வங்கி மோசடி செய்தவருக்கு மோதியுடன் என்ன வேலை? காங்கிரசின் 5 கேள்விகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,360 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை, சில ஊழியர்களின் உதவியுடன் தொழில் அதிபர்கள் நிரவ் மோதி, நிஷால் மோதி, அமி நிராவ் மோதி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மோசடி செய்துள்ளதாகவும், இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அந்த வங்கியின் சார்பில் புலானய்வு அமைப்பான சி.பி.ஐ இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நிரவ் மோதி (இடது), நரேந்திர மோதி (வலது)

பஞ்சாப் நேஷனல் வங்கி உத்தரவாதம் அளித்ததாக, அந்த வங்கியின் ஊழியர்கள் உதவியுடன் போலி ஆவணங்கள் தயார் செய்து, தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக குறுகிய கால கடனை சில இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் வாங்கி அவர்கள் மோசடி செய்துள்ளதை அந்த வங்கி கண்டறிந்த பின்னரே இந்த விவகாரம் வெளியானது.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கச் சென்றபோது, அவருடன் சென்ற இந்திய தொழில் அதிபர்களின் குழுவில் நிரவ் மோதியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

  1. டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியுடன் நிரவ் மோதி என்ன செய்து கொண்டிருந்தார்?
  2. பிரதமர் மோதியின் நிர்வாகத்தின்கீழ் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி நடைபெற்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பு?
  3. இந்த முறைகேடு குறித்து பிரதமர் மோதிக்கு ஜூலை மாதமே தகவல் கூறப்பட்டுள்ளது. மோதி தலைமையிலான அரசு அப்போதே ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
  4. ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் மீறி எப்படி இந்த முறைகேடு நடைபெற்றது? பல்லாயிரம் கோடி மோசடி நடைபெற்றது எந்த தணிக்கையாளர் அல்லது கண்காணிப்பு அதிகாரிக்கும் தெரியாமல் போனது என்றால் யாரோ அதிகாரம் மிக்கவர் நிரவ் மோதியைப் பாதுகாக்கிறார்கள் என்று பொருள். அது யார்?
  5. இந்திய வங்கித் துறையின் ஆபத்துக் கால மேலாண்மை வழிமுறைகளும், மோசடிகளை கண்டறியும் வழிமுறைகளும் எப்படி வேலை செய்யாமல் போயின?

இதனிடையே இந்தியாவைச் சூறையாடுவதற்கான வழி, பிரதமர் மோதியை கட்டி அணைப்பது மற்றும் அவருடன் டாவோஸ் மாநாட்டில் பங்கேற்பது, அந்த செல்வாக்கை வைத்து 12,000 கோடி ரூபாய் திருடி, அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும்போது, மல்லையாவைப் போல நாட்டை விட்டே தப்பி விடுவது ஆகியன என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் சார்பில் பதில் அளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இந்த விவகாரத்தில் யாரும் விட்டுவைக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரவி சங்கர் பிரசாத்

நிரவ் மோதிக்கு சொந்தமான 1300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவரது கடவுச்சீட்டை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நிரவ் மோதிக்கு எதிராக தேடுகை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் ரவி சங்கர் பிரசாத்.

டாவோஸ் மாநாட்டுக்கு பிரதமர் மோதியுடன் சென்ற தொழில் அதிபர்களின் குழுவில் நிரவ் மோதி இடம்பெறவில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: