிய ஹரிஹரன் அன்று இரவே காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காது மற்றும் வயிற்று பகுதியில் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பாபு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தலைமை ஆசிரியர் பாபு கடந்த ஆண்டு பள்ளிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த போது மாணவன் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு வண்டியிலிருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். இந்நிலையில் 2-வது முறையாக பாபுவிற்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமதியின்றி விளையாட சென்ற மாணவனை ஆத்திரமடைந்த ஆசிரியர் கத்தியால் குத்தினார்

கரூர் மாவட்டம் மாணவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார் ஹரிக்கூர் ரஹ்மான். அதே பள்ளியில் கரூர் தாந்தோணிமலையில் வசித்து வரும் பன்னீர் செல்வம் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஹரிக்கூர் ரஹ்மான் விளையாட்டு வீரர். தனியார் கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் உடற்கல்வி ஆசிரியரான பன்னீர் செல்வத்திடம் சொல்லாமலே பங்கேற்று வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றவே பன்னீர்செல்வம் ஹரிக்கூர் ரஹ்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரஹ்மானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவனை பள்ளி ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அங்கு ரஹ்மானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்