எந்த போருக்காக காத்திருக்கிறார் மோகன் பகவத்?

ஆர்.எஸ்.எஸ்ஸின் நாக்பூரின் தலைமையகத்திற்குச் சென்று உங்கள் தொண்டர்களை ராணுவத்திற்காக தயார் செய்து கொடுங்கள் என்று கோரிக்கை விடுக்கும் நிலைமை இந்தியாவின் மதச்சார்பற்ற ராணுவத்திற்கு ஏற்பட்டதா?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய ராணுவத்தின் முப்படைகளின் அதிகாரிகளும் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு சென்று, இந்தியாவிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுவிட்டது என்று சொல்வதுபோல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இப்படி கனவு கண்டாரோ என்னவோ?

'போருக்கு படையை தயார் செய்ய எங்களுக்கு ஆறு முதல் ஏழு மாதமாகிவிடும், நீங்கள் காலம் மூன்றே நாட்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை தயார் செய்து கொடுத்து எங்களுக்கு உதவுங்கள்' என்று ராணுவத் தளபதிகள் இறைஞ்சுவார்கள் என்று எதிர்ப்பார்ப்பு இருக்குமோ?

பின்னர், இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் வீதிகளிலும், நெற்றியில் திலகத்துடன், ஒரு கரத்தில் குருவிகளை சுடும் துப்பாக்கியும், மறுகரத்தில் சூலாயுதத்தையும் ஏந்திய பஜ்ரங் தள் தொண்டர்கள், பாரதத் தாயை பாதுகாக்க உயிர் தியாகம் செய்ய முன்வருவார்கள், அதை பார்த்து உத்வேகம் அடைந்து அவர்களை பின் தொடர்ந்து செல்லும் இந்திய ராணுவம் பாகிஸ்தான் அல்லது சீனாவின் எல்லைக்குச் சென்று எதிரிகளை வீழ்த்திவிடும் என்று மனப்பால் குடிக்கிறாரா மோகன் பகவத்?

நகைச்சுவை மற்றும் மிகைப்படுத்தல்

நாட்டை கட்டமைப்பதற்கான ஏலம் நடைபெற்றால் அதில் பங்குபெற, நாட்டில் தங்களைத்தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்றும், அவர்களைத் தவிர அனைவரும் தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்கள் என்று கற்பனை செய்வது மோகன் பகவத் மற்றும் அவரது தொண்டர்கள் ஆகியோரது அடிப்படை அரசியலமைப்பு உரிமையாக இருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty/MANJUNATH KIRAN

ஆனால் மூன்று நாட்களில் ராணுவத்தை தயார் செய்ய முடியும் என்ற மோகன் பகவத்தின் நம்பிக்கை நகைச்சுவையானது, மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை என்று ராணுவக் கலாசாரத்தை நன்றாக அறிந்தவர்கள் பகடி செய்கிறார்கள்.

இது, மாலை வேளையில் ராணுவ கேண்டினில் மது குடித்த அதிகாரி ஒருவர் மதிமயங்கிய நிலையில், காஷ்மீரின் பாரமுல்லாவில் இருந்து வடகிழக்கில் இருக்கும் போம்டிலா வரை சென்று போரிட்டு வந்ததாக மிகைப்படுத்தி பேசுவதற்கு ஒப்பானது இது என்று விமர்சிக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களின் அடிப்படை என்ன?

பிஹார் மாநிலம் முஜாஃப்பர்பூரில் உரையாற்றிய பகவத், "நாம் ராணுவ அமைப்பு கிடையாது. ஆனால், ராணுவத்தில் இருக்கும் கட்டுக்கோப்பும் உறுதியும் நம்மிடம் இருக்கிறது. வீரர்களை தயார்படுத்த பொதுவாக ஆறு-ஏழு மாத காலம் எடுக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை மூன்றே நாட்களில் தயார் செய்துவிட முடியும், இது நமது திறமை" என்று பெருமிதமாக முழக்கமிட்டார்.

நாட்டிற்குத் தேவை ஏற்பட்டால், அதற்கு நாட்டின் அரசியலமைப்பும், சட்டங்களும் கேட்டுக்கொண்டால்… என்பதையும் அவர் முத்தாய்ப்பாக சொன்னார்…

அரசியலமைப்பு இதுபோன்ற கோரிக்கையும் வைக்காது என்பதும் மோகன் பகவத்திற்கு தெரியும். தனியார் ராணுவத்தை உருவாக்குவதற்கு அரசியலமைப்பு ஒருபோதும் அனுமதி கொடுப்பதில்லை.

அடிப்படையில்லாத அலங்கார வார்த்தைகள் இவை என்று மோகன் பகவத்தை விமர்சிப்பவர்கள், 'வானில் இருக்கும் நட்சத்திரங்களை பறித்து ஆபரணமாக அணிவிக்கிறேன்' என்று காதலன் ஒருவன் காதலியிடம் வீரவசனம் பேசுவது போன்ற மிகைபடுத்த வார்த்தைகள் இவை என்று சொல்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

மதத்தின் அடிப்படையில் சட்டங்களையோ, நிர்வாகத்தையோ நடத்த இந்திய அரசியலமைப்பு அனுமதிப்பதில்லை, மத சார்பின்மை என்பதே இந்திய அரசியலமைப்பின் மகோன்னதம்.

ராணுவத்தை அரசியலில் இருந்து தள்ளி வைத்துள்ள அரசியலமைப்பு, அதேபோல் நீதி அமைப்பையும் அரசியலில் இருந்து விலக்கியே வைத்திருக்கிறது.

தனது கனவை, கற்பனையை நிறைவேற்ற இந்திய அரசியலமைப்பு மிகப்பெரிய தடை என்று மோகன் பாகவத்துக்கு தெரியும். எனவேதான், அரசியலமைப்பை மாற்றவேண்டும் என்றும் பரிவாரம் குரலெழுப்புகிறது.

அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தொண்டர் கே.என். கோவிந்தாச்சாரியா முன்வைத்தால், மத்திய அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டேவோ, "அரசியலமைப்பை மாற்றுவதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம்" என்று தைரியமாக சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்வினைகளும், விமர்சனங்களும் வலுவடைந்ததும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அது பற்றிய விளக்கம் வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

"மோகன் பாகவத்தின் உரை தவறாக மக்களின் முன் கொண்டு செல்லப்படுகிறது. அவர் ராணுவத்துடன் எங்கள் அமைப்பை ஒப்பிட்டு பேசவில்லை. பொது சமூகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுடன் ஒப்பீடு செய்தார். ராணுவமே இருதரப்பையும் தயார் படுத்தவேண்டும் என்ற பொருளில்தான் அவர் பேசினார்" என்று ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் டாக்டர் மன்மோஹன் வைத்யா இவ்வாறு விளக்கமளித்தார்.

"இந்திய ராணுவம் மரியாதைக்கு உரியது. நெருக்கடி நிலைகளில், (காங்கிரஸின் நெருக்கடி நிலை அல்ல) ஒவ்வொருவரும் ராணுவத்துக்கு பக்கபலமாக நிற்கவேண்டும். பாகவத் சொன்னது இதுதான், பொதுவாக ராணுவத்தை தயார் செய்ய ஆறு முதல் ஏழு மாத கால அவகாசம் தேவை. ஆனால் அரசியல் சாசனம் அனுமதித்தால் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொண்டர்கள் அதற்கு பங்களிக்கக்கூடிய திறமை கொண்டவர்கள்" என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் செய்தியில் மோகன் பகவத்தின் பேச்சுக்கு சப்பைக்கட்டு கட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மோகன் பகவத் மற்றும் மன்மோகன் வைத்யா இருவரும் சொல்ல வருவது என்ன? இந்திய ராணுவத்திற்கு இணையானது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று ஒப்பிட்டு தங்கள் அமைப்பை மக்களின் மனதில் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்களா?

ராணுவத்தைப் போலவே, சங்க பரிவாரமும், நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்யக்கூடியது என்றும், பலம் வாய்ந்த்து, வல்லமை மிக்கது என்றும் சொல்ல விரும்புகிறார்கள்.

ராணுவம் தனது சீருடையில் தினசரி காலையில் உடற்பயிற்சி செய்கிறது. அதேபோல் சீருடையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் தங்கள் பகுதிகளில் இருக்கும் பூங்காக்களில் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், கோகோ, கபாடி போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுகின்றனர்.

ராணுவ வீரர்களின் அணிவகுப்பு போலவே ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் கொடிகளை ஏந்தியவாறு நகரத்தின் முக்கியப் பாதைகளில் ஊர்வலம் நடத்துகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty/MANJUNATH KIRAN

இரு அமைப்புகளுக்கும் இடையிலான செயல்பாடு, சிந்தனை, இலக்குகளில் உள்ள வித்தியாசம் என்ன?

ராணுவத்தின் மிகப்பெரிய நன்மை விரும்பியாக தங்களை நிரூபிக்கும் பொருட்டு, காஷ்மீரில் ராணுவ ஜீப்பில் ஒரு இளைஞரை கட்டி துன்புறுத்தும் செயலுக்கு இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன, எனவே அவை நாட்டின் அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கையில்,ராணுவ அதிகாரிகளின் கருத்துக்களில் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது.

படத்தின் காப்புரிமை TWITTER

சங் பரிவாருக்கும் ராணுவத்திற்கும் இடையேயான வேறுபாட்டை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னிருக்கும் மிகப்பெரும் சவால். இதில் அது வெற்றிபெறினால், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கனவு நிறைவேறும்.

ஏனெனில் இந்துத்துவ சிந்தனைக்கு தீவிரமாக ஆதரவளித்த சாவர்கர், இந்துத்துவ அரசியலுக்கும், ராணுவத்தில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்ததில் முதல்வர்.

கடந்த நான்கு ஆண்டுகளில், நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் நிர்வாகத்தில், இந்திய அரசியலில் இந்துத்துவா கொள்கை துரிதகதியில் ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த வேகம் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு கூட எதிர்பாராத ஆச்சரியம் அளித்திருக்கும்.

மதச்சார்பின்மை என்ற முழக்கத்தை முன்வைக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆலயத்தில் வழிபாடு செய்யாமல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

சங்க பரிவாரத்தின் அரசியல் சதுரங்கத்தை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசிடமும் எந்த திட்டமும் இல்லை. எனவேதான் பிராமணர் மாநாட்டை நடத்தவும், பகவத் கீதையை விநியோகிக்கும் நிலைக்கும் அவர் தள்ளப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty/SAM PANTHAKY

பஜ்ரங் தள்ளின் பயிற்சி

பாரதிய ஜனதா கட்சிக்கு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரசின் இந்துத்துவா கொள்கை பிடிக்காவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அது விருப்பமானதே.

ராணுவத்தில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது அடுத்த கட்டம். அவர்களுக்கு கட்டுப்பாடு, சீற்றம் மற்றும் திறமையானவர்களாக மாற்றவேண்டும்.

இதற்காக பஜ்ரங்தள் கடந்த பல வருடங்களாக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

பஜ்ரங் தள்ளின் சுய பாதுகாப்பு முகாம்களில், சிறுவர்களுக்கும் "பயங்கரவாதிகளோடு" போராடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்பு, திரிசூலம், சிறிய ரக தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கிகளை பயன்படுத்துவது என பயிற்சியளிக்கின்றனர். இந்த பயிற்சி முகாம்களில், பஜ்ரங் தள் தொண்டர்கள் சிலர் ஒரு முஸ்லிம்களை போன்ற தொப்பி அணிந்து "பயங்கரவாதிகள்" என்று நடித்து தாக்குதல் நடத்த சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இவை உடல்ரீதியாக மட்டுமல்ல, மனோரீதியாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக தயார் செய்வதாக கருதப்படுகிறது. உடுத்தும் விதத்தை கொண்டு நாட்டின் எதிரி யார், அவர்களை எவ்வாறு சமாளிப்பது என்று போதிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

ராணுவத்தில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், இந்திய நாடாளுமன்றம், நீதித்துறை, கல்வி அமைப்பு, காவல்துறை, துணை ராணுவப்படை தவிர, இறுதியாக ராணுவத்தின் மூன்று பிரிவுகளும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும், நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது.

ஆனால் தற்போது இந்திய ராணுவம் மதச்சார்பின்மையுள்ள மற்றும் கடுக்கோப்பான ஒரு அமைப்பாக திகழ்கிறது. இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான மக்கள் ராணுவத்தின் மீது மாறா நம்பிக்கை வைத்துள்ளனர்.

இனவாதக் கலவரங்களை கட்டுப்படுத்துவதில் சிவில் அமைப்புகள் தோல்வியடையும் போது, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, ராணுவம் அழைக்கப்படுகிறது. இந்திய மதச்சார்பற்ற ராணுவத்தின் சிப்பாய்கள் கொடி அணிவகுப்பு நடத்தும்போது, கலகக்காரர்கள் தங்கள் துணிச்சலை இழந்து கலவரங்களை கைவிடுகின்றனர்.

இந்திய ராணுவம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பயிற்றுவிக்கும் என்று மோகன் பகவத் மற்றும் டாக்டர் மன்மோகன் வைத்யாவும் நம்புகிறார்களா என்ற கேள்விதான் எழுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: