எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி ஓராண்டு நிறைவு: சாதித்தது என்ன?

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வுசெய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்த ஆட்சி எதிர்கொண்ட சவால்கள், சாதனைகள், பா.ஜ.கவுடனான உறவு உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிபிசி தமிழிடம் பேசினார் தமிழக தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன். அந்தப் பேட்டியிலிருந்து.

பாண்டியராஜன்

பட மூலாதாரம், Facebook

கே. எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இந்த ஆட்சி என்ன சாதனைகளைப் புரிந்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

ப. இந்த ஆட்சியின் துவக்கத்தில் நானும் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இடம்பெறவில்லை. தர்மயுத்தம் என்ற பெயரில், பிரிந்து தனியாக இயங்கிவந்தோம்.

என்ன பிரச்சனை என்பது எல்லோருக்குமே தெரியும். பிறகு, தினகரன் உள்ளிட்டவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட பிறகு மீண்டும் ஆட்சியில் இணைந்திருக்கிறோம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் பதவி விலகி, எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றபோது இந்த அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று பலத்த விவாதங்கள் நடந்தன.

ஆனால், அதையெல்லாம் மீறி, மிகவும் சுமுகமான முறையில் ஓராண்டை இந்த அரசு கடந்திருக்கிறது. அதுவே குறிப்பிடத்தக்க சாதனைதான்.

தவிர, முதலீடுகளை ஈர்க்க விரைவிலேயே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தவிருக்கிறோம். நிறைய முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கிறோம்.

கே. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எதிர்த்த உதய் திட்டம், குறிப்பிட்ட பிரிவினருக்கான பொது விநியோகத் திட்டம் போன்றவற்றுக்கு தற்போதைய அரசு ஆதரவு தெரிவித்து ஒப்புதல் அளித்துவிட்டது. அரசு நீடித்து இருப்பதற்கு கொடுக்கப்பட்ட விலையா இது?

ப. இதோ பாருங்கள், உதய் திட்டத்தைப் பொறுத்தவரை, அந்தத் திட்டம் குறித்து தவறான பல கருத்துகள் பரப்பப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், மின்வாரியத்தின் கடனை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதுதான் அந்தத் திட்டம்.

ஜெயலலிதா இந்தத் திட்டத்தின் பல அம்சங்களை எதிர்த்தார். குறிப்பாக, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற விதியை அவர் எதிர்த்தார். அந்த விதி நீக்கப்பட்ட பிறகே நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

Targetted PDS எனப்படும் குறிப்பிட்ட பிரிவினருக்கான பொது விநியோகத் திட்டத்தைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, நாடு முழுவதும் மத்திய அரசு செயல்படுத்துகிறது.

இதை நாம் மட்டும் ஏற்கமாட்டோம் என்று சொல்ல முடியாது. இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கான பொது விநியோகத் திட்டம் என்பது, அடிப்படையில் மத்திய அரசு நியாய விலைக் கடைகளில் வழங்கும் பொருள்களுக்கான மானியத்தைக் குறைக்கப் போகிறார்கள்.

ஏற்கனவே மத்திய அரசு குறைவாகத்தான் வழங்கிவருகிறது. தற்போது இந்த மானியக் குறைப்பினால் ஏற்படும் இழப்பையும் மாநில அரசு ஏற்று வருகிறது.

பட மூலாதாரம், TWITTER

இதன் காரணமாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் ஏதாவது குறைக்கப்பட்டிருக்கிறதா, இல்லையே.

ஜி.எஸ்.டியைப் பொறுத்தவரை, தமிழகத்தைப் பொறுத்தவரை நன்மையே விளைந்திருக்கிறது என்றுதான் சொல்வேன். ஆகவே, தமிழகத்தின் நலன்கள் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

கே. இந்த ஆட்சி நிலைத்திருக்க, குறிப்பாக அரசியல் ரீதியாக அ.தி.மு.க. தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள மத்திய அரசு உதவவில்லையா?

ப. மத்திய அரசு அரசியல் ரீதியாக என்ன உதவியைச் செய்தது. இரட்டை இலை எங்கள் அணிக்குக் கிடைத்தது என்பது தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் எடுத்த முடிவு. அதற்கும் மத்திய அரசுக்கும் என்ன தொடர்பு?

கே. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தேர்வு செய்வதில் என்ன பிரச்சனை? ஏன் இவ்வளவு நீண்ட இழுபறி?

ப. ஓராண்டிற்கு முன்பாகவே இதை நாம் இறுதிசெய்திருக்க வேண்டியது. மத்திய அரசு ஏன் இதில் இழுத்தடிக்கிறது என்பது தெரியவில்லை.

முதலில் இதில் பிரச்சனைகள் இருந்தது நிஜம்தான். சசிகலா அவர்கள் கட்சியில் இருந்தபோது, இந்தத் திட்டத்தை மன்னார்குடிக்கு அருகில் உள்ள செங்கிப்பட்டிக்கு கொண்டுசெல்ல வேண்டுமென நினைத்தார்கள்.

ஆனால், மதுரைக்கு அருகில் இருந்த இடம் எல்லாவிதத்திலும் நல்ல இடமாக இருந்தது. ஓ. பன்னீர்செல்வம் பதவி விலகி, எடப்பாடி அவர்கள் பதவியேற்றிருந்த, சசிகலா கட்சியில் இருந்த காலகட்டத்தில் செங்கிப்பட்டியை ஒரு மாற்று இடமாக பரிந்துரைத்தது உண்மைதான்.

அதற்குப் பிறகு ஐந்து இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் எந்த இடமாக இருந்தாலும் சரி என்று மத்திய அரசிடம் கூறிவிட்டோம்.

அது தொடர்பான முடிவை எடுக்க மத்திய அரசு ஏன் தாமதிக்கிறது என்பது தெரியவில்லை.

நீதிமன்றமும் ஒரு மாதத்திற்குள் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென அறிவித்திருக்கிறது.

இந்த உத்தரவையாவது மதித்து அவர்கள் அறிவிப்பார்கள் என்று நினைக்கிறோம். நமக்குள் இருந்த குழப்பத்தை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்களோ என்று தோன்றுகிறது.

கே. இந்த ஓராண்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் வரவில்லையே ஏன்? இங்குள்ள அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமா?

ப. ஆவடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் பல்நோக்கு தொழிற்பூங்கா மிக முக்கியமான திட்டம்.

டிசிஎஸ், காக்னிஸாண்ட் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் இதற்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள். உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டில் போட்ட திட்டங்களில் மூன்றில் இரண்டு பங்குத் திட்டங்கள் தற்போதும் நிலுவையில் இருக்கின்றன.

62 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்திருக்கின்றன. 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கில் ஒரு பங்குதான் வந்திருக்கிறது. வந்திருக்கும் திட்டங்களில் சில பெரிய திட்டங்கள் இருக்கின்றன.

நீங்கள் சொல்வது ஒருவகையில் நிஜம்தான். நிச்சயமற்ற தன்மை ஒரு காலகட்டம்வரை இருந்தது. அந்த நிலை கடந்த ஆறு மாதங்களில் மாறியிருக்கிறது.

பட மூலாதாரம், Facebook

ஒரு நிலையான பொருளாதாரமாக மாறியிருக்கிறோம். இந்த காலகட்டத்தில், தொழில் துவங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் பல மாநிலங்கள் நமக்கு முன்பாகச் சென்றுவிட்டன.

கடந்த 21 மாதங்களில் இது நடந்துவிட்டது. உண்மையில் ஜெயலலிதா இருக்கும்போதே, குறிப்பாக 2016 மார்ச் மாதம் வெளிவந்த பட்டியலிலேயே தமிழகம் பின்தங்கிவிட்டது.

அதற்குப் பிறகு தொடர்ச்சியாக விழுந்துகொண்டேயிருந்தோம். இப்போது எழத் துவங்கியிருக்கிறோம். Ease of doing business Portal உருவாக்கப்பட்டிருக்கிறது.

பல விஷயங்களை எளிமைப்படுத்துவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. விரைவிலேயே மீண்டும் நாம் முன்னிலை பெறுவோம் என நம்புகிறேன்.

கே. உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென பல முறை நீதிமன்றமே கெடுவிதித்த பிறகும் அரசு ஏன் தேர்தலை நடத்தாமல் இருக்கிறது?

ப. முதலில் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு தி.மு.க. தொடுத்த வழக்குதான் காரணம்.

பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், தொகுதி வரையறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள்.

நீதிமன்றமும் அதற்கு உத்தரவிட்டது. இதையடுத்து தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்கப்பட்டது.

அதனால் சற்று காலதாமதம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் ஒரு அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்தது.

இல்லையென்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது. இப்போது எந்தத் தடையும் இல்லை.

தொகுதி மறுவரையறை முடிந்துவிட்டது. அறிக்கை வெளியிட வேண்டியதுதான் பாக்கி. ஏப்ரல் இறுதிவாக்கில் தேர்தல் வந்துவிடும் என நினைக்கிறேன்.

கே. ஆரம்பத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுடன் நெருக்கமாக இருந்த நீங்கள், கடந்த சில நாட்களாகவே எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துவருகிறீர்கள். பா.ஜ.கவும் அதேபோலத்தான் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துவருகிறது. என்ன நடந்துகொண்டிருக்கிறது?

ப. ஜெயலலிதா காங்கிரசையும் பா.ஜ.கவையும் சமதூரத்தில்தான் வைத்திருந்தார். அதேபோலத்தான் இ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

நாங்கள் நெருக்கமாக இருந்தது போல ஊடகங்கள் கற்பனை செய்தன. ஓ.பன்னீர்செல்வம் அடிக்கடி பிரதமரைச் சந்தித்ததும் அவர்களுக்கு இடையிலான நட்பும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், அரசியல்ரீதியாகப் பார்த்தால் இரு கட்சிகளுமே எப்போதும் நெருக்கமாக இருக்கவில்லை. முதல்வர் என்ற முறையில் எடப்பாடி அவர்களுடன் ஒரு நட்பு இருக்கிறது.

அதை ஒரு பலவீனத்தின் அறிகுறியாகப் பார்க்க வேண்டியதில்லை. எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்திருக்கிறோம்.

பிரிந்துவிட்டீர்களே என்று கேட்டால், நாங்கள் ஏதோ சேர்ந்திருந்ததைப் போல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அது உண்மையல்ல.

கே. பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியபோது பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்தார். திடீரென தமிழகத்தில் பயங்கரவாதிகள் எளிதாகச் செயல்படுகிறார்கள் என்கிறார்.

ப. (சற்று நேர மௌனம்) நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை உண்டு. கடந்த 2-3 மாதங்களாக மத்தியிலிருந்து வரக்கூடிய குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள், பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் போன்றவர்கள் அரசைக் கடுமையாக விமர்சிக்கும் தொனியில் பேசுகிறார்கள்.

நாங்கள் அதை பணிந்து ஏற்கவில்லை. தகுந்த பதிலடி தருகிறோம். செய்யும் நல்ல விஷயங்களைக்கூட பாராட்டுவதில்லை.

முன்பு நிலைமை அப்படியில்லை. நிலைப்பாடுகள் கடுமையாகத்தான் இருக்கின்றன. இது எந்த அளவுக்குப் போகுமென்று தெரியவில்லை.

ஜெயலலிதா வாழ்க்கையின் 10 முக்கிய தருணங்கள்

காணொளிக் குறிப்பு,

ஜெயலலிதா: 10 முக்கிய வாழ்க்கை தருணங்கள்

மத்திய அரசுடன் நாங்கள் நல்லுறவைத்தான் விரும்புகிறோம். கட்சி ரீதியாக எப்போதுமே தொடர்பு இல்லை.

ஜெயலலிதா இருக்கும்போது தனியாகத்தான் தேர்தலைச் சந்தித்தார். தற்போதைய தலைமையும் அதே பாதையில்தான் செல்கிறது எனக் கருதுகிறேன்.

கே. டிடிவி தினகரன் ராதாகிருஷ்ணன் நகரில் வெற்றிபெற்ற பிறகு, பா.ஜ.க. உங்களைவிட்டு விலகியதாகச் சொல்லலாமா?

ப. அது ஒரு யூகம். மத்திய உளவுத் துறை இருக்கிறது. கட்சிக் கட்டமைப்பு யாரிடம் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அ.தி.மு.கவின் பலம் யாருக்கும் கிடையாது என்பதை உளவுத் துறை சொல்லியிருக்கும். ஆகவே, தேர்தல் முடிவு இந்த விலகலுக்குக் காரணம் என நினைக்கவில்லை. இந்தத் தேர்தல் முடிவு, ஒரு விதிவிலக்கு. டிடிவி தினகரனுக்கு அவ்வளவு ஆதரவு இருந்தால், அவரால் ஏன் பெரிய கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை? இந்தக் கேள்வியை அவர்களும் கேட்டுப்பார்ப்பார்கள். ஆகவே தேர்தல் முடிவை ஒரு காரணமென நினைக்கவில்லை. டிடிவி தினகரன் பா.ஜ.கவைத் திட்டி, கடுமையான நிலைப்பாடு எடுத்த பிறகும் பா.ஜ.க. அங்கே போய் விழுமென எனக்குத் தோன்றவில்லை.

கே. நீதிமன்றத்தில் உள்ள தகுதி நீக்க வழக்குகள் இந்த அரசுக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்று நினைக்கிறீர்கள்?

ப. தகுதி நீக்கம் தொடர்பான மூன்று வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றன. நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் தொடர்பாக கருத்துச் சொல்வது சரியாக இருக்காது. எங்களைப் பொறுத்தவரை இது தொடர்பாக எந்த அச்சமும் கிடையாது. நாங்கள் வெற்றிபெறுவோம்.

கே. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் பட நிகழ்வுக்கு முதல்வர் அழைத்தும் பிரதமர் வரவில்லை. அதனைப் பெரிய விழாவாக நடத்த நினைத்திருந்தீர்கள். ஆனால், மிகச் சிறிய விழாவாக நடந்து முடிந்துவிட்டது. ஏன் அப்படி நடந்தது?

ப. முதல்வர் பிரதமரை அழைத்தது உண்மைதான். இதற்கு மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின் இறுதி நிகழ்வை சென்னையில் நடத்துவதற்கும் அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

பல காரணங்களால் அவர் வரவில்லை. அதற்கு நோக்கம் கற்பிப்பது முறையில்லை. இப்போது நடந்த நிகழ்வு நன்றாகவே நடந்தது. மிக அருமையாக நடந்தது.

அம்மாவின் படம் அங்கு இருப்பது சட்டமன்றத்திற்கு மட்டுமல்ல, இந்த மண்ணுக்கே பெருமை என்பதுதான் என் நிலைப்பாடு.

அதில் பங்கு பெற மற்றவர்கள் தயக்கம் காட்டினால், இழப்பு அவர்களுக்குத்தான். அது மோதியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி.

தேர்தல் ஆணையம் தடை விதித்த ஜெயலலிதா காணொளி இதுதான்

காணொளிக் குறிப்பு,

ஜெயலலிதா காணொளி .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :