சட்டசபையில் ஜெயலலிதா படம்: ஆதரவும், எதிர்ப்பும்

சட்டசபையில் ஜெயலலிதா படம்: எதிர்ப்பும், ஆதரவும்

பட மூலாதாரம், AFP

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் நாளை (பிப்ரவரி 12) திறக்கப்படவுள்ள நிலையில், அந்த நிகழ்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் க.பூபதி அளித்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முன்னிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் திறந்துவைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் சுதந்திரபோரட்ட தலைவர்கள் காந்தி, காயிதேமில்லத் மற்றும் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜ், எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் பத்து படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் படத்தை பிரதமர் மோதி திறந்துவைப்பார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சட்டப்பேரவை தலைவர் திறந்துவைப்பார் என அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசியல் சட்டத்துக்கும் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக் கூடாது,'' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் யாரிடமும் தெரிவிக்காமல், ஜெயலலிதாவின் படம் திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மோசமான செயல் என்கிறார்.

பட மூலாதாரம், M.K. STALIN

''ஜெயலலிதாவின் படத்தை திறக்கும் நிகழ்வை சட்டமன்ற உறுப்பினர்களிடம் முறையாக பேசாமல், அதிமுகவின் விழா போல நடத்துகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் ஒரு படத்தை மாட்டுவது போல சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை வைக்க முடிவுசெய்துள்ளார். தற்போது உயிரோடு இருந்திருந்தால், ஜெயலலிதா, சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் இருந்திருப்பார். அவரின் படத்தை வைப்பதில் நியாயம் இல்லை,'' என்று துரைமுருகன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ.அன்பழகன் சட்டப்பேரவை செயலாளர் பூபதியிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பொது இடங்களிலும், அரசு விழாக்களிலும் பயன்படுத்துவதை தவிர்க்க நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த படத்திறப்பிற்கான அழைப்பிதழைக் கூட எதிர்க்கட்சிக்கு வழங்காமல் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது ஏற்புடையது அல்ல" என தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஜெயலலிதாவின் படம் திறப்பதை எதிர்க்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

''ஒவ்வொரு கட்சியினரும், அவர்களின் ஆட்சிக்காலத்தில், தங்களது தலைவரின் படம் சட்டமன்றத்தில் வைக்கவேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஜெயலலிதா குற்றவாளி என்ற காரணத்தைக் கொண்டு எதிர்க்கிறார்கள். ஆனால் மூன்று முறை அவர் முதல்வராக ஆட்சி செய்த காலத்தில் பெண்களுக்காக தொட்டில் குழந்தை திட்டம், பேறுகால விடுப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் திறக்கப்படும் முதல் பெண்ணின் படமாக ஜெயலலிதா படம் இருக்கும் என்பதால் அதை நான் ஆதரிக்கின்றேன். இது என் சொந்த முடிவு,'' என்று விஜயதரணி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், "சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தில் திறந்துவைப்பது ஒரு தவறான உதாரணம் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :