கோயில்களை அரசு நிர்வகிப்பது நல்லதா, இல்லையா? - ஒரு முன்னாள் அதிகாரியின் அலசல்
- அழ. முத்து பழனியப்பன்
- இந்து அறநிலையத் துறை முன்னாள் உதவி ஆணையர்
(கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். பிபிசி-யின் கருத்துகள் அல்ல)
மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்குப் பிறகு அறநிலையத் துறையே இருக்கக்கூடாது என்ற குரல்கள் அதிகம் ஒலிக்கின்றன.
பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/Getty Images
மீனாட்சியம்மன் கோயில்
இந்து சமயக் கோயில்கள் ஒருபோதும் தனி நபர்களால் நிர்வாகம் செய்யப்படவில்லை என்பதைக் கல்வெட்டுகளும் வரலாறும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
வரலாறு
திருக்கோயில்களின் நிர்வாகம் செம்மையாக நடைபெற வேண்டுமென்பது அரசின் முக்கியமான கடமையாக விளங்கியது.
கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவைப் பிடிக்கும் வரையில் அந்தந்தப் பகுதியில் உள்ள கோயில்கள் அந்தந்தப் பகுதியின் மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரின் மேற்பார்வையில் மட்டுமே இருந்துவந்தன.
ஆங்கிலேய அரசாங்கம் வந்ததும் அவ்வப்பகுதி கோயில் நிர்வாகத்தை அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளைக் கொண்டு மேற்கொண்டனர்.
1810, 1817ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலமாக கிழக்கிந்தியக் கம்பனி இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேற்கொண்டது.
பட மூலாதாரம், Getty Images
1839ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்த கிறிஸ்தவ மிஷினரிகள், இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை கிறிஸ்தவ அரசாங்கம் மேற்கொள்ளல் ஆகாது என்று போராடினர்.
அதன் விளைவாக, 1841ஆம் ஆண்டு முதல் 1862ஆம் ஆண்டுவரை கொஞ்சம் கொஞ்சமாக கோயில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலகிக் கொண்டது.
இதற்குப் பிறகு கோயில்கள் நிர்வாகத்தில் ஊழல் அதிகரித்தது. இதனால் அரசின் மேலாண்மை தேவை என வலியுறுத்தப்பட்டது.
1872, 1877, 1883, 1886, 1894, 1899, 1908 ஆகிய ஆண்டுகளில் இது தொடர்பாக சட்ட மசோதாக்கள் தாக்கல்செய்யப்பட்டாலும், அவை சட்டமாக மாறவில்லை.
பட மூலாதாரம், AFP
இறுதியில் 1925ஆம் ஆண்டு திருக்கோயில்கள், மற்றும் இந்து சமய நிறுவனங்களை மேலாண்மை செய்வதற்காக இந்து சமய அறநிலைய வாரியம் ஏற்பட்டது.
இதிலும் குளறுபடிகள் ஏற்பட்டதில் 1927ஆம் ஆண்டு புதிய சட்டம் நிறைவேறியது.
ஆலயப்பிரவேசத்தை நடைமுறைப்படுத்திய அரசு நிர்வாகி
இதன்படி, இந்து சமய அறநிலைய வாரியம் ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. இதன் கீழ் கோயிலுக்கு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள்தான் கோயில் சொத்துக்களை காப்பாற்றப் போராடினர். சிலர் தங்கள் உயிரை இழந்தனர்.
மதுரைக் கோயிலின் நிர்வாக அதிகாரியாக விளங்கிய ஆர்.எஸ். நாயுடு, ஆலயப் பிரவேசத்தை நடைமுறைப்படுத்தினார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்கு வந்தபோது, அவர்களை பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்றார்.
பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/Getty Images
இதனால், அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டன. இதிலிருந்து அவரைக் காப்பாற்ற அவசரச் சட்டமே ராஜாஜி அரசால் இயற்றப்பட்டது.
திருவாரூர் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் இடிந்து விழுந்து கிடந்த கல் மண்டபத்தை மீண்டும் நிலை நிறுத்தி உருவாக்கினார்.
இது போன்ற கோயில் நிர்வாக அதிகாரிகள் பலரது பணிகள் நினைவில் நிற்பதற்கு உரியது.
வாரியத்திற்கு பதிலாக அரசின் துறை
தொடர்ந்து அறநிலைய வாரியத்தினாலும் ஊழல்களை களைய முடியாத காரணத்தினால், வாரியத்திற்குப் பதிலாக அரசின் ஒரு துறையாக இதனை மாற்றலாம் என்று கருதப்பட்டு 1942ஆம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி பி. வெங்கட்ரமணராவ் நாயுடு தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.
அவரது அறிக்கையின்படி, நாடு விடுதலை பெற்ற பின்னர் 1951ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலைய நிர்வாகத் துறை என்ற பெயரில் அரசின் ஒரு துறையாக ஏற்படுத்தப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விளைவாக புதிய சட்டம் 1959ல் ஏற்படுத்தப்பட்டது.
அறங்காவலர்களால் கோயில் நிர்வாகம்
இதன்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் அரசு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகம் அறங்காவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.
நிர்வாக அதிகாரிகள் அறங்காவலர்களால் இயற்றப்படும் தீர்மானங்களை இந்து சமய அறநிலையச் சட்டத்திற்கு உட்பட்டதா என்று பரிசீலித்து, இந்து சமய அறநிலைய நிர்வாகத் துறையின் மேலதிகாரிகளின் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவார்கள்.
பட மூலாதாரம், Getty Images
ஆகவே எக்காலத்திலும் திருக்கோயில்களின் நிர்வாகம் அரசின் மேலாண்மையில்தான் இருந்திருக்கிறது.
தனிநபர்களின் கையில் கோயில் சிக்கினால் நாசமாகிவிடும் என்பதே உண்மை. இந்தத் துறையில் குறைகள் இருக்கலாம். ஆனால், குறைகள் இல்லாத அரசுத் துறைகளே இல்லை என்பதுதான் உண்மை.
அரசு கணக்கில் சேராத கோயில் நிதி
இந்து சமய அறநிலையத் துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தனி அலகு.
கோயில்களின் நிதியை அரசுக் கணக்கில் சேர்ப்பதில்லை. சட்டப்படி சேர்க்கவும் முடியாது. ஒவ்வொரு கோயில் சொத்துக்கும் அந்தக் கோயிலின் தெய்வமே உரிமையாளர்.
கோயிலின் அனைத்து வரவினங்களும் அந்தக் கோயில் பெயரில் உள்ள முதல் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிலிருந்து ஒரு மாதத்திற்கு செலவு செய்ய வேண்டிய தொகையை அறங்காவலர் குழு செயல் அலுவலருக்கு வழங்கும்.
அவர் அந்தத் தொகையை செலவுசெய்த பின்னர், அந்த செலவுக் கணக்கை அறங்காவலர் குழு சரிபார்த்து அங்கீகரிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
உண்டியல் மற்றும் நகைகளின் சாவிகள் இரட்டைப் பூட்டு முறையில் உள்ளன. ஒரு பகுதி சாவி அறங்காவலர் வசமும் ஒரு பகுதி சாவி நிர்வாக அதிகாரிகள் வசமும் இருக்க வேண்டும்.
தற்போதைய அரசு கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்யாததால், பொதுமக்களின் பங்கு கோயில் நிர்வாகத்தில் இல்லை. இதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆகவே உடனடியாக அறங்காவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.
கோயில்களின் நிர்வாகம் தொடர்ந்து அரசின் மேலாண்மையில் இருக்க வேண்டும். அரசின் மேலாண்மை இல்லாமல் போனால், கோயில்களின் சொத்துகள் நாசமாகிவிடும். வரலாறு படித்தோர் இதனை உணர்வர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்