சினிமா விமர்சனம்: நாச்சியார்

தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர்.
நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர்,
அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார்.
ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு, அந்தச் சிறுவன் தந்தையல்ல என்று தெரியவருகிறது.
இதையடுத்து, அந்த சிறுபெண்ணை பலாத்காரம் செய்தது யார் என்று தேடும் நாச்சியார், அந்த நபரைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் தண்டிக்கிறார்.
கதை ரொம்பவும் பழையதாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்; படமுமே அப்படித்தான் இருக்கிறது.
தொலைக்காட்சி சீரியல்களுக்கே உரிய காட்சியமைப்பில் நகரும் இந்தப் படத்தின் ஒரே சுவாரஸ்யமான அம்சம், வெவ்வேறு நபர்களின் வாக்குமூலத்தின் மூலம் அரசிக்கும் காத்தவராயனுக்கும் இடையிலான காதலைச் சொல்வதும் குற்றவாளியைத் தேடுவதும்தான்.
படத்தின் முக்கியமான திருப்பம் இடைவேளையின்போது வந்துவிட்ட நிலையில், குற்றவாளி யார் என்பதைத் தேடும் பயணம் விறுவிறுப்பாக, அதிர்ச்சியூட்டும்விதமாகவோ இருந்திருக்க வேண்டும்.
பதிலாக ரொம்பவுமே சாதாரணமாக அந்தத் தேடுதல் நடப்பது, பிற்பாதி படத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது.
படத்தில் வரும் பல பாத்திரங்கள், இயல்புக்குப் பொறுந்தாதவகையில் இருக்கின்றன. குறிப்பாக ஜோதிகாவின் பாத்திரம்.
அவர் இதுவரை ஏற்று நடிக்காத வேடம் என்பதால் சற்று புதுமையாகத் தென்படுகிறது. ஆனால், எரிச்சலூட்டும் பாத்திரப்படைப்பு.
குறிப்பாக, குற்றவாளிகள் என்று கருதுபவர்களையும் தன் கீழ்நிலை காவலர்களையும் நாச்சியார் நடத்தும் விதம் சரியானதாக இல்லை.
அரசியாக நடித்திருக்கும் இவானாவுக்கு இது முதல் படம். படத்தில் இயல்பாக வந்துசெல்லும் கதாபாத்திரங்கள் ஒன்றிரண்டில் இவருடையதும் ஒன்று. ஜீ.வி. பிரகாஷ்குமாருக்கு மற்றும் ஒரு படம்.
இளையராஜாவின் இசையில் வரும் ஒரே ஒரு பாடல், ரசிக்கவைக்கிறது. ஆனால், பின்னணி இசையில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை.
ஈஸ்வரின் ஒளிப்பதிவில் ட்ரோன் காட்சிகளும் டாப் - ஆங்கிள் காட்சிகளும் அசத்துகின்றன.
தன் பாணியிலிருந்து விலகி ஒரு படத்தைத் தர முயன்றிருக்கிறார் பாலா. ஆனால், அது ஒரு சுவாரஸ்யமான படமாக உருவாகவில்லை.
பிற செய்திகள்
- காவிரி நீரில் தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி குறைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- காவிரி வழக்கு கடந்து வந்த பாதை!
- “மத்திய அரசுடன் நல்லுறவை விரும்புகிறோம், கட்சி ரீதியாக தொடர்பில்லை”
- ஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை
- ஆண் எனக்கூறி பெண்களை திருமணம் செய்து கொண்ட பெண்
- போர் சூழலில் வாழும் 35.7 கோடி குழந்தைகள் : அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்