திருமண உறவில் பாலியல்: என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்? ஒரு பெண்ணின் வலி #HerChoice

என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்?

திருமணமான பெண் ஒருத்தி உறவின்போது வல்லுறவுக்கு ஆளாவது போல் உணர்ந்தால் என்ன செய்வாள்? எல்லாவற்றையும் அவள் கணவன் கட்டுப்படுத்த நினைத்தால் என்னவாகும்? நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மை கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்.

அந்த இரவு கடந்து போகாததுபோல தோனிச்சு; தலைவலியில நான் துடிச்சுபோனேன்; என்னால அழுகையை நிறுத்த முடியல.

நான் எப்போ தூங்கினேன்னு எனக்கே தெரியல. நான் திடீரென கண் முழிச்சப்போ என் கணவர் முந்தைய இரவு என்கிட்ட கேட்ட கேள்வியோட என் படுக்கை பக்கத்துல வந்து நின்னாரு.

''நீ என்ன முடிவு பன்னிருக்க? சரின்னு சொல்லபோறியா இல்லன்னு மறுக்கப்போறியா?'' என்று என்கிட்ட கேட்டாரு.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. பேசுவதற்கு கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு, '' நீங்கள் ஆபிஸ் போங்க. நான் சத்தியமா சாயங்காலம் உங்களுக்கு ஃபோன் செஞ்சு என் பதில சொல்றேன்'' என்று நான் பயத்தோட முணுமுணுத்தேன்.

''நானே உனக்கு சாயங்காலம் நான்கு மணிக்கு ஃபோன் பண்ணுவேன். எனக்கு பதில் வேணும். நீ சரின்னு சொல்ற பதில் தான் எனக்கு வேணும். அப்படி இல்லைனா தண்டனை வாங்கிக்க தயாரா இரு'' என்று என்னை மிரட்டினார்.

தண்டனைன்னு அவர் சொன்னது ஆசனவாய்வழி புணர்ச்சியைத்தான். அது எனக்கு மிகப்பெரிய வலிய கொடுக்கும்ன்னு அவருக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சிருந்தும் என்னை சித்திரவதை படுத்தும் ஒரு கருவியாகவே அதை அவர் பயன்படுத்தினார்.

அன்று அவரும் அவருடைய அக்காவும் ஆபிஸுக்கு கிளம்பிட்டாங்க. அப்போ நான் மட்டும் தனியா என்னோட எண்ணங்களுடன் போராடிக்கொண்டிருந்தேன்.

சில மணி நேரங்களுக்கு அப்புறம் என்னோட அப்பாவுக்கு ஃபோன் பண்ண எனக்கு தைரியம் வந்துச்சு. என் கணவரோட நான் இதுக்கு மேலயும் வாழ முடியாதுன்னு அவர்கிட்ட சொன்னேன்.

என்னோட அப்பா கோபப்படுவாருன்னு நெனச்சேன். ஆனா அவருடைய பதில் எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. '' உன் பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கிட்டு அங்க இருந்து புறப்படு'' என்று அவர் சொன்னாரு.

ஒரு புத்தகம், என்னோட கல்வி சான்றிதழர்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு நான் பேருந்து நிறுத்தத்துக்கு போனேன்.

பேருந்து ஏறியதும் என்னோட கணவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். என்னோட பதில் 'முடியாது' என்பதுதான்; நான் என்னோட வீட்டுக்கு போறேன்.

அதுக்கு அப்புறம் என்னோட மொபைல நான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன். சில மணி நேரத்துல நான் என் வீட்டுக்கு போயிட்டேன்.

என்ன சுத்தி என் குடும்பத்தினர் இருந்தாங்க. எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு மாசத்துல என் கணவன் வீட்டை விட்டு நான் வெளிய வந்துட்டேன்.

பட்டப்படிப்பின் இறுதியாண்டுல இருக்கும்போதுதான் என் கணவர் சாஹில முதன்முதலா நான் சந்திச்சேன். அவர் எல்லார்கிட்டயும் ஜாலியா பழகக்கூடிய நபர்.

அவர் கூட இருக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். கொஞ்ச நாள்ல நாங்க காதலிக்க ஆரம்பிச்சுட்டோம்.

நாங்க அடிக்கடி ஒண்ணா வெளிய போவோம்; மணிக்கணக்கா ஃபோன்ல பேசுவோம். என்னோட வாழ்க்கையே ரொம்ப சந்தோஷம் நிரம்பியதா இருந்துச்சு.

ஆனா இந்த காதல் வாழ்க்கை அதிக நாட்கள் நீடிக்கல. படிப்படியா எங்களோட உறவுல சமத்துவம் இல்லைனு எனக்கு புரிய ஆரம்பிச்சது. நான் எதிர்பார்த்தது இது கிடையாது.

எங்களோட உறவு எங்க பெற்றோரின் உறவு மாதிரி மாற ஆரம்பிச்சது. இதுல என்ன ஒரே ஒரு வித்யாசம்ன்னா, என் அம்மா என்ன நடந்தாலும் அமைதியா இருப்பாங்க. ஆனா பேசாம என்னால இருக்கமுடியாது.

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என் அப்பா அம்மாவிடம் கத்துவாரு. சில நேரத்துல அம்மாவை அடிச்சுடுவாரு. அப்போ அவங்க அழுவதை தவிர ஒன்னும் செய்யமாட்டாங்க.

எனக்கும் சாஹிலுக்கும் வாக்குவாதம் வந்தா அது ஒரு குழப்பமான சண்டையா மாறிடும். என்கிட்ட நெருங்க எப்பவுமே அவர் வன்முறைய கையாளுவாரு. அதுக்கு நான் மறுத்தால் கூச்சல் போடுவார்.

''நான் உன்ன என்னிக்காவது ஒரு நாள் அடிச்சுட்டா நீ என்ன செய்வ?'' என்று ஒரு நாள் அவர் என்கிட்ட கேட்டது எனக்கு நினைவிருக்கு. இதை கேட்டதும் நான் அதிர்ந்து போனேன். என்னோட கோபத்த கஷ்டப்பட்டு அடக்கிகிட்டு ''அன்றைக்கே உங்கள விட்டு பிரிஞ்சுடுவேன்'' என்று நான் பதில் சொன்னேன்.

அத கேட்ட உடனே அவர் சொன்ன பதில் என்ன மேலும் அதிரவெச்சுது. ''அப்படினா நீ என்ன உண்மையா காதலிக்கல. காதல்ல எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது''.

இது நடந்ததுக்கு அப்புறம் நாங்க ஒரு மாசமா பேசிக்கல.

எங்களுக்கு அடிக்கடி சண்டை வந்தது. பல முறை நான் இந்த உறவை முடிச்சுக்கலாம்ன்னு முயற்சிப்பேன், ஆனா ஒவ்வொருவாட்டியும் அவர் என்கிட்ட மன்னிப்பு கேட்பார். அவர விட்டுட்டு போய்டணும்னு நான் நினைப்பேன் ஆனா அத ஏன் என்னால செய்ய முடியலன்னு எனக்கு தெரியல.

இதுக்கு இடையில கல்யாணம் செஞ்சுக்கோன்னு வீட்டிலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்துகிட்டே இருந்தாங்க. இப்போது நான் ஒரு ஆசிரியர் பணியில இருக்கேன். நான் வகுப்புல இருந்து குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது என்னோட பெற்றோர் எனக்கு ஃபோன் பண்ணுவாங்க.

என் கல்யாண விஷயத்த பத்திதான் பேசுவாங்க. ''எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்க? சாஹில கல்யாணம் செஞ்சுக்கலாமே! அவன்மேல் உனக்கு விருப்பம் இல்லைனா உனக்கு பொருத்தமான ஒருத்தன நாங்க பார்த்து சொல்றோம். உன்னோட தங்கச்சிங்கள பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா?'' என்று... சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவாங்க.

வீட்டுல ஏதாவது தவறு நடந்தால், நான் ஒரு கல்யாணம் பண்ணாம இருப்பதத்தான் காரணமா சுட்டிக்காட்டுவாங்க. எனக்கு கல்யாணம் ஆகாததுனால என் அம்மாவின் உடல்நிலை சரியில்லாம போயிடுச்சு; என் அப்பாவின் வணிகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுச்சு.

நான் ரொம்ப விரக்தி அடைஞ்சு இறுதியா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். நான் உண்மையில திருமணத்துக்கு தயாரில்ல; தன்னோட நடத்தைய மாத்திக்குறேன்னு சாஹில் பண்ண சாத்தியத்துல எனக்கு நம்பிக்கையில்ல.

என்னோட பயமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் உண்மையாச்சு. அவர் பாடுற பாட்டுக்கு ஆடுற பொம்மையா சாஹில் என்ன ஆக்கிட்டாரு.

எனக்கு கவிதைகள் ரொம்ப பிடிக்கும். என்னோட கவிதைகள முகநூலில் பதிவு செய்வேன். ஆனா அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு அவர் என்ன தடுத்துட்டாரு.

நான் என்ன ஆடைகள் போடணும்னு அவரே முடிவுசெய்ய ஆரம்பிச்சாரு. படிக்குற வேலையையும் எழுதுற வேலையையும் இரவுக்குள்ளயே முடிச்சுடணும்ன்னு ஒரு நாள் அவர் என்கிட்ட சொன்னாரு; '' படுக்கைல நீ என்ன திருப்தி படுத்தலனா நான் வேறொரு பெண்கிட்ட போகவேண்டியிருக்கும்'' என்று அன்று இரவு என்கிட்ட சொன்னாரு.

நான் அவரை சந்தோஷப்படுத்துறது இல்ல என்று அவர் சொல்லுவார்; அதோட ஆபாச படங்கள் பார்த்து சில வித்தைகள் கத்துக்கோன்னு எனக்கு அறிவுரை சொல்லுவார்.

பிறகு மும்பைக்குச் சென்றால் ஹீரோ ஆகலாம் நப்பாசையில் அங்க போயிட்டாரு.

''நீ இங்கேயே இரு, உன் வேலையை செய், என் செலவுக்கு பணம் அனுப்பு, பின் நான் வீடு வாங்க கடன் வாங்கிக்கொடு'' என்றார் அவர். இதற்குத்தான் நான் 'சரி' சொல்லணும்ன்னு எதிர்பார்த்தார். நான் சரி சொல்லாததுனால அன்று இரவு என்ன படுக்கையில தள்ளி ஆசனவாய் புணர்ச்சிக்கு என்னை வற்புறுத்தினார்.

அவர் எல்லைய தாண்டிட்டார். அன்று காலை நான் அவர விட்டுட்டு போயிட்டேன். நான் நல்ல படிச்சா பொண்ணு. என்னால சம்பாதிக்கவும் தனியா வாழவும் முடியும். சாஹில் வீட்டைவிட்டு நான் வெளிய வந்ததுல இருந்து என் மனசு சோகத்துல மூழ்கிப்போச்சு.

என்னை என் குடும்பமும் இந்த சமூகமும் எப்படி பார்க்கும்ன்னு எனக்கு பயம் வந்துடுச்சு. ஆனா அந்த பயத்தவிட அவர பிரிஞ்ச வலியத்தான் என்னால தாங்கமுடியல.

நான் என் வீட்டுக்கு போனதும் என் தலையெல்லாம் களைந்துப்போய், நான் இரவெல்லாம் அழுததால கண்கள் வீங்கிப்போய் இருந்துச்சு.

புதுசா திருமணமான பெண் ஒருத்தி புகுந்தவீட்டுக்கு போனதுக்கு அப்புறம் முதன்முறையா பிறந்தவீட்டுக்கு வரும்போது அவ்வளவு அழகா இருப்பா.

ஆனா வெளிறிய என்னோட கண்கள பார்த்து எனக்கு ஏதோ பிரச்சனைன்னு என் அக்கம்பக்கத்தாருக்குக் கூட தெளிவா தெரிஞ்சுது.

எல்லாரும் என்னென்னவோ பேச ஆரம்பிச்சாங்க. ''இவ்வளவு கொடூரமான விஷயம் உனக்கு நடந்துருக்கே'' என்று சில பேர் சொன்னாங்க. சிலரோ ''சாஹில் திரும்ப வந்து மன்னிப்பு கேட்டு உன்ன கூட்டிகிட்டு போவார்'' என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தினாங்க.

சிலரோ, ஒரு பெண் இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படிப்பட்ட முடிவு எடுக்கக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாருக்கும் சொல்றதுக்கு ஏதோ இருந்துச்சு ஆனா யார் என்ன சொன்னாலும் நான் என் முடிவுலயிருந்து மாறுவதாயில்ல.

சாஹிலை விட்டுப் பிரிந்து ஏழு மாசம் ஆச்சு. இப்போ நான் என் வழில போய்கிட்டு இருக்கேன். எனக்கு ஒரு கல்லூரியில இடம் கெடச்சிருக்கு; நான் இப்போ படிச்சுக்கிட்டே வேலையும் செய்றேன்.

விவாகரத்துக்கான விதிமுறைகளெல்லாம் இன்னும் முடியாததால நாங்க காவல் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் போய்ட்டு வர வேண்டியதா இருக்கு. நான் காலையில எழுந்துக்கும்போதெல்லாம் அந்த இரவு பற்றிய எண்ணங்கள்தான் வருது. இப்பவும் எனக்கு நிறைய கனவுகள் வருது.

நடந்தத என்னால மறக்கமுடியல. ஆனா அதெல்லாம் மறந்து வாழ்க்கைய தொடர நான் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

காதல் மேலயும் உறவு மேலயும் எனக்கு இருக்குற நம்பிக்கை நிச்சயமா கொறஞ்சிருக்கு, ஆனா இன்னும் முழுசா உடையல.

எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுது. என்ன நானே நேசிக்க ஆரம்பிச்சதும் நான் நிச்சயம் பலமடஞ்சிடுவேன்.

தாமதமாக்காம அவரோட இந்த தவறான நடத்தையை சகிச்சுக்கிட்டு அமைதியா இல்லாம அவரை விட்டு வந்தத நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு.

அதுனாலதான் என்னோட எதிர்காலம், என் நிகழ்காலம் மற்றும் கடந்தகாலத்தவிட நல்லா இருக்கும்ன்னு நான் நம்புறேன்.

(பிபிசி செய்தியாளர் சிந்துவாசினி திரிபாதியால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட மேற்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்தப் பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது).

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :