மோதி ஊரில் பள்ளி பகலுணவுத் திட்ட ஊழியரான தலித் ‘தற்கொலை‘

குஜராத்திலுள்ள வாட்நகரில் அமைந்துள்ள ஷேய்க்பூர் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில், பகல் உணவு திட்ட நிர்வாகியாகப் பணிபுரிந்து வந்த தலித் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

படக்குறிப்பு,

கோப்புப்படம்

வாட்நகர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த ஊராகும்.

இந்தப் பள்ளியிலுள்ள 3 ஆசிரியர்கள் காட்டிய பாகுபாட்டாலும், தெந்தரவாலும் மகேஷ் பாய் சௌதா விரக்தி அடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 6ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஷெய்க்பூர் கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் இருந்து மகேஷ் பாயின் சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதாக அப்பள்ளியின் 3 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இறந்தவரின் மனைவி இலா பென் அதே பள்ளியில் பகல் உணவு சமையலராக வேலை செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூத்த அதிகாரி ஒருவரால் இந்த சம்பவம் புலனாய்வு செய்யப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஹ்சானா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவின்திரா மன்டாலிக், பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்திடம் 3 கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும், அவற்றை மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மகேஷ் பாயின் தம்பி பியுஷ் விசாஸ் கூறியுள்ளார்.

35 வயதான மனைவி இலாவுக்கு அரசு வேலை வழங்குவது, குடும்பத்திற்கு உடனடியாக நிதி உதவி வழங்குவது ஆகியவை இந்த கோரிக்கைகளில் அடங்குகின்றன.

இறந்துபோனவரின் மகளின் பையில் இருந்து தற்கொலை குறிப்பு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.

அந்த தற்கொலை குறிப்பின்படி, கடந்த ஒன்றரை ஆண்டாக 3 ஆசிரியர்கள் மகேஸுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

ஆசிரியர்கள் மோமின் ஹூசேன் அப்பாஸ் பாய், அமாஜி அனார்ராஜி தாக்கோர், பிராஜாபதி வினோத் பாய் ஆகியோருக்கு எதிராக தற்கொலைக்குத் தூண்டியது, தலித்தை சித்ரவதை செய்தது போன்ற பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த மூன்று ஆசிரியர்களும் மகேஷிடம் பாகுபாடு காட்டி வந்துள்ளனர், காலை உணவு வாங்க சொல்லிவிட்டு, பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் காலை உணவு கொண்டு வராத வேளைகளில் எல்லாம் மகேஷூக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.

மகேஷ் பாய் மாதம் ரூ 1600-மும், அவருடைய மனைவி மாதம் ரூ 1400-ரும் ஊதியம் பெற்றுவந்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: