ரூ.11,300 கோடி முறைகேடு: வங்கி அமைப்பில் இவ்வளவு பெரிய ஓட்டை எப்படி?

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,300 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை, சில ஊழியர்களின் உதவியுடன் தொழில் அதிபர்கள் நீரவ் மோதி, நிஷால் மோதி, அமி நீரவ் மோதி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மோசடி செய்துள்ளதாகவும், இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அந்த வங்கியின் சார்பில் சில தினங்களுக்கு முன்னர் மத்திய புலானய்வு அமைப்பான சி.பி.ஐ இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீரவ் மோதி (இடது)

இந்திய வங்கிகள் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சிகள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வளவு பெரிய முறைகேடு ஏற்படும் அளவுக்கு வங்கி அமைப்பில் பெரிய ஓட்டை இருக்கிறதா என்ற கேள்வி பலரது மனதைக் குடைகிறது.

இப்பிரச்சினையில் வங்கி ஊழியர்களின் பார்வையைப் பதிவு செய்யும் வகையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரான சி.எச்.வெங்கடாச்சலம்-உடன் பேசியது பிபிசி தமிழ்.

"இறக்குமதித் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகள் ஒரு குறிப்பிட்ட சேவை கட்டணத்தை பெற்றுக்கொண்டு 'லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங்' என்ற பண உத்தரவாத கடிதம் அளிக்கும்.

இந்த கடிதத்தை அத்தாட்சியாக கொண்டு ஏற்றுமதி நிறுவனமானது பொருட்களை இந்தியாவிற்கு அனுப்பும். ஒருவேளை, இந்தியாவில் பொருட்கள் இறக்குமதியானவுடன் அந்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு பொருளை இறக்குமதி செய்த இந்திய நிறுவனம் பணம் அளிக்கவில்லை என்றால் அவருக்கான அல்லது அந்த நிறுவனத்துக்கான பண உத்தரவாத கடிதத்தை வழங்கிய வங்கியே அந்த தொகையை செலுத்த வேண்டும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரது துணையோடு போலியாக அந்த வங்கியின் உத்தரவாதத்தை தயாரித்து அதன் மூலம் கடன் பெற்று மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளது".

ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று

மும்பை பிராடி ஹவுஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் வாயிலாக சட்ட விரோதமாக ஹாங்காங்கில் உள்ள இரு இந்திய வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் அலகாபாத் வங்கிகள் மூலம் குறிப்பிட்ட சில நபர்கள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய நூற்றுக்கணக்கான உத்தரவாதக் கடிதங்களை கொண்டு பல்வேறு வெளிநாட்டு வங்கிகள் நீரவ் மோதி உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு 11,300 கோடி ரூபாய் கடன் வழங்கியதை சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கண்டறிந்துள்ளதாக கூறுவது நம்ப முடியாத ஒன்று என்று அவர் கூறுகிறார்.

"இவ்வளவு பெரிய முறைகேட்டை சாதாரண வங்கி ஊழியர்களால் செய்ய முடியாது. இதே வங்கி நீரவ் மோதிக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. அக்கடனனுக்கான புதுப்பிப்பு ஒவ்வொரு வருடமும் நடக்கும்போது அவரின் ஒட்டுமொத்த வரவு செலவு கணக்குகளும் ஆய்விற்குட்படுத்தப்படும் நிலையில், இந்த முறைகேடான பரிவர்த்தனைகள் குறித்து கடந்த ஏழு வருடங்களாக கண்டிபிடிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது."

கடுமையான விதிமீறல்

இந்த மோசடிக்கு உதவியதாக கருதப்படும் வங்கி ஊழியர்களான கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் ஹணுமந்த் காரத் ஆகியோர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் சிபிஐயிடம் பஞ்சாப் தேசிய வங்கி கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வெங்கடாச்சலம், "இந்தியாவிலுள்ள வங்கிகளில் உயர்பொறுப்புகளை வகிப்பவர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் நீடிக்க கூடாது என்றும், மற்ற ஊழியர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரே கிளையிலோ, துறையிலோ நீடிக்க கூடாது என்ற விதி நடைமுறையில் இருக்கும்போது அது எவ்வாறு மீறப்பட்டது?" என்று கேள்வியெழுப்புகிறார்.

படத்தின் காப்புரிமை AFP

தார்மீக பொறுப்பேற்க வேண்டும்

"வங்கிகளுக்கு அனைத்து விதமான பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு இத்தனை வருடங்களாக இதுகுறித்து தெரியாது என்று கூறுவதையும், சாதாரண வங்கி ஊழியர்கள் மீது குற்றம் சுமத்துவதையும் நிறுத்திவிட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு தற்போது வெளிநாட்டிலுள்ள நீரவ் மோதியை இந்தியாவிற்கு கொண்டுவந்து, கைது செய்து, பணத்தை பெறுவதற்குரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

Image caption அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம்

ஏன் தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை?

ஒவ்வொரு காலாண்டுக்கும், அரையாண்டுக்கும் மற்றும் நிதியாண்டுக்கும் வங்கிகள் தங்களது வரவு, செலவு மற்றும் வாராக்கடன் குறித்த கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் "பிணையத் தொகை இல்லாமல், சேவை கட்டணம் வசூலிக்கப்படாமல் 11,300 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ள பண உத்தரவாதம் கடந்த ஏழு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தணிக்கைகளின்போது கண்டறியப்படாதது ஏன் என்ற கேள்வியும், நிர்வாகத்துக்கும், உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்புள்ளதா என்ற கேள்வி குறித்தும் பதிலளிக்கப்பட வேண்டும்" என்றும் வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

காலதாமதத்துக்கு தொழில்நுட்ப பிரச்சனை காரணமா?

பொதுவாக வங்கிகளின் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மற்றும் ஆய்விற்குட்படுத்துவதற்கும் சிபிஎஸ் எனப்படும் கோர் பேங்கிங் சிஸ்டம் என்ற மென்பொருள் அனைத்து கணினிகளிலும் பதியப்பட்டிருக்கும். இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மென்பொருள் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதாகவும், அது 2012 ஆம் ஆண்டிலேயே மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த தொழில்நுட்ப குறைபாட்டின் காரணமாகதான் பரிவர்த்தனைகளை கண்காணிப்பதில் சிக்கல் நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வெங்கடாசலம், "வங்கித்துறையில் கணினிமயமாக்கத்தை செயற்படுத்தினால் பணிகளை விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள முடியும் என்று கூறியபோதே, அதிலுள்ள பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து கேள்வியெழுப்பினோம். தினந்தினம் புதியதாக வந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பத்திற்கேற்ப மாறவில்லை என்றால் இதுபோன்ற பிரச்சனைகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இன்னும் பல வங்கிகள் தங்களது மென்பொருள்களை மேம்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று விளக்கினார்.

யார் இந்த பணத்துக்கு பொறுப்பேற்பது?

தற்போது மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் 11,300 கோடி ரூபாயை கடனளித்த வங்கிகளுக்கு யார் செலுத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த வெங்கடாச்சலம், "முதலில் இந்த பணத்தை செலுத்த வேண்டியது நீரவ் மோதிதான், அவர் செலுத்துவற்கு தவறும்பட்சத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கிதான் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்."

படத்தின் காப்புரிமை AFP

மக்களின் தலையில் சுமத்தக் கூடாது

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த ஒரு மசோதாவானது, ஒரு வங்கி நிதி நெருக்கடியால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த வங்கியிலுள்ள மக்களின் பணத்தை கொண்டு அதனுடைய இழப்பு ஈடுசெய்யப்படும் என்று கூறுகிறது. ஆனால், இதுபோன்ற சட்டங்கள் அமெரிக்கா போன்ற பெரும்பாலும் முதலீட்டுக்காக வங்கியில் பணம் செலுத்தும் மக்களுள்ள நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர இந்தியாவிற்கு சரிவராது என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :