பேட் மேனை தெரி்யும்; ‘பேட் பாட்டி‘யை பற்றி உங்களுக்கு தெரியுமா?

  • திபால்குமார் ஷா
  • பிபிசி, குஜராத்தி

இந்தியாவில் பொருட்களை பிறருக்கு அன்பளிப்பாக வழங்குகிறார்கள். ஆனால், மாதவிடாய் சுகாதார பேடுகள் மற்றும் உள்ளாடைகளை அன்பளிப்பாக வழங்குவது பற்றி அதிகமானோர் எண்ணுவதில்லை. மிகவும் தேவையான இந்த பொருட்களை வாங்க முடியாதோர் பற்றி எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா? என்று கேட்கிறார் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சூரத்தில் வாழும் 62 வயதான மீனா மேத்தா.

சூரத்தின் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் இவரை 'பேட் தாதி' (பேட் பாட்டி) என்று அழைக்கின்றனர், குப்பங்களில் வாழும் பெண்களுக்கு இவரை 'பேட் வாலி பாய்' (பேட் பெண்மணி) என்று சொன்னால் தெரிகிறது.

தமிழ்நாட்டில் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்கிற 'பேட் மேன்' பற்றி நமக்கு தெரியும். இனி, 'பேட் தாதி'-யை பற்றி அறிந்து கொள்வோம்.

மாதந்தோறும் 5 ஆயிரம் மாதவிடாய் சுகாதார பேட்களை வழங்குவதற்கு சூரத்திலுள்ள பள்ளிகளுக்கும், குப்பங்களுக்கும் மீனா செல்கிறார்.

குப்பத்து பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துகின்ற ’சுகாதார கிட்களை’ வழங்குகிறார்.

குப்பத்தில் வாழும் பெண்களை சந்தித்தபோதுதான், மாதவிடாய் சுகாதார பேட்களை பயன்படுத்தி கொள்ள அணிவதற்கான உள்ளாடைகளே இல்லாதபோது, வெறுமனே சுகாதார பேட்களை வழங்குவது பெரிய தீர்வாக அமைந்துவிடாது என்று மீனா உணர்ந்தார்.

எனவே, 8 சுகாதார பேட்கள், இரண்டு உள்ளாடைகள், ஷாம்பு பாக்கெட்கள், குளியல் சோப்பு ஆகியவை அடங்கிய சுகாதார கிட்டை வழங்குவதற்கு அவர் முடிவு செய்தார்,

"2004ஆம் ஆண்டு தமிழ் நாட்டை சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தாக்கியபோது, இன்ஃபோசிஸ் பவுண்டேஷனின் தலைவர் சுதா மூர்த்தி, பாதிக்கப்பட்டோருக்கு மாதவிடாய் சுகாதார பேட்களை அன்பளிப்பாக வழங்கினார். மக்கள் உணவு மற்றும் பிறப் பொருட்களை அன்பளிப்பாக வழங்குவர், ஆனால், மாதவிடாய் காலத்தில் இருக்கும் வீடிழந்த பெண்களுக்க யார் உதவுவார்? என்று எண்ணியதாக அவர் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த சொற்கள்தான் நான் இந்த பணியை செய்ய தூண்டியது" என்று மீனா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் நடந்த ஒரு நிகழ்வுதான் நான் இன்று செய்து கொண்டிருக்கும் பணியை செய்ய தூண்டியது.

குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து பயன்படுத்திய மாதவிடாய் சுகாதார பேட்களை எடுத்து கொண்டிருந்த 2 பெண்களை பார்த்தேன்.

ஏற்கெனவே யன்படுத்திய இந்த மாதவிடாய் சுகாதார பேட்களை கொண்டு என்ன செய்ய போகிறீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்டேன்.

இந்தப் பேட்களை கழுவிவிட்டு, மீண்டும் பயன்படுத்துவோம் என்று அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.

அதன் பின்னர், மாதவிடாய் சுகாதார பேட்களை என்னுடைய வீட்டுப் பணியாளருக்கும், வேறு 5 பெண்களுக்கும் கொடுத்து உதவ தொடங்கினேன். பின்னர் அரசுப் பள்ளி மாணவியருக்கு கொடுக்குமளவுக்கு பணியை விரிவடைய செய்தேன்.

பள்ளிகளில் இந்த மாதவிடாய் சுகாதார பேட்களை விநியோகம் செய்ய சென்றிருந்தபோது, என்னிடம் வந்த ஒரு மாணவி, "நீங்கள் எங்களுக்கு இந்த சுகாதார பேட்களை வழங்குகிறீர்கள். ஆனால், நாங்கள் இவற்றை பயன்படுத்துவதற்கு எங்களிடம் உள்ளாடைகள் இல்லையே" என்று காதுகளில் கிசுகிசுத்தார்.

மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்

கேட்பொலிக் குறிப்பு,

மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்

அச்சமயம் முதல், அவர்களுக்கு உள்ளாடைகளையும் வழங்க தொடங்கினேன். குப்பங்களில் வாழும் பெண்கள் அடிப்படை சுகாதார தேவைகள் இல்லாமல் இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் ஆபத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கு சுகாதார கிட்டை வழங்கி வருகிறேன் என்று மீனா தெரிவிக்கிறார்.

இந்த விடயத்தை கேட்ட சுதா மூர்த்தி அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார். நான் பல ஆண்டுகளாக பெண்களுக்காக உழைத்து வருகிறேன். இந்த எண்ணம் ஏன் எனக்கு தோன்றவில்லை? என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாதவிடாய் சுகாதார பேட்களை இரண்டு முறை அவர் எனக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடக்கத்தில் என்னுடைய கணவர் எனக்கு நிதி ஆதரவு அளித்தார். அவர் 25 ஆயிரம் ரூபாய் எனக்கு வழங்கினார். பின்னர் இந்த பணியில் பலரும் எனக்கு ஆதரவு அளித்தனர்.

லண்டன், ஆப்ரிக்கா, ஹாங்காங் ஆகிய இடங்களில் இருந்தும் பலரும் மீனாவின் இந்தப் பணிக்கு உதவி வருகின்றனர்.

'மானுனி பவுண்டேஷன்' என்கிற அமைப்பை நிறுவி மீனா மேத்தா இப்போது இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்.

"இந்த மாதவிடாய் சுகாதார பேட்களை பயன்படுத்த தொடங்கிய பெண்கள் பலரும், சொறி மற்றும் பிற சுகாதார பிரச்சனைகள் எதுவும் இல்லை. வசதியாக வேலை செய்ய முடிகிறது என்று என்னிடம் கூறியுள்ளனர்." என்கிறார் மீனா மேத்தா.

நம்முடைய சமூகத்தில் மாதவிடாய் குறித்து நிலவும் மனோபாவம் குறித்து பிபிசியிடம் மீனா தெரிவிக்கையில், "காய்கறி வாங்குவதற்கு முன்னர், அவர் மாதவிடாய் காலத்தில் இருக்கிறாரா, இல்லையா என்று நாம் கேட்பதில்லை. மாதவிடாய் பற்றிய சமூகத்தின் தீண்டாமை மற்றும் வழக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :