நாளிதழ்களில் இன்று: “மன்னிப்பு தமிழ் வார்த்தையா?” - குரூப் 4 குழப்பமும், கிண்டல் செய்யப்பட்ட விஜயகாந்தும்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - `மன்னிப்பு தமிழ் வார்த்தையா...?`

பட மூலாதாரம், facebook/VijayakantDMDKParty

தமிழகத்தில் நடைப்பெற்ற குரூப் 4 தேர்வில் `மன்னிப்பு` எந்த மொழி வார்த்தை என்று கேட்கப்பட்டு இருந்தது. பெரும்பாலானோர் அது தமிழ் வார்த்தை என்று பதில் அளித்து இருந்தனர் என்றும், அது உருது வார்த்தை என்றும் விவரிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி. ரமணா திரைப்படத்தில், `மன்னிப்பு எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை` என்பார் விஜயகாந்த். `மன்னிப்பு` என்ற வார்த்தையே தமிழ் வார்த்தை இல்லை என்று அறிந்ததும், பலர் விஜயகாந்தை சமூக ஊடகங்களில் விஜயகாந்தை கிண்டல் செய்தனர் என்று கூறுகிறது அந்த செய்தி.

`தவறான பதில்`

அதுபோல, குரூப் 4 தேர்வில் `என்று ரவீந்திரநாத் தாகூர் பிறந்தார்?` என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மே 18,1861; மே 17, 1861; மே 17, 1816; மற்றும் ஜூன் 17, 1861 என்று நான்கு பதில்கள் தரப்பட்டதாகவும், இந்த நான்கும் தவறு என்று மாணவர்கள் கூறியதாகாவும் தாகூரின் உண்மையான பிறந்தநாளான மே 7, 1861 என்ற தினம் கொடுக்கப்பட்ட நான்கு பதில்களில் இல்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

'மாலையில் விபத்து'

அதிக கல்வி அறிவு கொண்ட மாவட்டங்களைவிட, கல்வி அறிவில் பின் தங்கி உள்ள மாவட்டங்கள் தான் `108` அவசர ஊர்தி சேவையை மிக சிறப்பாக பயன்படுத்தி உள்ளதாக சுகாதாரா தரவுகளை ஆதாரமாக காட்டி`டைம்ஸ் ஆஃப் இந்தியா` நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்தச் செய்தியில் தமிழகத்தின் 42 சதவீத சாலை விபத்துகள் மாலையில்தான் நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்) - 'சாதிப் பஞ்சாயத்து அத்துமீறல்கள்'

சாதிப் பஞ்சாயத்துகளின் அத்துமீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதி உள்ளது தி இந்து தமிழ் நாளிதழ். அதில், சாதிப் பஞ்சாயத்துகளின் தலையீட்டைச் சட்டம் மூலமோ அல்லது சமூக மாற்றம் மூலமோ விரைவில் தடுத்தே ஆக வேண்டும். அவர்களுடைய குறுக்கீட்டையும் சுயமாக தண்டனை வழங்கும் போக்கையும் எந்தக் காரணம் கொண்டும் இனியும் அனுமதிக்கக் கூடாது என்கிறது அந்த தலையங்கம்.

பட மூலாதாரம், தி இந்து

தினமணி - 'காவி அரசியல் என்றால் ரஜினியுடன் கூட்டணி இல்லை'

பட மூலாதாரம், Getty Images

"எனக்கும், ரஜினிக்கும் இடையே தேர்தல் கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தால், தேர்தல் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. ஆனால், அவரோ தனது பாதை ஆன்மிக அரசியல் என்று கூறுகிறார். அது ஆன்மிக அரசியலா? காவி அரசியலா என்று தெரியவில்லை. அவர் காவி அரசியலை முன்னெடுக்க மாட்டார் என்றே நம்புகிறேன். ஒருவேளை, அது காவி அரசியலாக இருந்தால், ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பில்லை" என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்றியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்) - `ஜல்லிக்கட்டில் இறந்த அமைச்சரின் காளை'

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் காளை இறந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து ஆங்கில நாளிதழ். இந்த ஜல்லிக்கட்டில் 66 பேர் காயமடைந்ததாக கூறுகிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :