திருமணம் ஆகாமல் தாயாக வாழ்வதில் இன்பம் காணும் பெண் #HerChoice

  • 17 பிப்ரவரி 2018

திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்ற முடிவெடுத்தபோதிலும் தாயாக வேண்டும் என்று சங்கீதா தீர்மானித்ததேன்?

நவீன இந்திய பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவரது வார்த்தைகளில்.

மற்ற குழந்தைங்கள மாதிரி மகிழ்ச்சியான, கவலையில்லாத, எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்ன்னு ஆர்வம் இருக்குற ஒரு சின்ன பொண்ணு தான் என்னோட ஏழு வயசு மகள். அவளை சுத்தி நடக்குறத தெரிஞ்சுக்கவும் அவள் வாழ்க்கையை பத்தி தெரிஞ்சுக்கவும் அவளுக்கு ஆர்வம் அதிகம்.

ஆனா, அவள் அடிக்கடி என்கிட்ட கேட்குற கேள்வி, 'அம்மா, எனக்கு ஏன் அப்பா இல்ல?' 'நான் எப்பவும் தனியா இருக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு கல்யாணம் ஆகல; அதனால தான் உனக்கு அப்பா இல்ல' என்று அவள்கிட்ட உண்மையான பதிலத்தான் சொல்லுவேன். இந்த பதில் அவளை முழுமையா திருப்தி படுதலைன்னு நான் நினைக்குறேன்.

தத்தெடுக்கப்பட்ட என்னோட மகள், தாய் மட்டும் இருக்குற தந்தை இல்லாத குடும்பத்துக்குள்ள வந்துருக்கா. ஒரு வேளை அவளுடைய பிஞ்சு மனசு இதனால குழம்பிப்போயிருக்கலாம்.

''அம்மா, ஒரு பொண்ணும் பையனும் வளர்ந்துட்டாங்கன்னா அவங்களுக்கு கல்யாணம் ஆகும். அதுக்கு பிறகு அவங்களுக்கு குழந்தை பிறக்கும்ன்னு நீங்க தானே சொல்லிருக்கீங்க. அப்படின்னா என் அம்மாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும். என்ன பெத்த அம்மா யாருன்னு நமக்கு தெரியாதது போல என் அப்பா யாரு என்பதும் நமக்கு தெரியாது. ஆனா எனக்கு அப்பா இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க'' அப்படின்னு ஒரு நாள், அவ என்கிட்ட சொன்னா. அவளுக்கு அப்போ அஞ்சு வயசிருக்கும்.

அத கேட்டதும் என் கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் வந்துச்சு. ஒவ்வொருவாட்டி அவ கேக்குற கேள்விக்கும் நான் சொல்ற பதில் அவளுக்கு எப்படிப்பட்ட உணர்வைத் தந்திருக்கும்ன்னு அன்னைக்குத்தான் எனக்கு புரிஞ்சுது. அவளுக்கு இது ஒரு சின்ன லாஜிக்தான். அந்த அஞ்சு வயசு பொண்ணு, அவளோட கேள்விக்கு அவளே பதில் கண்டுபுடிச்சுட்டா.

ஆனா என்னோட பதில் போதுமானதா இல்ல. ஒரு தாயாவும் ஒரு மனிதப் பிறவியாவும், இந்த சம்பவம் அவள் மனசுல எப்படிப்பட்ட உணர்வ ஏற்படுத்திச்சுன்னு எனக்கு புரியவெச்சுது.

'அம்மா, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ..' என்று அவ அடிக்கடி என்கிட்ட சொல்லுவா. நான் கல்யாணம் பணிக்கக்கூடாதுன்னு நினைக்கல….என்னிக்காவது ஒரு நாள் அதுக்கு வாய்ப்பிருக்கு. என்னையும் உன்னையும் நல்லா புரிஞ்சுக்குற நபர் கிடைச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்'.

அவள் வளர்ந்து பெரியவளாகி இதே கேள்வியை திரும்பவும் என்கிட்ட கேட்டா, என் பதில் இதுவாத்தான் இருக்கும். கல்யாணம் பண்ணிக்காம தனியா இருக்குறது எந்த வகையிலயும் எனக்கு வலிய கொடுக்கல. கல்யாணம் ஆகாம, ஒரு ஆணின் துணையும் இல்லாம ஒரு குழந்தைக்குத் தாயா வாழும் இந்த வாழ்க்கைப் பயணம் எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு.

நான் ஆண்கள வெறுக்கல; அவங்கள ரொம்பவே மதிக்குறேன். என் மகளும் என்கிட்ட இருந்து இதையேதான் கத்துக்குறா. நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கல, ஏன் தனியா இருக்கவே விரும்புறேன் என்பதுக்கு ஒரு சாதாரணமான காரணம் மட்டும் இல்ல.

இருபது வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு கல்யாண வயசு இருக்குறப்போ எங்க சமூகத்துல பெரும்பாலானவங்க பிஸ்னஸ் செஞ்சாங்க, அதனால ஆண்கள் அதிகமா படிக்கல. படிச்சவங்கன்னு இந்த சமூகத்துல சொல்லப்படுற இளம் ஆண்கள் வெளித் தோற்றத்துக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்தாங்க.

நல்லா படிச்ச, நல்ல பழக்க வழக்கங்கள் கொண்ட, என் வெளித் தோற்றத்தை மட்டும் பாக்காம என் அழகான மனச புரிஞ்சுக்குற ஆண்தான் எனக்கு வேணும் நினைச்சேன். இந்த தேடலும் என்ன பத்தி நானே தெரிஞ்சுக்க உதவும் ஒரு பயணமா அமஞ்சுது.

மஹாராஷ்டிராவுல இருக்குற ஒரு கிராம பகுதியில, நடுத்தர குடும்பத்துலதான் நான் பொறந்தேன். மற்ற இந்திய பெண்களை மாதிரியேதான் என்னையும் எங்க வீட்டுல நடத்துனாங்க. என் விருப்பத்துக்கு அங்க மதிப்பில்ல.

எங்க சமூகத்துல மிகவும் அரிய விஷயமான மேல் படிப்பை என் அப்பா என்ன படிக்கவெச்சாரு. நல்ல சம்பளத்தோட எனக்கு வேலையும் கெடச்சுது. நான் தன்னம்பிக்கை நிறைஞ்ச ஒரு பெண்ணா வாழ்ந்தேன்.

வாழ்க்கை செல்லச் செல்ல ஒரு சுதந்திரமான வாழ்க்கையோட மதிப்பு எனக்கு புரிஞ்சுது. என் வாழ்க்கையில வேற எந்த துணையும் எனக்கு வேணாம்ன்னு தோணிச்சு.

ஒருத்தரோட வாழ்க்கையில மிக முக்கியமான முடிவு யாரை திருமணம் செஞ்சுக்கப்போறம் என்பதுதான். அது என்னோட முடிவா மட்டும்தான் இருக்கனும். என் வாழ்க்கையை மத்தவங்க எப்படி தீர்மானிக்க முடியும்?

ஒரு ஆணோ இல்லை கணவனோ என் வாழ்க்கைத் துணையா வேணும்ன்னு எனக்கு தோணல. அதனால நான் தனியாவே இருக்கேன். ஒருவழியா என் பெற்றோர் சமாதானம் ஆகிடாங்க.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தோட ஒரு பகுதியா சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் சார்பா அனாதை குழந்தைகளோடு என் நேரத்தை நான் செலவழிக்க தொடங்கலைன்னா என் வாழ்க்கைல எதுவுமே மாறியிருக்காது. பாடம் எடுப்பது, விளையாடுவது, குழந்தைங்களோட எல்லா நேரத்தையும் செலவிடுவது எல்லாமே எனக்கு அளவிடமுடியாத சந்தோஷத்தை கொடுத்தது. இதுக்காக நான் ரொம்பவே ஏங்கினேன்.

இருந்தாலும் குழந்தைகளுக்கு நான் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாதுன்னு ஒரு வரைமுறை இருந்துச்சு; இந்த எல்லைக்கோடு எனக்கு வலிய கொடுத்துச்சு. அப்போதான் ஒரு குழந்தைய தத்தெடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு வந்துச்சு. ஆனா நான் எடுத்த இந்த முடிவினால பல கேள்விகள் எழுந்துச்சு.

நான் தத்தெடுக்கும் குழந்தை எப்படி எங்க குடும்பத்தோட தன்னை இணைச்சுக்கும்? அந்த குழந்தைக்கு ஒரு நல்ல தாயா என்னால இருக்க முடியுமா? அந்த குழந்தைய என்னால தனியாவே வளர்க்கமுடியுமா?

இது எல்லாமே எனக்கு நானே இரண்டு வருஷமா கேட்டுக்கிட்ட கேள்விகள். ஒரு பெண் குழந்தைய தத்தெடுக்கலாம்ன்னு முடிவு செஞ்ச பிறகும் இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு உறுதியான பதில் கிடைக்கல.

என் தோழிகள்கிட்ட பேசினேன்; பெருமூச்சு விட்டேன், என் மனசுல உருத்திய விஷயங்கள் என்னென்ன என்று எழுதினேன்.

அதுல இடம்பெற்ற முக்கியமான விஷயம் தனியான தாய் என்ற பொறுப்ப பத்திதான். என் பெற்றோர் மற்றும் நண்பர்களோட ஆதரவு இதுல எந்த அளவுக்கு முக்கியம் என்பத நான் உணர்ந்தேன்.

அழகு நிரம்பிய ஆறு மாதமேயான மகிழ்ச்சியின் குவியல், அதாவது என் மகள், எங்க வீட்டுக்கு வந்தப்போ ஒரு திருவிழா மாதிரி இருந்துச்சு. அந்த தத்தெடுப்பு மையத்துல முதலாவதா தத்தெடுக்கப்பட்ட என் மகளை வழியனுப்ப ஐம்பது பேர் அவளை சுத்தி நின்னாங்க.

அவள் எங்க வீட்டுக்கு வந்ததும், என் எல்லா சந்தேகங்களும் மறஞ்சு போச்சு. அவள் மிகவும் விரும்பப்பட்ட பேத்தியா மாறிட்டா. யார் துணையும் இல்லாம தனியான தாயா என் குழந்தைய வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு.

இறுதியில என் பெற்றோர் வீட்டுலயிருந்து வெளிய வந்து தனியா சுதந்திரமா வாழ ஆரம்பிச்சேன். எனக்கும் என் மகளுக்கும் இடையில உள்ள பிணைப்பு இன்னும் வலுவாச்சு.

நான் அவளோட உண்மையான தாய் இல்ல என்ற நினைப்பு எனக்கு வந்ததே இல்ல. அவளோட அப்பா எங்க என்று மத்தவங்க கேக்குற கேள்விகளுக்கெல்லாம், என் பொண்ணு என்னை மிகவும் நேசிப்பது; நான்தான் உலகிலேயே மிகச்சிறந்த அம்மா என்று அவள் சொல்வதும்தான் பொருத்தமான பதில்.

நான் வேலை செய்யும்போது அவள் என்னை பார்த்தா, இப்போ நீங்கதான் என்னோட அப்பா என்று சொல்லுவா! இது எனக்கு விலைமதிக்கமுடியாத ஒன்னு. தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையோட வாழக்கை அவ்வளவு எளிமையானது இல்ல.

எங்ககிட்ட இந்த சமூகம் கேட்கும் பல கேள்விகள், குறிப்பா சில சமயம் கேட்கப்படும் உணர்ச்சியற்ற கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்கணும்ன்னு நாங்க கத்துக்கிட்டு இருக்கோம்.

என் மகளோட கடந்தகால வாழ்க்கை பத்தி நிறைய பேர் கேட்பாங்க. ஆனா கடந்து போன வாழ்க்கைய பத்தி மத்தவங்க என் தெரிஞ்சுக்கணும்?

இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு மத்தியிலும், எங்க வாழ்க்கையில சின்ன சின்ன சந்தோஷங்களும் அன்பான தருணங்களும் நிறைஞ்சிருக்கு. இதுக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லணும்ன்னா என் தங்கை எங்க வாழ்க்கையை பார்த்து ஈர்க்கப்பட்டு, இப்போ அவளும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்திருக்கா.

தத்தெடுப்பு என் வாழ்க்கையின் மிக முக்கிய பகுதியா மாறிடுச்சு. பெற்றோரையும் குழந்தைகளையும் தத்தெடுக்கும் வழிமுறைகள பத்தி ஆலோசனை கொடுக்குறேன். என் மகளுக்கு இப்போ பள்ளிக்கூடத்துக்கு போக விருப்பமில்லை அதனால வீட்டுலயே அவளுக்கு பாடங்கள் சொல்லித்தரேன்.

அவள் முடிவுகளை அவளே எடுக்கனும்னு நான் விரும்புறேன். ஏனென்றால் இது என்னோட வாழ்க்கையின் முற்பகுதியில எனக்கு கிடைக்கல; ஆனா இப்போ ஆழமா மதிக்கப்படவேண்டிய ஒன்னு. அவளுக்கு எப்போ பள்ளிக்கூடம் போகணும்ன்னு என்கிட்ட கேட்குறாளோ அப்போ அவளை பள்ளியில சேர்ப்பேன்.

இந்த சுய அடையாளம் தான், என்ன மாதிரியே அவள அவளா வளர அவளுக்கு துணை செய்யும். எனக்கு தனியா இருக்குறதுதான் புடிச்சிருக்கு. ஆனா என் மகளோட நான் இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..!

(புனேவில் வசிக்கும் சங்கீதா பன்கின்வார் என்ற பெண்மணியிடம் பிபிசி செய்தியாளர் ப்ரஜக்தா துலப் நடத்திய நேர்காணலின் அடிப்படையில், திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட கட்டுரை இது)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட இளம் பெண்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :