டி20 - தெ.ஆஃப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரள வைத்த புவனேஷ்வர்; 5 முக்கிய தகவல்கள்

டி20 - தெ.ஆஃப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரள வைத்த புவனேஷ்வர் படத்தின் காப்புரிமை Getty Images

தென் ஆஃப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆஃப்ரிககவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளும், 3 டெஸ்ட் போட்டிகளும், 3 டி20 போட்டிகளும் விடையாடுகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தென் ஆஃப்ரிக்காவை வீழ்த்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஐந்து முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

சொதப்பிய எதிரணி பவுலர்கள்

முதலில் பேட் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 203 என்ற இலக்கை தென் ஆஃப்ரிக்காவுக்கு நிர்ணயித்தது. டேன் பேட்டர்சன், ஜூனியர் டாலா, கிரிஸ் மோரிஸ் மற்றும் தப்ரெய்ஸ் ஷம்ஸி ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் வீசி 171 ரன்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கொடுத்த வைட் மட்டுமே 8 ரன்கள்.

அதிரடி காட்டிய ஷிகர் தவான்

படத்தின் காப்புரிமை Getty Images

ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க வீரர்களாக முதலில் களமிறங்கிய ஷிகர் தவான் 39 பந்துகளை எதிர்கொண்டு, 10 பவுண்ட்ரிகளையும், 2 சிக்ஸ்களையும் விளாசி 72 ரன்களை எடுத்திருந்தார். நிதானமாக அடித்து ஆடிய தவான், இந்தியா 155 ரன்கள் இருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அபார பந்துவீச்சு

இந்திய அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் புவேனேஷ்வரின் அபார பந்துவீச்சு தென் ஆஃப்ரிக்க வீரர்களை நிலைகுலைய வைத்தது. நான்கு ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்களை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். பவர்பிளே ஆட்டத்தில் கூட இந்தியா வெறும் 41 ரன்களே கொடுத்தது குறிப்பிடத்தக்கது. நான்கு டெஸ்ட் போட்டி, ஒரு ஒருநாள் சர்வதேச போட்டி, ஒரு டி20 போட்டி ஆகியவற்றில் ஐந்து விக்கெட்களை எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஷ்வர் பெற்றுள்ளார்.

கோலி, தோனி தடுமாற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 20 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 26 ரன்களில் பெவிலியன் திரும்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அதே போல தோனியும் 11 பந்துகளை எதிர்கொண்டிருந்த நிலையில் 16 ரன்களின் அவுட் ஆனார்.

இரண்டாவது டி20 போட்டி பிப்ரவரி 21 ஆம் தேதி செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இந்த வெற்றிப் பயணத்தை இந்தியா தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்