காவிரி வழக்கு: தமிழகத்திற்கு துரோகம் இழைத்த அதிமுக அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்

காவிரி நீர் தீர்ப்பு: தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு

காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பிற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஏமாற்றத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.

"சரித்திர ரீதியாக தமிழகத்திற்கே உரித்தான காவிரி நீரைப் பெறுவதற்கான, நியாயமான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் போதிய அளவில் அ.தி.மு.க. அரசு முன்வைக்கவில்லை" என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், "இன்றைக்கு உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.கவின் முதன்மைச் செயலரும் தமிழகத்தின் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான துரைமுருகன், கர்நாடக அரசு தொடர்ச்சியாக ஒரே வழக்கறிஞரை வைத்து வாதாடியது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

நடுவர் மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் கர்நாடகத்தின் சார்பில் ஃபாலி நாரிமனே வாதாடியதன் மூலம் அம்மாநிலத்தின் வாதங்கள் எடுபட்டன என்று சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தின் சார்பில் பராசரன், கங்குலி போன்ற விவரம் தெரிந்த வழக்கறிஞர்கள் ஏற்கனவே வாதாடியிருக்கும் நிலையில், அவர்களையெல்லாம் தமிழகம் பயன்படுத்தாமல் ஒவ்வொரு வாய்தாவிற்கும் ஒவ்வொரு வழக்கறிஞரைப் பயன்படுத்தியதே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் என அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக யாரிடமும் தமிழக அரசு ஆலோசனை பெறவில்லையெனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய துரைமுருகன், "காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது காவிரி நடுவர் மன்றத்தில் 192 டி எம் சி தண்ணீரை தமிழகத்திற்காக வாங்கி தந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதிலிருந்து 14.75 டி எம் சி தண்ணீரை குறைத்து உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தமிழத்திற்கு மிகப் பெரிய பாதகம் எனக் கூறிய துரைமுருகன், "இதற்கு முழு காரணம் அதிமுக தான் என்றும் இந்த வழக்கை அதிமுக உச்சநீதிமன்றத்தில் சரியாக நடத்தவில்லை" என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்

"தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த அதிமுக அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்" என்றும் துரைமுருகன் சாடியுள்ளார்

அடுத்த கட்டமாக இதில் திமுக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து கட்சி கூடி முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்கு இழைக்கப்பட அநீதி என்று குற்றம்சாட்டியிருக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக குடியரசுத் தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. காவிரி நீரை மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு திறந்து விடுவதற்காக நடுவர் மன்றம் தயாரித்த அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் தமிழகத்திற்கு சாதகமான அம்சம் தான். அதேநேரத்தில் தமிழகத்திற்கு சாதகமான இந்த அம்சங்கள் அனைத்தும் இயல்பாக நடந்து விடும் என்று நினைத்து தமிழக அரசு அலட்சியமாக இருந்தால் பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்." என்று கூறியிருக்கிறார்.

முன்பு நடுவர் மன்றம் தந்த இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. வழங்க ஆணையிட்டதை மாற்றி, 177.25 டி.எம்.சி. நீராகக் குறைத்திருப்பது வருந்தத்தக்கதும், ஏமாற்றமளிக்கக் கூடியதாகும். ஆனாலும், இப்பொழுது உச்சநீதிமன்றம் அளித்த இந்த அளவு நீரையாவது பெறுவது உறுதி செய்யப்படவேண்டும் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழக அரசு இந்தத் தீர்ப்பு தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "ஊடகங்களின் வாயிலாகத்தான் இந்தத் தீர்ப்பு குறித்து எங்களுக்குத் தெரியவந்துள்ளது. தீர்ப்பு கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேல் உள்ளது. அந்தத் தீர்ப்பை முழுமையாகப் படித்த பிறகுதான் அம்மாவின் அரசு கருத்துத் தெரிவிக்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் கண்காணிப்புக் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டிருப்பது நல்ல விஷயம்" என்று கூறினார்.

மேலும் காவிரி நீரைப் பெறுவதற்காக ஜெயலலிதா 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருந்தபோதும் தமிழகத்திற்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரில் 14.75 சதவீதம் தண்ணீர் குறைந்தது வருத்தமளிக்கக்கூடிய ஒன்று என்றும் ஜெயக்குமார் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதங்களை சரியாகத்தான் முன்வைத்தது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். ஹேமாவதி அணை கட்டியதால்தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது என்றும் அப்போது இருந்த தி.மு.க. அரசு அதனை எதிர்க்கவில்லையென்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். முதலமைச்சரிடம் கலந்துபேசிவிட்டே இந்தக் கருத்துக்களை தான் தெரிவிப்பதாகவும், தீர்ப்பை முழுமையாக அறிந்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரிவிக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

"இந்தத் தீர்ப்பில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது எனக்கு ஏமாற்றம்தான். காவிரிக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஆறுதலாக இருக்கிறது." என நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

படக்குறிப்பு,

விவசாய சங்க நிர்வாகிகளுடன் நடிகர் கமல் ஹாசன்

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "குறைந்த அளவு தண்ணீர் கிடைத்தால்கூட அதை பத்திரப்படுத்த வேண்டியது தமிழகத்தின் கடமை. இதைவிட முக்கியம் இரு மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை. ஓட்டு வேட்டைக்காக சச்சரவுகளைத் தூண்டிவிடுபவர்கள், தேசியம் மறந்து பேசுகிறார்கள். ஓட்டு விளையாட்டில் சச்சரவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடாது. இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. இரு மாநில விவசாயிகளுக்கு இடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் இந்தத் தீர்ப்பு குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது நடிகர் ரஜினி டுவிட்டர் பதிவிட்டடுள்ளார்.

தமிழக மக்களை பாதிப்பதாவ் ஏமாற்றமளிப்பதாகவும், மறுபரிசீலனைக்கு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: