#வாதம்விவாதம்: 'இன்றும் காதல் திருமணத்திற்கு சாதி, மதம் தடையாக உள்ளது'

இன்றும் காதல் திருமணத்திற்கு சாதி, மதம் தடையாக உள்ளது படத்தின் காப்புரிமை Getty Images

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு, ''இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணங்கள் சமூகத்தில் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? காதல் திருமணங்கள் அதிகரித்தாலும், சாதி பேதங்கள் இன்னும் குறையாமல்தான் இருக்கிறதா?'' என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''காதல் திருமணங்கள் பெரும்பாலும் விவாகரத்திலேயே முடிகின்றன, இல்லையென்றால் பெற்றோர் பிரித்து விடுகின்றனர். ஒருவருக்கொருவர், விட்டுக்கொடுத்து, புரிதலுடன் வாழும் வாழ்க்கை சாதி மதத்தை தாண்டி வெற்றி பெறுகின்றன.'' என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன் எனும் நேயர்.

''சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் காதல் மற்றும் பெற்றோர் தீர்மானிக்கும் திருமணங்கள் நீதிமன்ற வாசலில் விவாகரத்து வழக்குகளாகக் குவியாமல், அவரவர் இல்லங்களின் அன்பும், அறனும் பெருகினால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும். காதல் திருமணங்களால் ஆணவக் கொலைகள் நடப்பினும், பல காதல்கள் பெற்றோரால் ஏற்கப்படுகின்றன. திருமணங்கள் எவ்வகையில் நடப்பினும், இரு மணங்களில் நல்லெண்ணங்கள் எழுந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இரு குடும்பங்களையும் தன் கண்கள் என கொண்டு வாழும் வாழ்க்கை முறைதான் இன்றைய சமூகத்தின் தேவையாக இருக்கிறது.'' என்கிறார் சக்தி சரவணன்.

''காதல் திருமணங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளபடுவதில்லை. பெரும்பாலான காதல்கள் திருமணம் வரை சென்று சேர்வதில்லை. பெண்கள் தங்கள் பெற்றோர்களுக்காக சில நேரங்களில் காதலை மறந்தும் விடுகின்றனர் மறைத்தும் விடுகின்றனர். சாதி ,அந்தஸ்து போன்றவற்றால் பெரும்பலான காதல்கள் அழிக்கப்படுகின்றன. அதை மீறி திருமணம் செய்வர்களை இந்த சமூகம் பிரிக்கவும் அழிக்கவும் தான் முயற்சி செய்கிறது. காதல் திருமணங்களை முழுமனதுடன் ஒரு பொழுதும் ஏற்கமாட்டார்கள் '' என்பது துரை முத்துச்செல்வனில் கருத்து.

''காதல் என்ற பெயரால் இன்று நடப்பது ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல. இன்றைய காதல் திருமணங்களை விட பெற்றோர்களால் நிச்சயம் செய்யபடும் திருமணமே சிறந்தது.'' என்கிறார் ஷேக் ஜமுனா கான்.

''இன்று மட்டும்தான் காதலர்கள் அன்பு செலுத்த வேண்டுமா? அப்படியானல் 364நாட்கள் காதலர்கள் அன்பை யாரிடம் செலுத்துவார்கள்? உண்மையான அன்பு உள்ளவர்களுக்கு தினம் தினம் காதலர்தினம்தான்,'' என கூறியுள்ளார் தணு கிருஷ்ணா.

''காதலித்து திருமணம் செய்தவர்களே இன்று காதலை எதிர்க்கிறார்கள். காதல் தவறானது இல்லை. காதலிக்கும் முறைதான் தவறானதாக இருக்கிறது,'' என்கிறார் புலிவலம் பாஷா.

''காதலர் தினம் உண்மையான காதலுக்காக இல்லை எல்லாம் பொழுது போக்கே,'' என கூறியுள்ளார் சிலுவை முத்து.

''காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிற எவருக்கு கல்யானம் ஆகக்கூடாது. கடவுளே,'' என பதிவிட்டுள்ளார் செல்வின் ஜோஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: