காவிரி தீர்ப்பில் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

  • 17 பிப்ரவரி 2018

காவிரி நதிநீர் விவகாரத்தில் தனது தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் பங்கை 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தின் பங்கு 14.75 டி.எம்.சி குறைந்திருந்தாலும், கர்நாடக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் நதி என்பதால் அம்மாநிலம் தான் விரும்பும் வகையில் காவிரி நீரைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமிதவா ராய் மற்றும் நீதிபதி ஏ.என்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு.

இரு மாநிலங்கள் வழியாகப் பாயும் அந்த நதி ஒரு தேசிய சொத்து என்றும் ஒரு மாநிலத்துக்கு மட்டுமே சொந்தமானதாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதற்கு முன்பு 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் மைசூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தங்களை காவிரி நடுவர் மன்றம் புதிய தீர்வுகளைக் கட்டுப்படுத்தும் அம்சமாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்ற கர்நாடக அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. "அந்த ஒப்பந்தங்களில் எந்த அரசியல் ரீதியான ஏற்பாடும் இல்லை. அவை இந்திய இறையாண்மையை பாதிக்கும் வகையிலும் இல்லை," என்று கூறினர்.

படத்தின் காப்புரிமை DDNEWS
Image caption உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

"அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட காலத்தில் கர்நாடக அரசுக்கு தனது தரப்பை முன்வைப்பதற்கான வாய்ப்பு இல்லை எனும் கர்நாடக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், 1947இல் சுதந்திரம் அடைந்த பிறகோ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகோ நிச்சயமாக அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கும். கர்நாடக (1956இல்) மாநிலம் உருவாக்கப்பட்டபின்னும் அந்த இரு ஒப்பந்தங்களையும் கர்நாடக எதிர்க்கவில்லை. எனவே அந்த ஒப்பந்தங்களை கருத்தில் கொள்ளமுடியாததாக கூற முடியாது," என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

காவிரி நடுவர் மன்றத்தால் மதிப்பீடு செய்யப்பட்ட தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன விளைநிலப் பரப்பு தவறானது என்றோ பிழையானது என்றோ கூற முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தமிழகத்தின் வீட்டு உபயோகத்திற்கும் தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும் நடுவர் மன்றம் கணக்கிட்ட அளவில் எந்த மாற்றத்தையும் செய்யாத நீதிமன்றம் அதில் எந்த குறுக்கீடும் செய்யத் தேவை இல்லை என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கேரளா மற்றும் புதுச்சேரிக்கு காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்த 30 டி.எம்.சி மற்றும் 7 டி.எம்.சி ஆகியவற்றில் நீதிமன்றம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

இறுதிப் பங்கீட்டு முறையை வகுத்து அமல்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் சட்டத்தின் பிரிவு 6Aவின் படி தங்கள் முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என்ற மத்திய அரசின் வாதங்களையும் ஏற்க மறுத்த நீதிமன்றம் காவிரி நடுவர் மன்றமே பங்கீட்டு முறையை வகுத்துள்ளதாக கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்