தமிழ்த் திரையுலகம்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் வெளியான திரைப்படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில், பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். மேலும் மிக அதிகமாக உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தைக் குறைக்கக் கோரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நெருக்கடியில் தமிழ்த் திரையுலகம்

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் வெளியான திரைப்படங்கள் எதுவும் ஹிட் ஆகாத நிலையில், பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். மேலும் மிக அதிகமாக உள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தைக் குறைக்கக் கோரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வருடத்திற்கு 95 முதல் 110 படங்கள் வரை வெளியாகிவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, வருடத்திற்கு 200 தமிழ்த் திரைப்படங்களாவது வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதில் குறைந்த பட்ஜெட் படங்களும் அடங்கும். இதன் மூலம் இரண்டாயிரம் கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறுகிறது. அதில், திரையரங்குகள் மூலமாக 1,500 கோடியும், திரையரங்கு அல்லாத தொலைக்காட்சி உரிமம், வெளிநாட்டு உரிமம், டிஜிட்டல் உரிமங்கள் மூலமாக சுமார் 500 கோடியும் வர்த்தகம் நடக்கிறது.

திரையரங்குகளின் கட்டணம் போதுமானதாக இல்லையென்று கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், லாபம் தரும் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே செல்கிறது. அதுவும் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் 90 சதவீதப் படங்கள் தோல்வியடைந்துள்ளன. "இதனால் அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து, 80 சதவீத தயாரிப்பாளர்கள் சினிமா துறையைவிட்டு வெளியேறிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்கிறார் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு. இத்தனைக்கும் விமர்சகர்களாலும் பொதுமக்களாலும் நல்ல படங்கள் என்று கூறப்பட்ட படங்கள்கூட இழப்பையே சந்தித்துள்ளன.

திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது இதற்குக் காரணமா? இல்லை என்பதுதான் இதற்குப் பதில். ஆனால், அவர்கள் திரைப்படம் பார்க்கும் முறை மாறியுள்ளது. அதாவது திரையரங்கிற்கு வராமல் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை பார்ப்பது வெகுவாக அதிகரித்துள்ளது. திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

டிஜிட்டல் முறையில் வாயிலாக திரைப்டங்கள் பார்ப்பதிலும் 30 சதவீதம் பேர் மட்டுமே சட்ட ரீதியான வழிமுறையில் திரைப்படங்களைப் பார்ப்பதாகவும் மீதமுள்ள 70 வது சதவீத ரசிகர்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரசி இணையதளங்களின் வாயிலாக பார்ப்பதாகவும் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் அரசிற்கும் பெரும் வரி இழப்பு ஏற்படுவதை திரையுலகினர் சுட்டிக்காட்டுகின்றனர். 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் தமிழ் சினிமாவில் ஜி.எஸ்.டி அறிமுகம் செய்வதற்கு முன்பு சுமார் 150 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி க்கு பிறகு சுமார் 300 கோடி ரூபாய்வரை வருமானம் வர வாய்ப்பு உள்ளது.

"இம்மாதிரியான சூழலில் மத்திய - மாநில அரசுகள் சினிமா தொழிலின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும். திருட்டுத்தனமாக படங்கள் பார்க்கப்படுவதைத் தடுக்க அவர்கள் உதவ வேண்டும்" என்கிறார் எஸ்.ஆர். பிரபு.

படக்குறிப்பு,

எஸ்.ஆர். பிரபு.

திரையுலகில் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை, திரையரங்குகளில் உண்மையிலேயே எவ்வளவு வசூலானது என்பதற்கு சரியான கணக்கு இல்லாதது. திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை முழுவதும் ஆன்லைன் முறைக்கு மாற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய முடியுமென தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். "இதன் மூலம் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு வசூலானது என்ற விவரம் சரியாகத் தெரியவரும். அதனால், அரசுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பலன்கிடைக்கும்" என்கிறார் எஸ்.ஆர். பிரபு.

"இந்த வருடத்தின் எந்த படமும் லாபம் தரவில்லை"

தற்போது டிக்கெட் விற்பனையில் வெளிப்படை தன்மை இல்லாததால் பல முறைகேடுகள் நடக்கின்றன; கறுப்புப் பணப் புழக்கமும் அதிகரிக்கிறது என்கிறார் எஸ்.ஆர். பிரபு.

மேலும் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டபின் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் 30 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறார்.

தயாரிப்பாளர்களைப் போலவே திரையரங்க உரிமையாளர்களும் தாங்கள் சமீப காலமாக பெரும் இழப்பைச் சந்தித்துவருவதாகவே கூறுகின்றனர். திருச்சியைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதரிடம் இது குறித்துக் கேட்டபோது, "இந்த ஆண்டு வெளியான படங்களில் எந்த படமும் எங்களுக்கு லாபத்தை கொடுக்கவில்லை கடுமையான நஷ்டத்தைதான் சந்திக்க நேரிட்டது" என்று தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 75% குறைந்துவிட்டது என்றும் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீதர்.

இப்போதைய நிலையில் தமிழ் சினிமாவில், ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் ஆகிய நான்கு பேரின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. இவர்களது படங்களுக்கு மட்டுமே நல்ல 'ஓபனிங்' இருக்கிறது. அவர்களும்கூட, இதைத் தக்க வைக்க வேண்டுமானால் நல்ல கதையோடு கூடிய படங்களை மட்டுமே தேர்வுசெய்து நடிக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள சரிவு பற்ற சினிமா விமர்சகர் ஜாக்கி சேகரிடம் கேட்டபோது, "தமிழ் சினிமா எளிமையாக இருக்கும்போது ரசிகர்கள் அதிகமாக திரையரங்கிற்கு வந்தனர். திரைப்படம் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் இன்று டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. ஒரு டிக்கெட்டிற்கு 200 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இது தவிர திண்பண்டம், பார்க்கிங் கட்டணம் என எக்கசக்க செலவு இருக்கின்றது. இதனால் நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் திரைப்படத்திற்கு வந்தால் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பர்களின் எண்ணிக்கை குறைகிறது" என்கிறார்.

படக்குறிப்பு,

ஜாக்கி சேகர்

மேலும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியும் சினிமா குறித்த பார்வையை மாற்றியுள்ளது என்கிறார் ஜாக்கி சேகர். "முன்பெல்லாம் சினிமா விமர்சனம் குறைவாக இருந்தது. அதுவும் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகே பத்திரிகைகளில் விமர்சனம் வெளியாகும். ஆனால் இன்று டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக திரைப்படத்தை பார்த்துகொண்டு இருக்கும்போதே ஹேஷ் டேக் மூலாமாக விமர்சனத்தை பதிவிடுகின்றனர். படம் மோசமாக இருக்கும் எனத் தெரிந்துவிட்டால், யாரும் திரையரங்கிற்குச் செல்வதில்லை." என்கிறார் அவர்.

"பார்க்கிங் கட்டணங்கள் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும்"

எனவே டிக்கெட் விலையையும் பார்க்கிங், திண்பண்டங்கள் விலைகளையும் குறைக்காமல் திரையரங்கிற்கு அதிக ரசிகர்களை எதிர்பார்க்க முடியாது என்கிறார் ஜாக்கி சேகர். இத்தனைக்கும் பார்க்கிங் கட்டணங்களை வரைமுறைப்படுத்தி அரசு உத்தரவுகளை வெளியிட்டுவிட்ட போதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய திரையரங்குகளைத் தவிர பிற திரையரங்குகள் இதை கடைப்பிடிப்பதில்லை. 30 ரூபாய் முதல் 100 ரூபாய்வரைகூட இருசக்கர வாகனங்களுக்கு இப்போதும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையில், டிஜிட்டல் முறையில் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு அந்த தொழில்நுட்பத்தை வைத்துள்ள யுஎஃப்ஓ, க்யூப் போன்றவை இதற்கென அதிக கட்டணங்களை வசூலிப்பது தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக சொல்லியிருக்கும் தயாரிப்பாளர்கள், இந்தக் கட்டணங்களைக் குறைக்காவிட்டால் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்று கூறியிருக்கின்றனர். டிஜிட்டல் புரொஜக்ஷன் நிறுவனங்களுடன் தற்போது தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்றுவருகிறது.

தீபாவளிக்கு முன்பாகத்தான் ஒரு வேலை நிறுத்தத்தை எதிர்கொண்ட திரையுலகம் தற்போது மீண்டும் ஒரு போராட்டத்தை எதிர்கொள்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: