காவிரி: திமுக-வை குற்றம்சாட்டும் முதல்வர் எடப்பாடி

தி.மு.கதான் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது: தமிழக முதல்வர் பழனிசாமி

பட மூலாதாரம், DIPR

காவிரி தொடர்பான இன்றைய தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகவும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் காவிரி மீதான தமிழகத்தின் உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், சாதகமான பல அம்சங்கள் இருந்தாலும் கர்நாடக மாநிலத்திற்குக் கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும் முதன்மைச் செயலாளர் துரை முருகனும் இந்தத் தீர்ப்பினால் தமிழகத்தின் உரிமை பறிபோய்விட்டது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்ப்பதாகவும் உண்மையில் தி.மு.கதான் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் கர்நாடக அரசு கபினி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி 1974ல் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தது எனவும் அப்போது தி.மு.க. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழக அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியதன் விளைவாக தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன என்றும் தமிழகத்திற்குச் சாதகமான பல அம்சங்கள் இந்தத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இறுதித் தீர்ப்பை முழுமையாக ஆராய்ந்து சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும் காவிரி நீரை முழுமையாகப் பெற சட்ட வல்லுனர்களின் ஆலோசனையைப் பெற்று தொடர் நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கப்போவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :