பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது?

  • மஜீத் ஜஹாங்கீர்
  • பிபிசி இந்திக்காக

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி பாபர் அஹமத்தின் கிராமத்திற்கு சென்றபோது, அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததை கண்டோம்.

பட மூலாதாரம், Getty Images

பாபரின் சவ ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள சாலையில் இரு பக்கங்களிலும் மக்கள் திரண்டிருந்தார்கள்.

மலையின் மீது உள்ள பாபரின் வீட்டிலிருந்து வரும் பெண்களின் அழுகுரலை நன்கு கேட்கமுடிந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை பாபர் அஹமதும் அவருடன் பணியாற்றும் முஸ்தாக் அஹமதும், ஸ்ரீ நகரில் உள்ள ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்குப்பின், அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த லக்‌ஷர் இ தொய்பாவின் தளபதி நவீத் ஜாட் மருத்துவமனையிலிருந்து தப்பினார்.

பட மூலாதாரம், J&K POLICE

பாபர் 2011 ஆம் ஆண்டு காவல் துறையில் இணைந்தார். அவருடைய சகோதரர்களில் ஒருவரும் காவல் துறையில்தான் பணியாற்றுகிறார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்தநாக் பகுதியில் உள்ள பராரி அங்கனை சேர்ந்தவர் பாபர். முஸ்தாக் வடக்கு காஷ்மீரில் உள்ள கர்னா பகுதியை சேர்ந்தவர்.

நாங்கள் பாபரின் வீட்டிற்குள் நுழைந்தபோது, மொத்த சூழலும் குழப்பமாக இருப்பதை கண்டோம்.

கண்ணீர்... கண்ணீர்... எங்கும் கண்ணீர்

"என் ரோஜாவை கொன்றது யார்? நானும் உங்களுடன் வருகிறேன்" என்று அழுதுக் கொண்டு இருந்தார் பாபரின் மனைவி ஷகிலா.

ஷகீலா தனது கணவரை கடைசியாக பார்த்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை.

பட மூலாதாரம், J&K POLICE

"செவ்வாய்கிழமை காலை என்னுடன் பாபர் பேசினார். மகளுடன் பேச வேண்டும் என்றார். நான் தொலைப்பேசியை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அன்று இரவு பத்து மணிக்கு அவரை அழைத்த போது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது." என்கிறார் ஷகீலா.

அழுதப்படியே ஷகீலா வரிசையாக கேள்விகளை அடுக்க தொடங்கினார்.

ஏன் போலீஸ் ஆயுதம் எதுவும் இல்லாமல் அங்கு இருந்தார்கள். ஆயுததாரிகள் அங்கு இருக்கிறார்கள் என்று தெரியும்தானே... ஏன் உயர் அதிகாரிகள் இரண்டு பேரை மட்டும் அங்கு அனுப்பினார்கள்? நான் அதிகாரிகளிடம் இது குறித்து கேட்பேன் என்கிறார்.

இதன்பின் ஷகீலா நம்முடன் பேச மறுத்துவிட்டார். அழுதபடியே தன் மகளை இறுக அணைத்துக் கொண்டார்.

பட மூலாதாரம், majid jahangir/bbc

பாபருக்கு இரண்டு மகள்கள். ஒருவருக்கு மூன்று வயது. இன்னொரு குழந்தைக்கு ஒரு வயது. வீடெங்கும் அழுகுரல் எதிரொலிக்கிறது.

பாபரின் மூத்த சகோதரர் மன்சூர் அஹமத், என் தம்பியின் உடல் இந்த நிலையில் வீடு வந்து சேரும் என்று நாங்கள் என்றுமே நினைத்து பார்த்ததில்லை என்கிறார்.

மன்சூர், "முதல்வர் ஏதாவது செய்ய வேண்டும். ஆயுததாரிகளும் முஸ்லிம்கள்தான். காவலர்களும் முஸ்லிம்தான். இருதரப்பிலும் முஸ்லிம்கள்தான் இறக்கிறார்கள்" என்கிறார்.

இரண்டு தரப்பிலும் காஷ்மீர் சகோதரர்கள் இறக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் இது குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கிறது என்கிறார் பாபரின் உறவினர் சபீர் அஹமத் கான்.

எத்தனை நாட்களுக்கு?

"இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடங்கும் வரை, நாங்கள் இப்படித்தான் சாக வேண்டும்... எத்தனை நாட்களுக்கு இதனை சகித்துக் கொள்வது." என்கிறார் பாபரின் உறவினரான அப்துல் ரஷீத்.

பட மூலாதாரம், majid jahangir/bbc

மேலும் அவர், "வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட வாழ்வாதார பிரச்சனைகள் ஏராளமாக இங்கு இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டியது அரசின் கடமை"

எந்தப் பக்கம் நாங்கள் திரும்பினாலும் சவக் குழிகள்தான் உள்ளன. இந்த ரத்த சகதியில் நாங்கள் எத்தனை நாட்கள் உழல்வது? என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

ஆயுததாரிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் சிறப்பு படை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியவுடன், தொடர்ந்து அவர்களது தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தக் கிராமத்தை சேர்ந்த வயதான ஒருவர்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் டஜன் கணக்கான ஜம்மு காஷ்மீர் காவலர்கள் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: