விமான பணிப் பெண் பணி மறுக்கப்பட்டதால் கருணைக் கொலைக்குக் கோரும் திருநங்கை

ஏர் இந்தியா நிறுவனத்தில் தொடர்ச்சியாக விமானப் பணிப்பெண் வேலை மறுக்கப்பட்டதால் கருணைக் கொலை செய்ய தனக்கு அனுமதி வழங்க வேண்டுமென சென்னையைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தன்னுடைய பாலினம் காரணமாகவே தனக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், தன்னுடைய வாழ்வே தற்போது கேள்விக்குறியாகிவிட்டதாகவும் திருநங்கையான ஷானவி பொன்னுச்சாமி குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வளர்ந்த பொறியாளரான பொன்னுசாமி, சில தனியார் நிறுவனங்களிலும் ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலும் பணியாற்றிவந்தார். அதன் பிறகு, 2014ஆம் ஆண்டில் அவர் தன் பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதற்குப் பிறகு 2016ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் விமானப் பணிப் பெண் வேலைக்கு விண்ணப்பித்தார். தனக்கு நான்கு முறை அழைப்புக் கடிதங்கள் வந்ததாகவும் ஆனால், ஒரு முறைகூட தான் தேர்வு செய்யப்படவில்லையென்றும் கூறுகிறார் ஷானவி. தன்னை ஏன் தேர்வுசெய்யவில்லையென்று கேட்டபோது, பெண்கள் மட்டுமே அந்தப் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள் என அறியவந்ததாகவும் கூறியிருக்கிறார்.

பிரதமருக்கு கடிதம்

இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக 2017ஆம் ஆண்டு ஆகஸ்டில், தில்லியில் உள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அலுவலகத்திற்குச் சென்றபோதும், அங்கிருக்கும் அதிகாரிகளைச் சந்திக்க முடியவில்லையென்று தெரிவிக்கிறார் ஷானவி.

இதற்குப் பிறகு இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதிய ஷானவி, 2017 நவம்பரில் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் நான்கு வாரங்களுக்குள் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் பதிலளிக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அமைச்சகம் இதுவரை இது தொடர்பாக பதில் மனு ஏதும் தாக்கல் செய்யவில்லை என்கிறார் ஷானவி.

தற்போது தான் வாழவே வழியில்லாமல் இருப்பதால், தான் கருணைக் கொலைசெய்துகொள்ள அனுமதிக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார் ஷானவி.

இது தொடர்பாக தானே எடுத்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதிலும் மேலே குறிப்பிட்ட விவரங்களைத் தெரிவித்திருக்கிறார். "வாழ்க்கையே கேள்விக் குறியாக இருக்கும்போது எப்படி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து போராட முடியும்? எனக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையே போய்விட்டது" என்று அந்த வீடியோவில் அவர் கூறயிருக்கிறார்.

"விதிகளை திருத்த வேண்டும்"

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய ஷானவியிடம், விமான பணிப் பெண் வேலையே வேண்டுமென வலியுறுத்துவது ஏன் எனக் கேட்டபோது, "எனக்கு அந்த வேலைதான் தெரியும். அதற்குத்தான் பயிற்சி எடுத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

"பெண்களை மட்டுமே விமானப் பணிப் பெண் பணிக்கு தேர்வுசெய்ய முடியும் என விதிகள் இருப்பதால்தான் தன்னை அந்தப் பணிக்கு சேர்க்க முடியாத நிலையில், திருநங்கைகளையும் பணியில் சேர்க்கும் வகையில் விதிகளைத் திருத்த வேண்டும்" என்கிறார் ஷானவி.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தாங்கள் இது குறித்து கருத்து ஏதும் கூற இயலாது என ஏர் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: