குத்துச்சண்டை காதலி துளசி ஹெலன்: விளையாட்டில் பெண்களை ஊக்குவிக்க புல்லட் பயணம்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
குத்துச்சண்டை காதலி துளசி ஹெலன்: விளையாட்டில் பெண்களை ஊக்குவிக்க புல்லட் பயணம்

தமிழகத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை துளசி ஹெலன்(31), விளையாட்டுத் துறையில் பெண் குழந்தைகளின் பங்கேற்பை அதிகப்படுத்த, ஒவ்வொரு பெற்றோர்களும் மற்றும் ஒவ்வொரு மாநில அரசாங்கமும் முன்வரவேண்டும் என்ற விழிப்புணர்வு செய்தியை தாங்கி இந்தியா முழுவதும் புல்லட்டில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தற்போது மும்பையில் நடைபெற்றுவரும் சூப்பர் பைட் லீக் (தற்காப்பு கலைகளுக்கான போட்டி) போட்டியில் கலந்துகொள்ளப்போகும் துளசி, மார்ச் மாதம் போட்டிகள் முடிந்த பின்னர், விழிப்புணர்வுப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்களையும், வெவ்வேறு மாநில அரசுகளையும் தற்போது சந்திக்கவேண்டிய தேவை பற்றி விரிவாக பேசினார்.

''விளையாட்டு துறையில், அதிலும் சவாலான குத்துச்சண்டையில் நான் பல பரிசுகளை வாங்கியுள்ளேன். ஆர்வம் இருந்தாலும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்காததால், முதலில் தடுமாறினேன். ஆனால் விளையாட்டில் சாதிக்கவேண்டும் என்ற இலட்சியத்தால் வெற்றிபெற்றுள்ளேன். திறமையுள்ள பல பெண்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். என் அனுபவம் பல பெண்களை ஊக்குவிக்கும், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகிறேன்,'' என்றார் துளசி.

14 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, தனியாக வசிக்கத்தொடங்கியதாக கூறுகிறார் துளசி. வடசென்னையின் வீதிகளில் மீன்கடை, கறிக்கடையில் வேலைசெய்வது, பெட்ரோல் பங்கில் வேலை, ஆட்டோ ஓட்டுவது என பல வேலைகளில் ஈடுபட்டு தன் வாழ்க்கை பாதையை தானே அமைத்துக்கொண்டதாகக் கூறுகிறார்.

குத்துச்சண்டை மீது தீராக்காதல்

முப்பது வயதிற்குள் துளசி சந்தித்த மனிதர்கள், வாழ்க்கை கற்றுத்தந்த பாடங்கள், மகிழ்ச்சியான மற்றும் கசப்பான அனுபவங்கள், அவரை மேலும் திடமாக்கியுள்ளது. ''எதற்காகவும் வருத்தப்படுவதில்லை. இழந்த வாய்ப்புகள், கொண்டாடிய பொழுதுகள் என எல்லாமும் கலந்து இருக்கிறது. என்னிடம் இருப்பது வெற்றி பெறுவதற்கான தீராமுயற்சி மட்டுமே,'' என்கிறார் உறுதியாக.

''வீட்டை விட்டு வெளியேறியதால், என் அன்றாட செலவுகளுக்கும், குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுவதற்கும், உழைத்து பணம் சேர்த்தேன். பத்தாம் வகுப்பு தேர்வை மிகுந்த சிரமத்தில்தான் எழுதினேன். 299/500 மதிப்பெண்கள் பெற்றேன். பின்னர் படிப்பதா அல்லது குத்துச்சண்டையில் கவனம் செலுத்துவதா என்ற கேள்வி எழவே, எனக்கு பிடித்த விளையாட்டை தேர்ந்தெடுத்தேன்,'' என்கிறார் துளசி.

பொருளாதார சிக்கலும், குத்துச்சண்டை பயிற்சியில் ஏற்படும் உடல்வலியும் எந்த விதத்திலும் அவரின் மனபலத்தை குறைக்கவில்லை என்பதை துளசியின் வார்த்தைகளில் அறியமுடிந்தது.

விளையாட்டில் விலக்கிவைக்கப்படும் பெண்கள்

''தமிழ் பெண்கள் ஒவ்வொருவரும் வீரத்தமிழச்சியாக இருக்கவேண்டும் என அரசியல் மேடைகளில் பலரும் முழங்குகிறார்கள். ஆனால் பெண்கள் பூப்படைந்த பின்னர், விளையாட்டில் ஈடுபடுவதை பெரும்பாலும் பெற்றோர்கள் தவிர்க்கவே முயல்கின்றனர். விளையாட்டில் ஈடுபட்டால், பெண்மையை பெண்கள் இழந்து ஆண் தன்மையை பெறுவார்கள் என்ற கற்பிதம் பலரிடமும் உள்ளது. பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ளவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் விளையாட்டு உதவும் என்பதை என் பயணத்தில் வலியுறுத்துவேன்,'' என்கிறார் துளசி.

தற்போது ராயபுரத்தில் ஒரு தனியார் ஜிம்மில் பயிற்சியாளராக வேலைசெய்யும் துளசி, மாநிலம் மற்றும் தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார்.

'நாக்அவுட்' சாதனை

முப்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ள துளசி, குத்துச்சண்டை போட்டியில், நாக்அவுட்டில் (போட்டியாளரை எழமுடியாதவாறு ஒரே குத்தில் வீழச்செய்வது) தேசிய அளவில் சாதனை படைத்துள்ளதாக கூறுகிறார்.

''2016ல் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் எனது போட்டியாளரை நாக் ஆவுட் செய்ய, வெறும் 9.2 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டேன். இதுவரை பெண்களுக்கு நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் இவ்வளவு குறைந்த நொடிகளில் நாக் ஆவுட் செய்ததாக தெரியவில்லை. நான் நாக் ஆவுட் செய்வதில் அதிக கவனம் எடுத்துவருகிறேன்,'' என சாதரணமாக கூறுகிறார்.

'தமிழகத்திற்காக விளையாட ஆசை'

குத்துச்சண்டை விளையாட்டில் பயிற்சியாளர்களால் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறையை வெளிப்படுத்தும் வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்ததாகவும், அதன்காரணமாக தமிழக குத்துச்சண்டை வீரர்கள் சங்கத்தின் ஒத்துழைப்பை இழந்ததாகக் கூறுகிறார்.

''நான்கு ஆண்டுகள் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்தேன். அதன் விளைவாகவே பெங்களூருவில் பங்கேற்ற போட்டியில் நாக் அவுட் செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றேன். பாலியல் வன்முறை தொடர்பான வழக்கை பின்வாங்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். ஆனால் எனக்கான நியாத்திற்காக இறுதிவரை போராடுவேன்,' என்றார் அவர்.

சாதனை புரிந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்தாலும், தமிழக அரசின் சார்பாக விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்படாததால், கடந்த ஆண்டு கர்நாடகா சார்பாக விளையாடியதாகவும், இந்த ஆண்டு கோவா சார்பாக விளையாட இருப்பதாகவும் கூறுகிறார்.

துளசிக்கு வாய்புகள் மறுக்கப்படுகிறதா என விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியிடம் கேட்டபோது, ''மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண் குழந்தைகள் விளையாட்டில் பங்கேற்கவேண்டும் என ஆர்வம் கொண்டவர். அவரின் கொள்கைகளை பின்பற்றும் அரசு எப்போதும் பெண் குழந்தைகளுக்கு உதவதில் அக்கறையோடு செயல்படும். துளசிக்கான வாய்ப்புகள் குறித்து முதல்வரிடம் பேசி முடிவுசெய்கிறேன்,'' என்றார்.

'முகமது அலி பாணியை பின்பற்றுகிறேன்'

துளசியின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி, நார்வே நாட்டைச் சேர்ந்த குறும்படத் தயாரிப்பாளர் ஒருவர் 'லைட் பிளை, பிளை ஹை'(light fly, fly high) என்ற பெயரில் எடுத்த படம் பல நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது.

பெண் குத்துச்சண்டை வீராங்கனையின் வாழ்க்கையைக் காட்டும் படமாக தமிழ் மற்றும் இந்தியில் வெளியான 'இறுதிச்சுற்று' தன்வாழ்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம் என்றார் துளசி.

முகமது அலியை குருவாக எண்ணியே ஒவ்வொரு முறையும் பயிற்சி செய்வதாகவும், அவருடைய பாணியை பின்பற்றுவதாகவும் கூறுகிறார்.

இந்தியாவில் பெரிதும் அறியப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுடன் நான்கு முறை துளசி போட்டியிட்டுள்ளார். ''தமிழகத்தில் பெண்கள் பங்குபெறும் குத்துச்சண்டை விளையாட்டில் அரசு அக்கறை காட்டவேண்டும். வட மாநிலங்களில், பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு சிறப்பு கவனம் கொடுக்கிறார்கள். நம் மாநிலத்தில் பெண் குழந்தைகள் குத்துச்சண்டையில் ஈடுபடுவது அரிதாக உள்ளது. என் பயணத்தில் குத்துச்சண்டை விளையாட்டின் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் கற்பிதங்களை போக்க திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :