பிபிசி புலனாய்வு: பெண்களுக்கான தீர்வு மையம் உண்மையில் தீர்வு தருகிறதா?

படத்தின் காப்புரிமை Getty Images/NOAH SEELAM

"கை உடைந்து வந்த ஒரு பெண்ணின் கணவர் தொலைபேசியில் அழைக்கப்பட்டார். அங்கு பலருடன் வந்த கணவர், மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயார் என்று சொன்னார். எங்கிருந்து தப்பித்து வந்தாரோ, அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டார் அந்த அபலைப் பெண்."

இந்த சம்பவம் நடைபெற்றது எங்கு தெரியுமா? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் மையத்தில் நடந்த கொடுமை இது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மத்திய அரசு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த திட்டத்தைப் பற்றி பலருக்குத் தெரியாது.

இந்த திட்டத்தின் பெயர் 'ஒரே இடத்தில் அனைத்து தீர்வுகளுக்குமான மையம்'.

படத்தின் காப்புரிமை Govt. of India

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நல அமைச்சகத்தின் திட்டம் 'ஒரே இடத்தில் அனைத்து தீர்வுகளுக்குமான மையம்' (one stop centre). நிர்பயா கொடூர சம்பவத்திற்கு பிறகு, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் உதவுவதற்கான ஒரே கூரையின் கீழ் அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் முன்முயற்சியாகவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, மனித கடத்தல், அமில தாக்குதல் பாதிப்புகள் போன்றவற்றிற்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, மருத்துவ, சட்டம் மற்றும் மனநல மருத்துவர் என அனைத்து உதவிகளும் ஒரே மையத்தில் கிடைக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக அரசு கொண்டு வந்த திட்டம் இது.

நாடு முழுவதிலும் 166 மாவட்டங்களில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும், இதுபற்றிய தகவல்கள் பெண்களுக்கு தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, பிரச்சனைகளுக்கு ஆறுதல் வழங்கும் மையங்களே பிரச்சினைகளிலும் சிக்கல்களிலும் சிக்கித் திண்டாடுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images/MONEY SHARMA
Image caption பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி (நடுவில்)

மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்த உதவி மையங்களின் நிலை என்ன, பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு அவை எவ்வாறு உதவி செய்கின்றன என்று பிபிசி தெரிந்து கொள்ள விரும்பியது.

'உதவி என்பது இரண்டாம்பட்சம்'

பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறான உதவிகள் செய்யப்படுகின்றன என்று ஹரியானா மாநிலம் ஹிஸாரில் உள்ள உதவி மையத்தின் ஊழியர்களிடம் கேட்டோம். "ஹோட்டலில் இருந்து உணவு வரவழைத்து அவர்களின் பசியாற்றுவோம்" என்றார்கள்.

'பல்நோக்கு ஊழியர்களாக' பணிபுரியும் ஒரு இளைஞன் இது பற்றி பேச முதலில் மறுத்துவிட்டார். பலமுறை கேட்டபோது, "பிரச்சனையால் பாதிக்கப்பட்ட யாரும் வரவில்லை என்பதால், எதுபோன்ற உதவிகள் இங்கு செய்யப்படும் என்று தெரியாது" என்று அவர் பதில் கூறினார். மேலும், "இங்கு வருபவர்கள் இரவில் மட்டுமே வருகிறார்கள். நான் இரவில் இங்கு தங்குவதில்லை, எனவே எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறினார்.

Image caption ஹிசாரில் உள்ள உதவி மையம்

மகளிர் காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தில் காலை 11 மணி அளவில் நிலவிய அமைதியை பார்த்தால், நோயாளிகளே இல்லையோ என்று தோன்றியது.

இந்த மையத்தில் ஒரு அறைக்கு 'ஒன் ஸ்டாப் செண்டர்' என்று பெயரிடப்பட்டிருந்தது.

அந்த அறையில் தலா இரண்டு நாற்காலிகளும், மேசைகளும் இருந்தன. அங்கிருந்த 4-5 படுக்கைகளில் ஒன்றில் மட்டும் ஒருவர் படுத்திருந்தார். நோயாளி என நினைத்து அவரிடம் பேசலாம் என்று அருகில் சென்றால் அவர் சுகாதார நிலைய ஊழியர் என்று தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் வந்தாலும், நோயாளிகள் வந்தாலும் அங்கு தான் அமரவேண்டும்.

வழிகாட்டுதல்களின்படி, அங்கு மைய நிர்வாகி ஒருவர் இருக்கவேண்டும், ஆனால் அவர் வரவில்லை என்று தெரியவந்தது.

அங்கு இருந்த இரண்டு பணியாளர்களும் பல்வேறு பணிகளை செய்யும் பல்நோக்கு பணியாளர்களே.

அதன் நிர்வாகி சுனிதா யாதவிடம் தொலைபேசியில் பேசியபோது செஞ்சிலுவை அலுவலகத்தில் இருப்பதாகக் கூறினார்.

உண்மையில், அவருக்கு மூன்று இடங்களில் பணிபுரியும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு இடத்திலும் அவரால் அமர்ந்து பணிபுரிய முடியாது. ஒருவருக்கு மூன்று பொறுப்பு!

படத்தின் காப்புரிமை Getty Images

"ஊழியர்கள் அனைவரும் இருந்தால் தான் பயிற்சி கொடுக்கப்படும், அதுவரை நாங்களே பணிபுரியவேண்டும். இங்கு ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டும்தான் இருக்கிறார். பகலில் அவர் பணிபுரிந்தால், இரவில் யார் பணியில் இருப்பார்கள்? பாதிக்கப்பட்ட யாராவது வந்தால் அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பது? பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து ஆட்களை நியமிக்கிறோம். பணியாளர், மனநல ஆலோசகர், சட்ட உதவி, மருத்துவ உதவி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என யாரும் இங்கு கிடையாது" என்கிறார் உதவி மைய நிர்வாகி சுனிதா யாதவ்.

சுனிதா யாதவின் முன் இருக்கும் சவால்களை பட்டியலிட்டால் அது நீள்கிறது. அவர் கூறுகிறார், "மையத்திற்கு இடப் பற்றாக்குறை இருக்கிறது, நாங்கள் விண்ணப்பித்திருக்கிறோம், ஆனால் இதுவரை கிடைக்கவில்லை."

2016 டிசம்பர் 30ஆம் தேதியன்று இந்த மையம் துவங்கியதாக ஆவணங்கள் தெரிவித்தாலும், இதுவரை 39 வழக்குகள் மட்டுமே இங்கு வந்துள்ளன.

குடும்ப வன்முறை, குடும்ப சண்டைகள் மட்டுமே பதிவாகி உள்ளன. மனித கடத்தல் வழக்கு ஒன்றும் பதிவாகியுள்ளது. அதற்கு தீர்வு காணப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மகளிர் காவல் நிலையங்களும், உதவி மையங்களும் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் மிகவும் தனிமையான பகுதியில் அமைந்துள்ளன. எனவே அங்கு செல்வதற்கு பெண்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன.

வழக்கின் தீர்வு எப்படி இருக்கும்?

'பிரகதி சட்ட உதவி மையம்' என்பது ஹிஸார் நகரில் இயங்கும் அரசு சாரா அமைப்பு. இதை நடத்துவதும் பெண்களே.

இந்த மையங்களில் தற்காப்பு மற்றும் சமாதானம் பேசும் சூழல் நிலவுவதாக சொல்கிறார் அங்கு சட்ட உதவிகள் செய்துவரும் நீலாம் பூட்டானி. இந்த மையங்களின் நோக்கம் அது அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பூனம் என்ற பெண்ணை சந்தித்தோம். கடந்த மூன்று நாட்களாக சர்சோத் கிராமத்தில் இருந்து ஹிஸார் மகளிர் காவல் நிலையத்திற்கு அவர் தினமும் வந்து செல்வதாக தெரிவித்தார்.

பூனம் 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 12 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பூனம், நீண்ட காலமாக தனது மகள்களுடன் பெற்றோர் வீட்டில் இருக்கிறார்.

Image caption தனக்கு நேர்ந்த குடும்ப வன்முறையை பற்றி பிபிசியிடம் கூறும் பூனம்

"ஒரு வருடத்திற்கு முன்பு நான் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று, புகார் செய்தபோது, நீதிமன்றத்திற்கு போ என்று சொன்னார்கள். இப்போது மூன்று நாட்களாக செல்கிறேன், ஆனால் விசாரணை நடைபெறவில்லை. ஒவ்வொரு நாளும் பேருந்து கட்டணம் கொடுக்கக்கூட வழியில்லாமல் தவிக்கிறேன். தையல் வேலை செய்து பிழைக்கும் நான் தினமும் இங்கு வந்து செல்வதற்கு பணத்திற்கு என்ன செய்வேன்? இங்கு ஒன்றும் நடக்காது என்றாவது சொல்லிவிடுங்கள்" என்று பரிதவிக்கிறார் பூனம்.

ஒரே இடத்தில் நிவாரணம் கொடுக்கும் அரசின் ஒன் ஸ்டாப் செண்டருக்கு பூனம் ஏன் அனுப்பப்படவில்லை?

தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது, யாரும் எதுவும் சொல்லவில்லை என்று சொல்கிறார் பூனம்.

உண்மையில் கல்வியறிவற்ற ஏழைகளுக்கு நியாயம் கிடைப்பது கடினமானது என்கிறார் இந்த மையத்தில் பணிபுரியும் சகுந்தலா ஜகார்.

"காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனையின் வீரியம் புரியாததுதான் இதுபோன்ற திட்டங்களின் செயல்பாட்டை தடுக்கிறது. இந்த மையங்களைப் பற்றி விளம்பரங்கள் செய்யப்படாவிட்டால், பெண்களுக்கு எப்படி அரசின் உதவி மையத்தை பற்றித் தெரியும்? " என்று கேட்கிறார் சகுந்தலா.

குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் மையம்

மத்திய பிரதேச மாநிலம் சாஹரில் அமைக்கப்பட்டுள்ள ஒன் ஸ்டாப் செண்டர் குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் மையமாக மாறிவிட்டது.

Image caption சாஹரில் உள்ள ஒன் ஸ்டாப் செண்டர்

சாஹரில் உள்ள ஒன் ஸ்டாப் மையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுகிறது என்று அந்த மையத்தின் நிர்வாகி ராஜேஸ்வரி ஸ்ரீவஸ்தவ்விடம் கேட்டோம். அவர் சொல்கிறார், "ஒரு பெண் எங்களிடம் வந்தாள். அவர் சாஹரில் தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். நாங்கள் அவருடைய கணவரிடம் விசாரித்தபோது, மனைவியை அழைத்துச் செல்லத் தயாராக இருப்பதாக சொன்னார். கணவனுடன் சென்று அங்கேயே மகள்களுடன் வாழவேண்டும் என்று அறிவுரை சொன்னோம்".

நான்கு பெண் குழந்தைகள் இருந்த அந்த பெண்ணுக்கு சட்ட உதவி, மருத்துவ உதவி மற்றும் மன நல ஆலோசனை தேவைப்பட்டது. ஆண் குழந்தை இல்லை என்பதால் கொடுமைப்படுத்தப்பட்ட அந்த பெண், சித்திரவதை செய்யப்பட்ட இடத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டாள்.

படத்தின் காப்புரிமை Getty Images/SHAMMI MEHRA

சாஹர் மையம் மருத்துவமனைக்கு அருகில் இருக்கிறது. வாடகை கட்டடத்திலேயே இயங்குகிறது. அங்கிருக்கும் மூன்று அறைகளில், இரண்டு பூட்டிக்கிடக்கின்றன. மற்றொன்று, நிர்வாகி ராஜேஸ்வரி ஸ்ரீவஸ்தவாவின் அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஜனவரி 15ஆம் தேதிதான் ஊழியர்கள் வந்ததாக ராஜேஸ்வரி கூறினார்.

இருப்பினும், 2017 ஏப்ரல் மாதத்திலேயே இந்த மையம் திறக்கப்பட்டுவிட்டது என்பதையும் அவர் கூறினார்.

இந்த மையம் பற்றி பெண்களுக்கு தகவல் தெரிவிப்பதைப் பற்றி கேட்டபோது, மத்திய பிரதேச அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஷெளர்ய தள் மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்களே பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வருவதாகக் கூறினர்.

மையம் பற்றி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை

சாஹர் பகுதியில் அங்கன்வாடி பணியாளர் ஒருவரிடம் பேசினோம்.

இதுபோன்ற மையம் அல்லது `ஒன் ஸ்டாப் மையம்` பற்றி தெரியாது என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களை திட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டதாகவும், தான் அவ்வாறே செய்வதாகவும் அவர் சொல்கிறார்.

அங்கிருந்து, அவர்கள் சட்ட உதவி மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images/NOEMI CASSANELLI

பாதிக்கப்பட்ட ஒரு பெண் வீட்டிற்கு திரும்பி செல்ல விரும்பவில்லை என்றால், என்ன செய்வார்கள் என்று கேட்டோம். அவருக்கு எந்த உதவியும் கிடைக்காது என்கிறார் அந்த அங்கன்வாடி பணியாளர். பாதிக்கப்பட்டவரே தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொள்ளவேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்களும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சின் கீழ் வருகின்றனர். இருந்தாலும்கூட தங்களது சொந்தத் துறையை சேர்ந்த பணியாளர்களையே தங்கள் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் அமைச்சகம் இருக்கிறது.

சாஹரில் இருக்கும் சாவித்ரி சென் 2013ஆம் ஆண்டு முதல் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் உடைந்துபோய் அழ ஆரம்பித்து விட்டார்.

Image caption குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட சாவித்ரி உதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறார்

"எனக்கு உதவக்கூடிய எந்த வசதிகளும் இங்கில்லை. என் கணவர் அடித்த அடியில் என் குழந்தை வயிற்றிலேயே கலைந்துவிட்டது. அவர் மீது புகார் கொடுக்க முதன்முறையாக மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது இரவு10.30 மணி வரை அங்கேயே இருந்தேன். ஆனால் அடுத்த நாள் காலையில் வழக்கறிஞர் உதவியுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது." என்றார் அவர்.

பெண்களுக்கான உதவி மையத்தை பற்றி தனக்கு அப்போது தெரியாது என்று கூறினார். ஆனால் அண்மையில்தான் ராஜேஸ்வரியை பற்றி அவருக்கு தெரியவந்துள்ளது.

கடந்த 3-4 நாட்களாக தொலைபேசியில் ராஜேஸ்வரியை அழைத்திருக்கிறார்கள், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பிபிசி சார்பில் நாங்கள் அங்கு சென்றது, சாவித்ரிக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. சுற்றியுள்ள பெண்களை எங்களிடம் பேசவைத்தார். அவர்களுடைய வலியும், வேதனையையும் தெரிந்துக் கொண்டோம். இன்னும் சொல்லப்படாத பல உண்மை சம்பவங்கள் இருப்பதை உணர்ந்தோம்.

அரசின் உதவி மையங்கள் அவர்களுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை புரிந்துக் கொண்டோம்.

அமைச்சகத்திடம் இருந்து பதில் இல்லை

மத்திய அரசு இணையதளமான பி.ஐ.பி.யின் படி, இந்த திட்டம் 2015ஆம் ஆண்டு 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது.

2016-17 ஆண்டில் 75 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 2018-19ல் 105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கருத்தை தெரிந்து கொள்ள விரும்பினோம்.

இந்த இரு மையங்களிலும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று கேட்டோம், மேலும் ஒதுக்கப்பட்டத் தொகையில் அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள், மீதத் தொகையை என்ன செய்தார்கள் என்றும் தெரிந்துக் கொள்ள விரும்பினோம்.

எனவே பிப்ரவரி ஐந்தாம் தேதியன்று அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்பினோம். ஆனால் இந்தக் கட்டுரை வெளியிடப்படும் வரை பதில் ஏதும் வரவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: