மேட்டிமைத்தனத்துடன் இருந்ததா குரூப் 4 தேர்வு வினாக்கள்?

குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் வழக்கத்தைவிட மிகவும் கடினமாக இருந்தது என்று ஆங்காங்கு குரல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.

படத்தின் காப்புரிமை DIPR

இத்தேர்வை எழுதிய தர்மபுரியை சேர்ந்த சண்முகம், ’’தேர்வு இவ்வளவு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கேள்வியை புரிந்துக் கொள்ளவே சிரமமாக இருந்தது. குறிப்பாக கணிதம் மிகவும் கடினமாக இருந்தது’’ என்கிறார்.

தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை நடந்த குரூப் 4 தேர்வை 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351 பணியிடங்களுக்கான தேர்வுக்கு மொத்தம் 20 லட்சத்து 88,852 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 6,962 மையங்களில் இத்தேர்வு நடைப்பெற்றது.

இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் வழக்கத்தைவிட கடினமாக இருந்ததாகவும், குறிப்பாக தொழிற்நுட்ப வாய்ப்புகளற்ற கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு வினாக்கள் வடிவமைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறுகிறார்கள் கல்வியாளர்கள்.

`மேட்டிமைத்தனம்`

வழக்கமாக கேட்கப்படும் வினாக்கள் இத்தேர்வில் இல்லை. கேள்விகள் அனைத்தும் நகரத்தன்மைவுடன் இருந்தது என்கிறார் கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

பிபிசி தமிழிடம் பேசிய பாஸ்கான் கிருஷ்ணமூர்த்தி, "இத்தேர்வு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்வு. அந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் கிராமத்தை புரிந்துக் கொள்வது அவசியம். ஊரக பகுதிகள், அதன் மக்கள், அவர்களின் பிரச்சனைகளை புரிந்துக் கொள்பவர்களால்தான் ஒரு கிராம நிர்வாக அலுவலராக சிறப்பாக செயல்பட முடியும். ஆனால், இத்தேர்வில் கேட்கப்பட்ட்ட கேள்விகல் எதுவும் கிராமம் சம்பந்தமாக இல்லை. சரி... வழக்கமாக கேட்கப்படும் தமிழக அரசியல், இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்தான கேள்விகளாவது இருந்ததா என்றால் அதுவும் இல்லை. கேள்விகள் அனைத்தும் பகட்டான மேட்டிமைதனத்துடன் இருந்தது." என்கிறார்.

"பெரும்பாலும் குரூப் 4 தேர்வை எழுதுபவர்கள் முதல்தலைமுறை பட்டதாரிகளும், கிராமப்புற மாணவர்களும்தான். அவர்களுக்கு இன்னும் பெரும்பாலான தொழில்நுட்ப வசதிகள் சென்ற சேரவில்லை. ஒரு நகர்புற மாணவனுக்கு கிடைக்கும் தகவல்கள் எதுவும் அவனை சென்று சேராது. இந்த ஏற்றத்தாழ்வுகளை புரிந்துக் கொள்ளாமல் கேள்விகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன" என்று விவரிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

'மத்திய அரசை சுற்றியே`

பெரும்பாலான கேள்விகள் மத்திய அரசை சுற்றியே இருந்தன. அக்டோபர் 17 தில்லியில் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனம் எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது? அவர்கள் குறிப்பிடுவது அகில இந்திய ஆயுர்வேத மையத்தைதான். நேரடியாக, ஒரு கேள்வியை கேட்காமல், மாணவனை சுற்றலில் விடும்படி கேட்கும் நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

`கடினமான கேள்விகள்... ஆனால்`

போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் சங்கரசரவணன் கருத்து இதிலிருந்து வேறுபடுகிறது. அவர், வினாக்கள் வழக்கத்தைவிட கொஞ்சம் கடினமாகதான் இருந்தன. ஆனால், மாணவர்கள் எதிர்கொள்ளும் விதத்தில்தான் இருந்தது என்கிறார்.

"கேள்விகள் தற்போதைய நிகழ்வுகளிலிருந்து கேட்கப்பட்டு இருந்தன. குறிப்பாக கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தது" என்று சொல்லும் சங்கரசரவணன், பாடநூலை தொடர்ந்து படித்தவர்களுக்கும், மற்றொரு தேர்வாக இதை அணுகாமல், மிகவும் அர்ப்பணிப்புடன் படித்தவர்களுக்கு நிச்சயம் இவை சிரமமாக இருந்து இருக்காது என்கிறார்.

"மன்னிப்பு தமிழ் வார்த்தை இல்லை என்பது நாம் சிறுவயதில் படித்ததுதான். அவைதான் கேள்விகளாக கேட்கப்பட்டு இருந்தன" என்கிறார்.

சங்கர சரவணனும், மத்திய அரசை மையப்படுத்திய கேள்விகள் அதிகம் இருந்தன என்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்