ஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா

1988 நவம்பர் மூன்றாம் தேதியன்று மாலத்தீவுகள் அதிபர் மெளமூன் அப்துல் கயூம் இந்தியப் பயணம் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அவரை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து கிளம்பிய இந்திய விமானம் பாதி தொலைவு சென்றுவிட்டது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி திடீரென்று தேர்தல் தொடர்பாக டெல்லியில் இருந்து வெளியூர் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய ராணுவம்

கயூமிடம் பேசிய ராஜீவ் காந்தி அவரது பயணத்தை ஒத்திப்போட முடியுமா என்று கேட்டார். ஆனால் கயூமை எதிரியாக நினைத்த மாலத்தீவின் தொழிலதிபர் அப்துல்லா லுதூஃபீ மற்றும் அவருக்கு நெருக்கமான சிக்கா அஹ்மத் இஸ்மாயில் மாணிக் ஆகியோர் கயூமை நாட்டை விட்டு துரத்த திட்டமிட்டனர்.

கயூம் மாலத்தீவில் இல்லாதபோது அதற்கான திட்டங்களை செயல்படுத்த முன்னதாக அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் இலங்கையின் தீவிரவாத அமைப்பான `ப்ளோட்` ஐ (PLOTE - People's Liberation Organization of Tamil Eelam) சேர்ந்தவர்களை பயணிகள் வேடத்தில் படகில் அனுப்பியிருந்தார்கள்.

அப்போது மாலத்தீவுக்கான இந்தியத் தூதராக இருந்த பேனர்ஜியும், கயூமின் டெல்லி வருகை தொடர்பாக டெல்லிக்கு வந்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மெளமூன் அப்துல் கயூம்

ராணுவம் அனுப்ப இந்தியாவிடம் கோரிக்கை

ஏ.கே பேனர்ஜி நினைவுகூர்கிறார், 'டெல்லியில் உள்ள எனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். காலை ஆறரை மணிக்கு ஒலித்த தொலைபேசி மணி ஓசையினால் தூக்கத்தில் இருந்து எழுந்தேன்'.

அவர் மேலும் சொல்கிறார், 'மாலியில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிந்துக் கொண்டேன். அங்குள்ள வீதிகளில் மக்கள் துப்பாக்கியும் கையுமாக சுற்றுகிறார்கள், அதிபர் கயூம் பத்திரமான இடத்தில் பதுங்கியிருக்கிறார்; ராணுவத்தை அனுப்ப இந்தியாவிடம் அவர் கோரிக்கை வைத்திருப்பதும் தெரியவந்தது.'

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்த குல்தீப் சஹ்தேவுக்கு மாலத்தீவுகளின் இந்திய தூதரகத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டது என்று அந்த நாள் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார் ஏ.கே பேனர்ஜி.

இந்தத்தகவல் உடனடியாக பிரதமரின் செயலர் ரோனேன் சேனுக்கு கொடுக்கப்பட்டது. பிறகு, செளத் பிளாக்கில் இருக்கும் ராணுவ நடவடிக்கை அறையில் உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் கொல்கத்தாவில் இருந்து திரும்பி வந்த பிரதமர் ராஜீவ் காந்தியும் கலந்துக்கொண்டார்.

இந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கை

இந்தியன் எக்ஸ்பிரசின் இணை ஆசிரியர் சுஷாந்த் சிங் எழுதிய 'Mission Overseas: Daring Operations By the Indian Military' என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'ராஜீவ் காந்தி, குல்தீப் சஹ்தேவ், ரோனென் சென் ஆகிய மூவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். 'தேசிய பாதுகாப்புக் காவலர்கள்' குழுவை அனுப்பும் திட்டத்தை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பி.சிதம்பரம் முன்வைத்தார், ஆனால் ராணுவம் அதை ஏற்கவில்லை."

மேலும், 'ஹுல்ஹுலே விமான நிலையத்தை நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்பு 'ரா'வின் தலைவர் ஆனந்த் ஸ்வரூப் வர்மா தெரிவித்தார். அவரை அமைதியாக இருக்குமாறு ரோனன் சென் சொன்னார். உண்மையில், மாலத்தீவுகளில் என்ன நடந்தது என்ற செய்தி ரோனன் சென்னுக்கு நன்றாகவே தெரியும்.'

படத்தின் காப்புரிமை Getty Images

தொலைபேசி ஏன் ஒழுங்காக வைக்கப்படவில்லை?

சுஷாந்த் சிங் இவ்வாறு கூறுகிறார், 'மாலத்தீவின் வெளியுறவுச் செயலர் ஜகி, இந்தியப் பிரதமரின் இல்லத்திற்கே நேரடியாக தொலைபேசி செய்தார். போனை எடுத்த சென்னிடம் கிளச்சியாளர்கள் தனது வீட்டிற்கு எதிரேயே இருக்கும் தொலைபேசி அலுவலகத்தை கைப்பற்றிவிட்ட தகவலை ஜகி தெரிவித்தார்'.

உடனே அவருக்கு சமயோசிதமான யோசனையை வழங்கிய சென், 'தொலைபேசி ரிசீவரை அதன் இடத்தில் வைக்கவேண்டாம், அப்படி வைத்தால் தொலைபேசி அலுவலகத்தில் சுவிட்ச் போர்டில் தெரியும் ஒளி சமிக்ஞையின் மூலம் கிளர்ச்சியாளர்கள் அவர் யாரிடம் பேசினார் என்பதை அறிந்துகொள்வார்கள்' என்று சொன்னார்.

எனவே முழு நடவடிக்கையும் முடியும்வரை அடுத்த 18 மணி நேரத்திற்கு ஜகியின் தொலைபேசி ரிசீவர் அதற்கு உரிய இடத்தில் வைக்கப்படவில்லை.

ஆக்ராவின் 50-ஆவது பாரா பிரிகேட் படை வீரர்கள், பாரசூட் மூலம் மாலியில் இறங்கவேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் இறங்குவது எங்கே என்ற குழப்பம் ஏற்பட்டது. 12 கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிய மைதானம் இருந்தால்தான் அவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும். ஆனால், சிறிய தீவுகளை கொண்ட மாலத்தீவுகளில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்காது. பிறகு தரையிறங்குவதில் ஏதாவது பிழை ஏற்பட்டால் என்ன ஆகும்? பாராசூட் வீரர்கள் கடலில் மூழ்கி இறக்க நேரிடும். எனவே இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மாலத் தீவு

மாலத்தீவின் பெயரே கேள்விப்படாத பிரிகேடியர்

ஹுல்ஹுலே விமான நிலையத்தின் நீளம் எவ்வளவு என்பது அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட எவருக்கும் சரியாக தெரியவில்லை. எனவே இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் பேசி, மாலத்தீவுக்கு விமானம் ஓட்டிய அனுபவம் உள்ள பைலட்களிடம் இருந்து தகவல் தெரிந்து கொள்ளுமாறு ராஜீவ் காந்தி ரோனேன் சென்னிடம் அறிவுறுத்தினார்.

கூட்டத்திற்கு பின்னர் ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனரல் ரோட்ரிக்ஸ், பிரிகேடியர் ஃபாருக் புல் புல்சாராவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பல்சாரா அதுவரை மாலத்தீவு என்ற பெயரையே கேள்விப்பட்ட்தில்லை.

அவரது உதவியாளர் நூலகத்திலிருந்து அட்லஸ் ஒன்றை கொண்டுவந்தார். இந்தியாவின் தெற்கே 700 கிமீ தொலைவில் இருக்கும் 1200 தீவுகளின் கூட்டமே மாலத்தீவுகள் என்று அவர் அறிந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹுல்ஹுலே விமான நிலையம்

போதுமான தயார் நிலையில் இல்லாத இந்திய ராணுவம்

புல்சாரா, இரண்டு அதிகாரிகளை ஆக்ரா சுற்றுலா மையத்திற்கு அனுப்பி, மாலத்தீவுகளைப் பற்றிய தகவல்களை திரட்டச் சொன்னார். அதற்குள் பிரிகேடியர் வி.பி.மலிக் (பின்னாள் ராணுவத் தளபதி) மாலத்தீவுக்கான இந்திய ஹை கமிஷனர் ஏ.கே. பேனர்ஜியை ராணுவ விமானத்தின் மூலம் அழைத்துக் கொண்டு ஆக்ரா வந்து சேர்ந்தார்.

ஏ.கே பேனர்ஜி சொல்கிறார், 'நான் ஆபரேஷன் அறைக்கு சென்றபோது, மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்தது விமான நிலையத்தின் வரைபடம். அது ஹுல்ஹுல் விமான நிலைய வரைபடம் என்று தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருந்தது. மாலேயில் இருந்து 300 கி.மீ தொலைவில் இருக்கும் கான் விமானநிலையத்தின் வரைபடம் அது. அதைப் பார்த்ததுமே தவறான வரைபடம் என்று உரக்க கத்திவிட்டேன். இந்த நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக இல்லை என்பதையே இது உணர்த்தியது.'

சுஷாந்த் சிங்கின் கருத்துப்படி, 'புல்சாராவின் திட்டத்தின்படி, கிளர்ச்சியாளர்கள் ஹுல்ஹுலே விமான நிலையத்தை கைப்பற்றாமல் இருந்தால், அங்கு விமானம் தரையிறங்கலாம். ஆனால் அப்படி இல்லாவிட்டால், விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பாரசூட் வீரர்களும், புல்சாராவும் அங்கு இறங்குவார்கள். அப்போது மாலத்தீவுகளை பற்றி நன்கு அறிந்திருக்கும் பேனர்ஜியையும் அழைத்துச் சென்றால் உதவியாக இருக்கும் என்று புல்சாரா கருதினார்.'

படத்தின் காப்புரிமை Getty Images

மாலத்தீவு செல்வதற்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார் பேனர்ஜி

முதலில் தான் வரமாட்டேன் என்று மறுத்த பேனர்ஜி, பிறகு இரண்டு நிபந்தனைகளின் பேரில் வருவதாக ஒப்புக்கொண்டார். முதலில் 'வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி வாங்கவேண்டும், அடுத்து, சவரக் கத்தி ஒன்று வேண்டும்'. முகச்சவரம் செய்யாமல் வெளியே கிளம்பும் பழக்கம் இல்லை என்று அவர் சொன்னார்.

முதல் நிபந்தனைக்கு உடனே அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால் இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்ற இரவு நேரத்தில் ராணுவ கேண்டீனை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு முகச்சவரக் கத்தி, பற்பசை, உட்பட அவருக்கு தேவையான பொருட்கள் எடுக்கப்பட்டன.

வெளியுறவு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது ராணுவ வரலாற்றில் முதல்முறையாக நடந்தேறியது. ஆக்ராவில் இருந்து பாராசூட் வீரர்கள் நடவடிக்கைக்கு கிளம்பிய சில நிமிடங்களில் பிரிகேடியர் புல்சாரா தூங்கிவிட்டார்.

முக்கியமான நடவடிக்கைக்கு முன்னர் ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்று அவரது பயிற்சி காலத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டதை அவர் கடைபிடித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பற்றி முதலில் செய்தி வெளியிட்ட பிபிசி

அந்த விமானத்தில் பயணித்த லெஃப்டினெண்ட் ஜென்ரல் வினோத் பாட்டியா சொல்கிறார், 'இந்திய எல்லைக்கு வெளியே சென்றதும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் எங்களை கண்டுகொண்டது. நாங்கள் எங்கு செல்கிறோம் என்ற செய்தியை அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால்தான் பிபிசி தனது ஏழு மணி செய்தியிலேயே இந்திய ராணுவம் மாலத்தீவு அதிபரை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டது என்று நினைக்கிறேன்.'

ஹுல்ஹுலே விமான நிலையத்தில் ஐ.எல்.76 விமானம் தரையிறங்கியதும் இந்திய ராணுவத்தினர் துரிதமாக செயல்பட்டது. 150 இந்திய வீரர்களும், ஜீப்புகளை எடுத்துக்கொண்டு துரிதமாக வெளியே வந்துவிட்டார்கள். சற்று நேரத்தில் இரண்டாவது விமானமும் தரையிறங்கியது. பிரிகேடியர் புல்சாரா அதிபர் கயூம் மறைந்திருந்த ரகசிய இடத்திற்கு ரேடியோ மூலம் தொடர்புகொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மாலத்தீவுகளில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது

'மிஸ்டர் பிரெசிடெண்ட் நாங்கள் வந்துவிட்டோம்'

சுஷாந்த் சிங் கூறுகிறார், "முடிந்த அளவு விரைவாக வரவேண்டும் என்று புல்சாராவிடம் கோரிய கயூம், கிளர்ச்சியாளர்கள் தான் மறைந்திருக்கும் வீட்டைச் சுற்றி வளைத்துள்ளதாகவும், அருகில் துப்பாக்கிச் சத்தம் கேட்பதாகவும் கூறினார்.

அவருக்கு பதிலளித்த புல்சாரா "நாங்கள் வந்துவிட்டோம் மிஸ்டர் பிரெசிடெண்ட், உங்களை பாதுகாப்பாக வெளிகொண்டு வருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். உங்களிடம் வருவதைத் தடுக்கவேண்டாம் என்று பாதுகாப்பு படைகளிடம் சொல்லி வையுங்கள்" என்று கூறினார்.

இந்திய ராணுவம் அதிபரின் மறைவிடத்தை அடைந்தபோது, கடுமையான துப்பாக்கி சூடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரிடம் கயூம் இந்திய ராணுவத்தின் செய்தியை அனுப்ப முடியவில்லை.

கயூமிற்கு பாதுகாப்பு வழங்க வந்த இந்திய ராணுவத்தை, கயூமின் பாதுகாப்பு அதிகாரிகளே தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க புல்சாரா உத்தரவிடும் முடிவுக்கு வந்தார்.

அதற்குள் அவர்களே வழிவிட்டு விலகினார்கள். அதிகாலை 2.10க்கு கயூமை அடைந்த இந்திய ராணுவத்தினர் அவரை ஹுல்ஹுலே விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அங்கு வர மறுத்த அவர், தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைமையகத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராஜீவ் காந்தி

அதிகாலை நான்கு மணிக்கு ராஜீவ் காந்தியுடன் பேசினார் கயூம்

அதிகாலை 3.15 மணிக்கு புல்சாராவும், ஏ.கே பேனர்ஜியும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைமையகத்திற்கு சென்றபோது அங்கு கிளர்ச்சியாளர்களின் சடலங்களும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களும் நாலாப்புறமும் சிதறிக்கிடந்ததை கண்டார்கள்.

தலைமையகத்தை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளின் தீவிரத்தை உணரவைக்கும் காட்சியாக அது இருந்ததாக கூறுகிறார் பேனர்ஜி. 'கயூம் ஆடிப்போயிருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால் அவர் கட்டுப்பாட்டில் இருந்தார். எங்களை பார்த்ததும் மகிழ்ந்துபோன அவர், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பேச விரும்புவதாக தெரிவித்தார்'.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மாலத்தீவுகளின் முன்னாள் அதிபர் நஷீத்

சரியாக காலை நான்கு மணிக்கு அவர் ராஜீவ் காந்தியுடன் தொலைபேசியில் பேசினார்.

அந்த நிமிடம் தனது நினைவில் பசுமையாக பதிந்திருப்பதாக பகிர்ந்துக் கொள்ளும் ரோனன் சென், 'அப்போது ராஜீவ் காந்தி தனது கணினியின் முன் உட்கார்ந்து வழக்கம்போல் ஒரு கையால் தட்டச்சு செய்து கொண்டிருந்தார், அதிபர் கயூமிடம் பேசிய பிறகே ராஜீவ் தூங்கச் சென்றார்'.

ரோனென் சென் ராஜீவின் அலுவலகத்தில் இருந்து வெளியேறும்போது, ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சரிடம் வாழ்த்து தெரிவிக்கச் சொன்னார்.

ஆனால் பிறகு அவர் புன்சிரிப்புடன் இவ்வாறு சொன்னார், 'பரவாயில்லை, இப்போது வேண்டாம், அவர் உறங்கிக் கொண்டிருப்பார், அவரை தொந்தரவு செய்யவேண்டாம்'.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: