’வேலண்டைன்’ யார்?: ரகசியம் சொல்லும் 'வைரல்' பிரியா வாரியர்

படத்தின் காப்புரிமை Instagram

கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக அறிமுகமாகும் 'ஒரு அடார் லவ்' திரைப்படத்தின் காணொளி காட்சிகள் பரவலான வரவேற்பையும், அனைவரின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றது.

கண்ணால் கவிதை பேசும் பிரியா இதற்காக எத்தனைக் காலம் பயிற்சி எடுத்துக்கொண்டார்?

இதற்கான பதிலை பிரியாவிடம் கேட்டோம். பிபிசியிடம் பேசிய பிரியா, ''படத்தின் இயக்குனர் படபிடிப்பின்போது அந்த இடத்தில் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். க்யூட்டாக எதாவது செய் என்று சொன்னார். நான் செய்தேன்'' என்கிறார்

எத்தனை டேக்குகள் ஆனது?

சரி, காட்சி சரியாக வருவதற்காக எத்தனை டேக்குகள் எடுத்துக் கொண்டார்? என்ற கேள்விக்கு, ''நான் ஒருமுறை முயற்சி செய்தேன், அதுவே நன்றாக இருக்கிறது என்று இயக்குநர் சொல்லிவிட்டார். ஆனால் அந்த காட்சி இவ்வளவு பிரபலமாகும் என்று நான் நினைக்கவேயில்லை.'' என்று பதல் தருகிறார்.

''இந்த காட்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள் என்றால் அது அனைத்தும் இயக்குநருக்கு உரித்தானது. அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் செய்தேன். அவர் இது சரியில்லை என்று சொல்லியிருந்தால், வேறு முயற்சி செய்திருப்பேன். எது சரி, எது நன்றாக இருக்கும் என்று முடிவு செய்வது இயக்குநர்தானே? அவரே அனைத்து புகழுக்கும் உரியவர்.''

''நான் எந்தவித பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. என்ன நடந்ததோ, அது ஆன் த ஸ்பாட் நடந்தது, அது நன்றாகவே வந்திருக்கிறது. அந்த காட்சி எடுத்தபிறகு, சிறப்பாக வந்திருப்பதாக அனைவரும் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.''என்கிறார் பிரியா.

வீடியோவை நையாண்டி செய்ததில் பிரியாவுக்கு மகிழ்ச்சியா?

பிரியா தோன்றும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் பல்வேறு விதமாக நையாண்டி செய்யப்படுகிறது. அதையெல்லாம் பிரியா பார்த்தாரா என்று கேட்டோம். ''நிறைய ட்ரோல் ஆகியிருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபலங்கள் பலருடன் சேர்த்து ட்ரோல் செய்திருப்பது சந்தோஷத்தை தருகிறது'' என்று குதூகலிக்கிறார் பிரியா.

கேரள மாநிலம் திருச்சூரில் வசிக்கும் பிரியாவின் தந்தை மத்திய சுங்கவரித் துறையில் பணிபுரிகிறார், தாய் குடும்பத்தை பராமரிக்கிறார். தாத்தா, பாட்டி, தம்பி என மகிழ்ச்சியான குடும்பத்தை சேர்ந்தவர் பிரியா.

படத்தின் காப்புரிமை Instagram

தற்போது திருச்சூர் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வரும் பிரியாவின் முதல் திரைப்படம் இது. இதற்கு முன்பு மூன்று குறும்படங்களில் பிரியா நடித்துள்ளார். நடிப்பதில் மிகவும் ஆர்வம் இருப்பதாகவும் சொல்கிறார் பிரியா.

பாலிவுட்டில் யாரைப் பிடிக்கும்?

''ஒரு அடார் லவ் திரைப்படம் எனக்கு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே சமூக ஊடகங்களில் தற்போது வெளியான காணொளி காட்சிகள் மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்துவிட்டன'' என்று சொல்கிறார் பிரியா.

''அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.'' என்று கூறும் பிரியா ஹிந்தி திரைப்படங்களில் நடித்தால், கதாநாயகனாக யாரைப்போடலாம்? இதற்கும் உற்சாகத்துடன் பதில் சொல்கிறார் பிரியா, ''ரண்வீர் சிங், ஷாரூகான், சித்தார்த் மல்ஹோத்ரா.'' என்று.

படத்தின் காப்புரிமை Instagram

18 வயது பிரியா, பாரம்பரிய நடனம் மற்றும் இசையை கற்றுக் கொண்டிருக்கிறார்.

படிப்பதிலும் ஆர்வமாக இருக்கும் அவர் நடிப்பையும், படிப்பையும் இரு கண்களாக கருதுகிறார். கண்களால் அபிநயத்தையும், நவரசத்தையும் காட்டும் பிரியா எந்தவிதமான நடிப்பு பயிற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை தேவை?

தனக்கு ஹிந்தி பேசும் பகுதிகளில் இருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லும் பிரியா, ''பாலிவுட்டில் நடித்தாலும் இதே அன்பும், வரவேற்பும் கிடைக்கும் என்று நினைக்கிறார்''.

மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளைத் தவிர ஹிந்தியையும் நன்றாக பேசுகிறார் பிரியா.

படத்தின் காப்புரிமை யார்

''என் அப்பா மும்பையில் வேலை பார்த்தார். எனவே நாங்கள் ஐந்து ஆண்டுகள் மும்பையில் வசித்திருக்கிறோம். அப்போது ஹிந்தி கற்றுக்கொண்டேன்'' என்கிறார் பிரியா.

நல்ல இளைஞனுக்கான பிரியாவின் வரையறை என்ன? முத்தான மூன்று வார்த்தைகளில் வரையறுக்கிறார் பிரியா ''அன்பானவன், அக்கறையானவன், ஆதரவானவன்''.

வேலண்டைன் யார்?

வேலண்டைன் யார் என்றால் ரோஷன் என, திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ரோஷன் அப்துல் ரஹூஃப்பை பற்றி சொல்கிறார். அவரும் இந்த காணொளிக் காட்சியில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தனக்கு நிதர்சனத்தில் காதலர் யாரும் இல்லை என்று சொல்கிறார் பிரியா.

சரி, காணொளி காட்சியில் பிரியா கண்ணால் பேசிய ரோஷன் அப்துல் ரஹூஃப் உடன் பேசினோம்.

படத்தின் காப்புரிமை Instagram

உற்சாகத்தின் உச்சியில் ரஹூஃப்

காணொளி காட்சி வைரலானதால் உற்சாகத்துடன் இருக்கும் ரஹூஃப், தனது இண்ஸ்ட்ராகிராமில் இவ்வாறு எழுதியிருக்கிறார், ''எங்கள் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி, மிக்க நன்றி.''

''எனது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. உங்கள் உள்ளத்துக்கு அருகில் எங்களை கொண்டு சென்றதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஒரு ஆடார் லவ்' என்ற தலைப்பே திரைப்படத்தில் இருக்கும் காதல் உணர்வை வெளிப்படுத்துகிறது. எனவே எங்கள் மீது அன்பை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்''.

தொடர்புடைய செய்தி

கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்? சமூக ஊடகங்களில் வைரலானது எப்படி?

ரோஷனைப் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. அவரது இண்ஸ்ட்ராகிராமில் இருக்கும் புகைப்படங்களை வைத்து விதவிதமாக கதைகள் புனையப்படுகின்றன.

'இப்படி நடக்கும் என்று நினைத்ததேயில்லை'

ரோஷனிடம் நேரடியாக பேசியது பிபிசி. அவர் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாரா என்று கேட்டோம். இல்லை என்று பதிலளித்த அவர், ''நான் நடிப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டதில்லை. ரியாலிடி ஷோவில் பங்கேற்றிருக்கிறேன். அது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்க்கு உதவியாக இருந்தது.''

இனி அவரது அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன, பாலிவுட்டில் நடிப்பீர்களா என்று கேட்டோம், ''வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் முடிவு செய்யவில்லை'' என்கிறார் ரோஷன்.

படத்தின் காப்புரிமை Instagram

நிதர்சனத்தில் காதல் அனுபவம் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்று மறுக்கிறார் ரோஷன். திரைப்படத்தில் உங்கள் காதல் அனுபவத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டோம். ''11-12ஆம் வகுப்பு மாணவனுடைய காதல் கதை இது'' என்று தெரிவித்தார் ரோஷன்.

ஒரு சகோதரர், இரண்டு சகோதரர்கள் என அன்பான குடும்பத்தில் வாழும் ரோஷனின் தந்தை உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

குடும்பத்தினரின் மகிழ்ச்சி

இது குறித்து குடும்பத்தார் எவ்வாறு உணர்கிறார்கள் என்ற கேள்விக்கு ''குடும்பத்தில் அனைவரும் மகிழ்ந்தார்கள்'' என்று கூறும் ரோஷனின் குடும்பத்தில் யாரும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் இல்லை.

பாலிவுட் படங்கள் பார்ப்பதில் விருப்பம் உடைய ரோஷனின் விருப்ப கதாநாயகன் ஷாரூகான். சரி கதாநாயகிகளில் யாரைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு ரோஷனின் பதில், ''பிரியா''. என்று வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :