'இளைஞர்களே! வாய்ப்பை தேடவேண்டாம்; பிரச்சனையை தேடுங்கள்' - பேட்மேன் முருகானந்தம்

பேட்மேன் முருகானந்தம்

''சேனிடரி நேப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கும் பணியில் நான் ஈடுபட்டபோது, ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். நான் பைத்தியமாகிவிட்டேன் என்றே பலரும் கருதினர்'' என்று தனது ஆரம்பகால போராட்டங்கள் குறித்து பிபிசி தமிழிடம் அருணாச்சலம் முருகானந்தம் நினைவுகூர்ந்தார்.

மலிவு விலையில் சேனிடரி நேப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சாதனையை தழுவி எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம் 'பேட்மேன்' இன்று (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், PIB

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் நோக்கம் குறித்தும், தனது கண்டுபிடிப்பு குறித்தும் அவர் பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''மாதவிடாய் குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை நாங்கள் 18 ஆண்டுகளாக செய்து வந்தோம். இதுவரை நாங்கள் செய்த பணிகளுக்கு பேட்மேன் திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமையும்'' என்று முருகானந்தம் நம்பிக்கை தெரிவித்தார்.

பட மூலாதாரம், AMIT VIRMANI

படக்குறிப்பு,

அருணாச்சலம் முருகானந்தம்

குறைந்தது 100 மில்லியன் பெண்களுக்காவது மாதவிடாய் காலத்தில் தூய்மையாக இருப்பது தொடர்பான புரிதலை இந்த திரைப்படம் ஏற்படுத்தும் என்று உறுதிபட கூறிய முருகானந்தம், தனது வாழ்க்கை போராட்டம் மற்றும் தனது கண்டுபிடிப்பு ஆகிய இரண்டையும் கலந்தே பேட்மேன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

''பல நூற்றாண்டுகளாக மாதவிடாய் குறித்தும் அக்காலகட்டத்தில் தூய்மையாக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேச தயங்கினர். உலக அளவிலேகூட இம்மாதிரியான திரைப்படம் இதுவரை எடுக்கப்பட்டதில்லை'' என்று அவர் கூறினார்.

''பேட்மேன் திரைப்படம் முழுவதிலுமே மாதவிடாய் தொடர்பான புரிதலை எடுத்துரைக்கும் காட்சிகளும், கருத்துகளும் இடம்பெற்றுள்ளன'' என முருகானந்தம் தெரிவித்தார்.

பேட்மேன் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்துக்கு வட இந்திய பெயர் வைக்கப்பட்டது என்று கேட்டபோது ''தென்னிந்தியா ஏற்கனவே முன்னேறிய பகுதி. அதனால் இது குறித்த புரிதல் அதிகம் தேவைப்படும் மத்திய இந்தியாவை கதைக்களமாக கொண்டு படம் எடுக்கப்பட்டது. அதனால் பிரதான கதாபாத்திரத்துக்கு வட இந்திய பெயர் வைக்கப்பட்டது'' என்று முருகானந்தம் பதிலளித்தார்.

பட மூலாதாரம், PADMAN

முருகானந்தம் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும் ஏன் இந்த திரைப்படம் முதலில் தமிழில் எடுக்கப்படவில்லை என்று கேட்டதற்கு ''தமிழ் திரையுலகில் இருந்து பலரும் என்னை அணுகியுள்ளனர். இது உலக அளவில் உள்ள பிரச்சனை என்பதால், நான் ஆரம்பத்தில் ஹாலிவுட்டில்தான் இந்த திரைப்படம் வெளிவர வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன்'' என்று கூறினார்.

இனி தமிழிலும், மற்ற மொழிகளிலும் அந்தந்த மாநில நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டு இந்த திரைப்படம் புதிதாக வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பேட்மேன் திரைப்படம்

''மாதவிடாய் குறித்து பேசினால் பெண்கள்கூட விலகி ஓடுகின்றனர்''

''முருகானந்தம் என்ற தனி நபரின் முயற்சி மட்டுமே இந்த கண்டுபிடிப்புக்கு காரணம்.'' என்று தனது சாதனைக்கு பின்னர் இருந்தது யார் என்று கேட்டதற்கு பதிலாக கூறினார்.

மாதவிடாய் மற்றும் சேனிடரி நேப்கின் ஆகியவை குறித்து பேச பெண்கள்கூட தயங்கினர். இது பற்றி பேச ஆரம்பித்தவுடனே அந்த இடத்தில் இருந்து விலகி விடுகின்றனர் என முருகானந்தம் குறிப்பிட்டார்.

முதலில் கட்டுரை வெளியிட்டது பிபிசிதான்

''வெளிநாட்டில்தான் எனது கண்டுபிடிப்புக்கு முதலில் அங்கீகாரம் கிடைத்தது. பிபிசிதான் எனது கண்டுபிடிப்பு குறித்து முதலில் கட்டுரை வெளியிட்டது. அதன் பிறகு மற்ற வெளி நாட்டு ஊடகங்கள் இது குறித்து எழுத ஆரம்பித்தனர் அதன்பின்னரே உள்ளூர் பத்திரிக்கைகளுக்கு இது குறித்து தெரிய வந்துள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Arunachalam Muruganantham Facebook

பணமே பிரதானமாக இருக்கக்கூடாது

தனது கண்டுபிடிப்பு குறித்த பிரசாரத்தில் உதவிசெய்யும் விதமாக டிவிடி மூலம் இந்த திரைப்படத்தை கிராமம், கிராமமாக காண்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

''இளைஞர்கள் தங்கள் கல்வியை பிழைப்புக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடாது. பணமே பிரதானமாக இருப்பது சரியல்ல. சொந்த தொழில் செய்ய முனையும் இளைஞர்கள் முதலில் வாய்ப்பை தேடாமல் பிரச்சனையை தேடவேண்டும். பின்னர், அது வாய்ப்பை உருவாக்கும்'' என புதிய தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு முருகானந்தம் ஆலோசனை அளித்தார்.

பட மூலாதாரம், Arunachalam Muruganantham Facebook

சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை இனம்கண்டு அதற்கு தீர்வு காணும் நோக்கில் இவர்களின் தொழில் அமைய வேண்டும் என்று கூறிய அவர், ''சிரமப்பட்டு கல் உடைப்பவர்களுக்கு, தண்ணீர் சுமந்து செல்லும் பெண்களுக்கு என சமூகத்தில் சிரமப்படுபவர்களுக்கு உதவியாக கருவிகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று விருப்பம் தெரிவித்தார்.

''பெண்கள் கூச்ச மனப்பான்மையை கைவிடவேண்டும். மாதவிடாய் காலகட்டத்தில் சுகாதாரமாக இருக்க வேண்டும். மாதவிடாய் தொடர்பான முறையான சுகாதார பழக்கங்களை கையாளாமல் இருந்தால் மருத்துவர்களுக்கு பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டும். முறையான சுகாதார பயிற்சிகளை கடைப்பிடித்தால்தான் ஆரோக்கியமான தாயாகவும், பெண்ணாகவும் இருக்கமுடியும்'' என்று முருகானந்தம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: