இளம் வயதில் அனுபவித்த பாலியல் கொடுமை: போராடும் பெண்

இந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள் மீது மூன்று ஆண்டுகளுக்குள் புகார் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்த முடியாது.

Image caption பூர்ணிமா கோவிந்தராஜலு

ஆனால், அவ்வாறு அத்துமீறலுக்கு ஆளான குழந்தைகள் பெரியவர்களான பின்னும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்றால், அவர்களிடம் அத்துமீறிய நபர் அவர்களுக்கு மிகவும் அறியப்பட்ட நபராகவே இருக்க முடியும். அந்த நபர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தவே முடியாது.

கனடாவைச் சேர்ந்த பூர்ணிமா கோவிந்தராஜுலுவுக்கு தற்போது வயது 53. இந்தியாவைப் பூர்விகமாகக்கொண்ட அவர் 1986இல் கனடாவுக்கு குடிபெயரும் முன்பு சென்னையில் வசித்தார்.

தமக்கு ஆறு முதல் 13 வயது வரை தனது ஒன்றுவிட்ட சகோதரியின் கணவரால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டும் பூர்ணிமா, பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பின்பும் குற்றவாளிகள் மீது புகார் கூறுவதற்கு ஏற்ற வகையில் இந்தியச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தியைச் சமீபத்தில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

பூர்ணிமாவைச் சந்தித்த பின் மூன்று ஆண்டுகளுக்கு மேலானபின்பும் குழந்தைகள் புகார் கூறி, வழக்குத் தொடுக்க ஏற்ற வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு முயற்சிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார் மேனகா காந்தி.

"இரவு நேரங்களில் இருட்டில் அவர் என் அருகில் அமர்ந்திருப்பார். அவரது கைகளையும் வாயையும் என் பிறப்புறுப்பில் வைப்பார்," என்று கூறுகிறார் கனடாவில் காட்டுயிர் பாதுகாப்பு வல்லுநராக பணியாற்றும் பூர்ணிமா.

"புணரும் வகையிலான சுரண்டல், இரவு நேரங்களிலும் விடுமுறை நாள் பயணங்களின்போதும் நடக்குமென்றாலும், பகலிலும் என் மீதான பாலியல் தாக்குதல் தொடர்ந்தது," என்று தனது மோசமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் பூர்ணிமா.

படத்தின் காப்புரிமை Purnima Govindarajulu
Image caption இளம் வயதில் பூர்ணிமா

'"நான் தனியாக இருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் என் உள்ளாடைக்குள் அவரது கைகளை விட்டு தடவுவார்."

ஒரு பழமைவாத சூழலில் வளர்ந்த அவருக்கு தனக்கு நடப்பது தவறானது என்பதுகூடத் தெரிந்திருக்கவில்லை.

"நான் என்னைத் தற்காத்துக்கொள்ளக் கூட முயலவில்லை. நான் தவறானவள் என்றும் அழுக்கானவள் என்றும் நினைக்கத் தொடங்கினேன். பாலுறவு குறித்து எனக்கு அப்போது எதுவும் தெரியாது. எனக்கு மூன்று அண்ணன்கள் இருந்தனர். 13 வயதானபோது எனக்கு ஏற்பட்ட மாதவிடாயை புற்றுநோய் என்று நினைத்தேன்," என்கிறார் பூர்ணிமா.

"ரத்தம் படிந்திருந்த என் உள்ளாடையைப் பார்த்த என் உறவினர் பெண் ஒருவர் நான் இறக்கப்போவதில்லை என்றும் இப்போது நான் ஒரு பெண் ஆகிவிட்டேன் என்றும் கூறினார்."

"குழந்தை பெற்றுக்கொள்ள நீ தயாராகிவிட்டாய். இனிமேல் நீ யாரையும் உன்னைத் தொட அனுமதிக்காதே," என்று அப்பெண் பூர்ணிமாவிடம் அறிவுறுத்தியுள்ளார்.

தாமாதமாக கிடைத்தாலும் அந்த அறிவுரை பூர்ணிமாவுக்கு நல்ல ஆலோசனையாக இருந்தது.

முதல் முறையாக தமக்கு இருக்கும் வலிமையை உணர்ந்தார் பூர்ணிமா. அடுத்த முறை அந்த ஆண் அவரை நெருங்கியபோது அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் இந்தியாவில் பல போராட்டங்களை தூண்டியுள்ளன

"உனக்கு விருப்பம் இல்லையென்றால் இதை இனிமேல் நான் நிறுத்திக்கொள்கிறேன்," என்று அந்த நபர் பூர்ணிமாவிடம் கூறியுள்ளார்.

"இதை நான் முன்னரே செய்திருக்கலாம். இத்தனை நாள் இதை நான் ஏன் செய்யவில்லை என்று நான் மிகவும் வருந்தினேன்," என்றார் அவர். தனது பதின் பருவம் முழுதும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்துடன் இருந்த பூர்ணிமா தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கினார்.

உறவினர்களின் முறையற்ற உறவு மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியன இந்தியாவில் மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. 2007இல் நடந்த ஒரு ஆய்வின்படி 53% இந்தியக் குழந்தைகள் ஏதாவது ஒருவித பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அவை அனைத்தும் புகாராகப் பதிவு செய்யப்படுவதில்லை.

பூர்ணிமா கனடாவுக்குச் சென்றபின் 1980களின் இறுதியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் குறித்தது விழிப்புணர்வு அடைந்தார்.

பூர்ணிமாவின் அண்ணன் மனைவி தம்மை பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கிய நபரின் மகள். ஒரு உரையாடலின்போது இது இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என்று பூர்ணிமாவிடம் அவரது அண்ணி கூற, 'இது எனக்கே நடந்துள்ளது' என்றார் பூர்ணிமா. "அது என் அப்பாதானே?" என்று கேள்வி எழுப்பினார் அவரது அண்ணி.

சென்னைக்கு 1991இல் சென்றபோது அந்த ஆணிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பூர்ணிமாவின் அண்ணன். ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்னர் அன்புடன்தான் பூர்ணிமாவைத் தொட்டதாகக் கூறினார் அந்த ஆண்.

"அன்புடன் அதே போல உங்கள் மகளைத் தொட்டுள்ளீர்களா?" என்ற கேள்விக்கு "நிச்சயமாக இல்லை" என்று கூறினாராம் அவர்.

"நான் என் ஆணுறுப்பைப் பயன்படுத்தவில்லை," என்று அந்த ஆண் பூர்ணிமாவின் அண்ணனிடம் கூறியுள்ளார். "ஒரு வேளை சட்டப்படி தாம் செய்தது குற்றமல்ல என்று அந்த நபர் நிறுவ முயன்றார் போலும்," என்கிறார் பூர்ணிமா.

படத்தின் காப்புரிமை change.org
Image caption change.org தளத்தில் மேனகா காந்தி அளித்த பதில்

இந்த விவகாரத்தை அந்த ஆணின் மனைவியிடம் கூறியுள்ளார் பூர்ணிமாவின் அண்ணன். பூர்ணிமாவை அழைத்துப் பேசிய அந்தப் பெண், "நான் அவரை மன்னித்துவிட்டேன். நீயும் அவரை மன்னித்துவிடு. அவர் என் கணவர். அவர் எனக்கு கடவுள்," என்று அப்போது அந்தப் பெண் பூர்ணிமாவிடம் கூறியுள்ளார்.

"அதன்பின் அவரிடம் பேசவே இல்லை. அவர் எனக்கு ஒரு சகோதரி. அவரிடம் பேசாதது எனக்கு ஒரு பேரிழப்பு," என்கிறார் பூர்ணிமா.

பூர்ணிமாவின் சகோதரர் தனது குடும்பத்தினருக்கு அனுப்பிய மின்னஞ்சலைத் தொடர்ந்து அதே ஆண் தம்மையும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியுள்ளதாக கூறியுள்ளார் இன்னொரு பெண்.

அதன்பின் அந்த ஆணிடம் குழந்தைகளை நெருங்க விடக் கூடாது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். 2013இல் ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு பூர்ணிமா சென்றபோது நிலைமை பெரிதாக ஒன்றும் மாறவில்லை என்பதை பூர்ணிமா உணர்ந்தார்.

கடந்த 2015இல் கனடா நாட்டு காவல்துறையிடம் புகார் செய்துள்ளார் பூர்ணிமா. குற்றம் நடந்த இடம், குற்றம் சாட்டப்படும் நபர் ஆகிய அனைத்தும் இந்தியாவில் இருப்பதால் தங்களால் வழக்கு பதிய முடியாது என்று தெரிவித்த கனட காவல்துறையினர் இது குறித்த அறிக்கை ஒன்றை சென்னை காவல்துறைக்கு அனுப்பியுள்ளனர்.

சென்னையில் இருந்த காவல் அதிகாரிகளும் தமக்கு ஆறுதலாக நடந்துகொண்டதகாக கூறும் பூர்ணிமா, சட்டம் அனுமதிக்கும் காலவரம்பு முடிந்து போயுள்ளதால் தங்களால் வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

எனவே குழந்தையாக இருந்தபோது பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் பெரியவர்கள் ஆனபின்னும் புகார் செய்யும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று change.org இணையதளத்தில் மனு ஒன்றைத் தொடங்கினார் பூர்ணிமா. அதில் 1,20,000 பேர் இணையம் மூலம் கையெழுத்திட்டனர். அமைச்சர் மேனகா காந்தியும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்.

Image caption பூர்ணிமாவுக்கு நடந்த கொடுமைகளை தடுக்க முடியவில்லை என்று அவரது அண்ணன் கருண் தஞ்சவூர் வருந்துகிறார்

சமீப நாட்களில் ஊடகத்தினர் பூர்ணிமாவை பாலியல் கொடுமைக்கு உள்ளாகிய அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். "கடந்த ஆண்டே காவல்துறையிடம் அனைத்தையும் கூறிவிட்டேன். இனி நான் சொல்ல எதுவும் இல்லை," ஒரு செய்தி இணையத்தளத்திடம் அவர் கூறியுள்ளார்.

"நான் எனக்கான நீதியை மட்டும் கேட்கவில்லை. இனிமேல் என்னை கொடுமை செய்த அந்த நபருக்கு தண்டனை கிடைக்கும் என்று நான் நம்பவில்லை," என்கிறார் பூர்ணிமா.

"அவருக்கு இப்போது 75 வயது. வழக்கு முடியும் வரை அவர் உயிருடன் இருப்பார் என்று உறுதியாகத் தெரியாது. இத்தகைய நபர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்கள். நான் பிற குழந்தைகளை அவரிடம் இருந்து காக்க முடியவில்லையே என்று வருந்துகிறேன்."

"இந்த கொடுமைகளின் தாக்கம் என் முழு வாழ்கையையும் பாதித்தது. உறவுகளில் நான் மிகவும் சிக்கலுக்கு உள்ளானேன். என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை," என்று வருந்துகிறார் பூர்ணிமா.

எனினும், இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தபின் கொஞ்சம் திருப்தியுடன் உள்ளார் பூர்ணிமா. அந்த ஆணிடம் அவரது உறவினர்கள் நெருங்கிப் பழகுவதில்லை.

அந்த நபரின் மகன் மற்றும் மகளுக்கு இது அவமானத்தை உண்டாக்கும் என்று பூர்ணிமாவின் மூத்த அண்ணன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

"இந்த விவகாரத்தில் குற்றவாளி ஒருவர் மட்டுமே. அது நானில்லை," என்கிறார் பூர்ணிமா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: