“நானே பிரதமர் பதவியில் தொடர்வேன்” - ரணில்

அரசியலமைப்பு விதிகளின்படி தானே பிரதமர் பதவியில் தொடர்வேன் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

ரணில்

பட மூலாதாரம், Getty Images

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சி பெருத்த பின்னடைவை சந்தித்த பின்னர், பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினார்கள்.

ஆட்சியை கலைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்ட போதிலும், குறைந்தபட்சம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாவது பதவி விலக வேண்டும் என்று ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரியிருந்தனர்.

பிரதமரை பதவி விலக்கிவிட்டு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இவ்வளவு நாளும் அமைதியாக இருந்த பிரதமர் ரணில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

பலமிருந்தால் நிரூபியுங்கள்

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், அரசியலமைப்பின் விதிகளின்படி தானே பிரதமராக தொடர்வேன் என்று அறிவித்தார்.

அதற்கான பலம் தனக்கு இருப்பதாக கூறிய அவர், செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்த்தரப்பினர் ஆட்சியமைக்க போதிய பலம் இருந்தால், அதனை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் பின்னடைவுக்கான காரணம்

பொருளாதார பின்னடைவால் ஏற்பட்ட பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி உள்ளூராட்சி தேர்தலில் பிரதிபலித்திருக்கலாம் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, அதனை தாம் ஏற்பதாக கூறினார்.

அடுத்து வரும் இரு வருடங்களுக்குள் அந்தப் பொருளாதார பின்னடைவுகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.

பிணைமுறி ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்கள் தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கலாமல்லவா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த ரணில், அந்த விவகாரத்தில் மக்கள் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்ததாகவும், ஆனால், சட்ட நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவை என்றும் கூறினார்.

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA

ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்று கேட்டதற்கு பதிலளித்த பிரதமர் கூட்டணி ஆட்சி தொடர்வதையே தாம் விரும்புவதாகக் கூறினார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து கேட்டதற்கு பதிலளித்த பிரதமர் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கட்சி தலைமையை அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் நடவடிக்கை படிப்படியாக நடக்கும் என்றும் கூறினார். அது குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியினரின் முயற்சிகள்

இதற்கிடையே, ரணிலை பதவி விலக்கிவிட்டு, தமது கட்சியை ஆட்சியமைக்கச் செய்யும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேவேளை அரசியலமைப்பை மாற்றும் பணிகள் தொடர்ந்து நடக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளையும் இந்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :