மீனாட்சியம்மன் கோவில்: கடைகள் அகற்றம்; செல்போன் கொண்டு செல்லத் தடை

மீனாட்சி அம்மன் கோவில்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வீர வசந்தராயர் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டன. கோவிலுக்குள் பொதுமக்கள் தங்கள் செல்போன்களைக் கொண்டுசெல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு பத்து மணி அளவில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் கிழக்குக் கோபுரத்தின் அடியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் இருந்த கடைகளில் இருந்து இந்த தீ ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 36 கடைகள் சேதமடைந்தன.

வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், இங்கு உள்ள கடைகளை அகற்றக்கூடாது என கடை வைத்திருப்பவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த விவகாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்த கோவில் நிர்வாகம், தாங்கள் கடைகளை அகற்றவே விரும்புவதாகக் கூறியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 12 மணிக்குள் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று காலையில், வீர வசந்தராயர் மண்படத்தில் உள்ள சுமார் 60 கடைகளில் தீ விபத்தால் எரிந்துபோன கடைகளைத் தவிர்த்த பிற கடைகளின் பொருட்கள் அகற்றப்பட்டன. கடைக்காரர்கள் தாங்களாகவே பொருட்களை அகற்றாத நிலையில், கோவில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அதிகாரபூர்வமாக 115 கடைகள் கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி செயல்பட்டுவருகின்றன. தீ விபத்திற்குப் பிறகு இந்தக் கடைகள் அனைத்தையுமே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையில், சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட 12 உறுப்பினர் குழு இந்த விபத்தால் கோவிலுக்கு ஏற்பட்ட சேதத்தை வியாழக்கிழமையன்று பார்வையிட்டது. இந்த விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும் அதனை ஒட்டியுள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு எந்த சேதமும் இல்லையென்றும் அந்தக் குழு தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கோவிலின் பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் தவிர பிறர் செல்போன்களைக் கொண்டுசெல்ல நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அடங்கிய அமர்வு தடை விதித்து உத்தரவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :