சர்ச்சைகளுக்கு மத்தியில் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறப்பு

படத்தின் காப்புரிமை TWITTER

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பேரவை சபாநாயகர் பி.தனபால் இன்று (பிப்ரவரி 12) திறந்துவைத்தார்.

தமிழக சட்டமன்றத்தில் சுதந்திரப்போராட்ட தலைவர்கள் காந்தி, பெரியார், காயீதே மில்லத், மற்றும் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்டவர்களின் பத்து படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அதே அரங்கில் ஜெயலலிதாவின் முழு உருவப்படமும் இடம்பெற்றுள்ளது.

இந்த படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பங்கேற்கவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரின் படம் சட்டமன்றத்தில் வைக்கப்படக்கூடாது என எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். நேற்று (பிப்ரவரி 12) சட்டப்பேரவை செயலரிடம் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மனு ஒன்றை அளித்திருந்தது.

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை, அரசு விழாக்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கக்கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு நடந்துவரும் நேரத்தில், அவசரமாக வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என திமுக புதிதாக மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய முதல்வர்

படத்திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவை ஜெயலலிதா என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை TWITTER

''இந்த விழாவில் கலந்துகொள்வது என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். இன்று அவர் நேரில் வந்து ஆசி வழங்குவது போல உணர்கிறேன். பல சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து ஆறு முறை தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார். ஜெயலலிதா தன்னலம் மற்றும் உண்மை ஆகிய குணங்களுக்கு சொந்தக்காரர் என்றும் தமிழக மக்களின் மனதில் நிலைத்து இருக்கிறார்,'' என்றார்.

பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் ஜெயலலிதா என்று கூறிய முதல்வர், "வரலாறு வந்துபோனவர்களின் தொகுப்பு அல்ல. மாநிலத்தின் உரிமைகளைப் பெற்றுத்தந்தவர்களின் தொகுப்பு,'' என்றும் கூறினார்.

தனது உரையில் ஜெயலலிதாவிற்கு இறுதிமரியாதை செய்யவந்த பிரதமர் மோதிக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். ஜெயலலிதாவின் படத்தை பிரதமர் மோதி வந்து திறந்து வைக்க வேண்டும் என கடந்த ஆண்டு முதல்வர் பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

'ஜானகி அம்மாவை மறந்துவிட்டது அதிமுக'

அதிமுகவின் அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் கட்சியில் இருந்து, பதவிகள் வகித்து, பின்னர் திமுகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, ஜெயலலிதாவின் படத்தை வைத்து அதிமுக தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.

"முதல்வராக இருந்தார் என்பதற்காக படத்தை வைக்கிறோம் என்று அதிமுகவினர் கூறினால், முதலில் அவர்கள் எம்ஜிஆர்க்கு பின்னர் முதல்வராக இருந்த ஜானகி அம்மாவின் படத்தை வைத்திருக்க வேண்டும். சட்டத்தை இயற்றும் இடமான சட்டமன்றத்தில், சட்டத்தை அவமதித்து, ஊழலுக்காக தண்டனை பெற்றவரின் படத்தை வைப்பது ஏற்கக்கூடியது அல்ல,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அவர் மேலும், ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், குற்றவாளி என்பதால், சட்டமன்றத்தில் நுழையக்கூட முடியாது என்ற நிலை இருந்திருக்கும் என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :