சாதிப் பாகுபாடு: தற்கொலை செய்து கொண்ட தலித், மோதியின் பள்ளியில் படித்தவர்

40 வயதான மகேஷ் சௌஹான், பிப்ரவரி 6 ஆம் தேதி தான் மதிய உணவு நிர்வாகியாக பணியாற்றும் பள்ளியிலுள்ள மூன்று ஆசிரியர்கள் செய்த சாதி பாகுபாட்டின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

நரேந்திர மோதியின் பூர்வீக இல்லத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வட் நகர் தலித் பகுதியிலுள்ள மகேஷ் சௌஹானின் வீடு சோகமாகப் பாலைவனம் போன்று காட்சியளிக்கிறது.

அவரின் குடும்பம் இன்னும் அதிர்ச்சியிலிருந்தும், கண்ணீரிலிருந்தும் மீளவில்லை.

80 வயதாகும் மகேஷின் தாயார் திடீரென்று விழித்து, தனது மகனை தேடுகிறார், தனது கணவனின் புகைப்படத்தை பார்க்கும் மனைவி உடனடியாக கதறி அழுகிறார், அவரின் தம்பியோ தனது கண்ணீரை தேக்கிவைத்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறார், ஆனால், தனது இறந்துபோன சகோதரரின் குழந்தைகளை பார்த்தவுடனேயே கதற ஆரம்பிக்கிறார்.

நாட்டின் பிரதமரான நரேந்திர மோதியும், தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ள சௌஹானும் வட்நகரிலுள்ள பி.என். உயர்நிலை பள்ளியில்தான் பயின்றனர்.

வட்நகரில் பிறந்த பிரதமர் மோதி, அங்குதான் தனது இளமைக் காலத்தை கழித்தார்.

பிரதமர் மோதி பி.என். உயர்நிலை பள்ளியில் 1963 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை பயின்றார்.

தலித் சமுதாயத்தை சேர்ந்த மகேஷ் சௌஹானும் அதே பள்ளியில்தான் கடந்த 1990களின் இறுதிப் பகுதியில் பயின்றார்.

சேஹ்பூர் கிராமத்தில் உள்ள ஷெக்பூர் தொடக்கப் பள்ளியின் மூன்று ஆசிரியர்கள் தனக்கு எதிராக சாதிப் பாகுபாட்டைக் காட்டியதால் மகேஷ் சௌஹான் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் சௌஹான் எழுதி வைத்திருந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டது.

தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் 5,000 மக்கள் வசிக்கும் ரோஹிட் வாஸ் என்ற பகுதியில் மஹேஷ் சௌஹான் வசித்து வந்தார். அப்பகுதியில் குறைந்தது 80 பட்டதாரிகள் இருந்தாலும், அவர்களில் வெகு சிலருக்கு மட்டுந்தான் அரசாங்க வேலை கிடைத்துள்ளது.

சௌஹானுக்கு ஒரு அரசாங்க வேலையை பெறுவதே கனவாக இருந்தது.

சௌஹான் ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், தற்போது 80 வயதாகும் அவரது தாயார்தான் கட்டட வேலையை செய்து தனது குழந்தைகளை படிக்க வைத்தார்.

"கௌரவத்துடன் வாழ்வதே எங்களது ஒரே குறிக்கோளாக இருந்தது" என்று பிபிசியிடம் பேசிய சௌஹானின் தம்பி ரமேஷ் சௌஹான் கூறுகிறார்.

அரசாங்க ஊழியராக பணிபுரிவதைக் குறிக்கோளாக கொண்ட சௌஹானுக்கு சேஹ்பூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மதிய உணவு நிர்வாகியாக மாதம் 1,600 ரூபாய் சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அவர் கடந்த 20 வருடங்களாக அங்கு பணிபுரிந்து வருகிறார்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆசிரியர்களான மம்மின் ஹுசைன் அபாஸ்பாய், அமாஜ் அர்ஜி தாகோர் மற்றும் வினோத் பிரஜாபதி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் போலீசார் இன்னும் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்யவில்லை. "நாங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தினோம். ஆனால், அவர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர்" என்று எஸ்சி/எஸ்டி பிரிவின் காவல் துறை துணை கண்காணிப்பாளரான ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

ஷெக்பூர் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரான காயத்ரி ஜானியை அணுகியபோது, மகேசுக்கு எதிராக நடந்த பாகுபாட்டை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

"பள்ளிக்கு வெளியே அவருக்கு நடக்கும் விடயங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர்கள் குறித்து அவர் என்னிடம் புகார் ஏதும் அளித்ததில்லை" என்று கூறினார்.

பிபிசியிடம் பேசிய மகேஷின் குடும்பத்தார், தான் ஏதாவது ஒன்று செய்தால் அது தனக்கே வினையாய்ப் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர் தனக்கு எதிரான சாதியப் பாகுபாட்டை பற்றி வெளியே சொல்லவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

"அவர் கடந்த ஒன்றரை வருடங்களாக பாகுபாட்டுக்குள்ளாகி வருகிறார். தனக்கு எதிரான பாகுபாட்டை பற்றி அவர் என்னிடமும் அவருடைய மகளிடமும் தெரிவித்தார். நாங்கள் காவல்துறையில் இதற்கு எதிராக புகார்ப் பதிவு செய்யலாம் என்று திட்டமிருந்த முடிவிலிருந்து பிறகு பின்வாங்கிவிட்டோம்"

தனது மகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மஹேஷ், தனது தற்கொலைக் குறிப்பை மகளின் புத்தக பையில் வைத்தார். "நான் பள்ளிக்கூடத்தில் உன்னை விடுவதற்காக வருகிறேன்; ஆனால், இன்னொருமுறை உன்னை பள்ளியில் விடுவதற்கு நான் வராமல் போகலாம்" என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

மகேஷ் தான் பணிபுரியும் பள்ளியிலுள்ள அந்த மூன்று ஆசிரியர்கள் டீ மற்றும் சிற்றுணவுகளுக்கான தொகையை செலுத்துமாறு தன்னை வற்புறுத்தியதாக அந்த தற்கொலை குறிப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் தொகையை செலுத்துவதற்கு மறுத்தால் அந்த மூன்று ஆசிரியர்களும் மதிய உணவு உண்ணும் மாணவர்கள் குறித்த தகவல்களை மகேஷிடம் தரமாட்டார்கள் என்ற நிலை நிலவியதாகவும், அப்படி நடந்திருந்தால் அரசாங்கம் விநியோகிக்கும் பொருட்களில் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் தெரிகிறது.

கூடுதல் செலவை ஏற்படுத்தும் டீ மற்றும் சிற்றுணவுகளுக்கான தொகையை தன்னை வற்புறுத்தி செலுத்த சொல்வதை தன்னால் தாங்க முடியவில்லை என்று தற்கொலை குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சௌஹான் ஒரு கடனாளியாக இருந்தார், அவர் புகார் செய்தால் அவரது வேலையை இழந்துவிடுவார் என்ற கவலை அவருக்கு ஏற்பட்டது.

மகேஷின் மனைவியும், அவரது மூன்று குழந்தைகளும் தற்போது அரசாங்கத்தின் உதவியை எதிர்நோக்கி இருக்கிறார்கள். மகேஷின் உறவினர்கள் அவரது வேலையை அவரின் மனைவிக்கு வழங்க வேண்டுமென்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியின் வட்டாட்சியரான பி.ஜெ.ஷேத்தை கேட்டபோது, இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், மஹேஷின் வேலையை அவரது மனைவிக்கு அளிப்பதற்கு முடியுமா என்று பார்ப்போம் என்றும் கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பிடிபடுவார்களா மற்றும் இதுகுறித்த விசாரணையில் ஒரு முடிவு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்