காவிரி பிரச்சனை: 22-ஆம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தப்போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி இந்தக் கூட்டம் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Tndipr.gov.in

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியன்று தீர்ப்பு வெளியானது. இதில் தமிழகத்திற்கு, நடுவர் மன்றம் அளித்த தண்ணீரிலிருந்து 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டுமென தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிவந்தன. ஆளும் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லாத நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப்போவதாக தி.மு.க. அறிவித்தது. இந்தக் கூட்டத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்போவதாக தி.மு.கவின் செயல் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்குப் பிறகு, பிப்ரவரி 22ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமென அறிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடக்குமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததும், தமிழக அரசு முந்திக்கொண்டு இந்தக் கூட்டத்தை நடத்தப்போகிறதா என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "காவிரி விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் பிரதி 464 பக்கங்களைக் கொண்டது. அதைப் படித்து முடிவெடுப்பதற்கு முன்பாக ஸ்டாலின் தனக்கே உரிய அரசியல் செய்துவிட்டார்" என்று கூறினார்.

முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் அனைத்துக் கட்சிக் கூட்டம் இதுவாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்