சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி என அறிவிப்பு

சென்னையைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 23 வயது தஷ்வந்த் குற்றவாளி என நீதிபதி அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption தஷ்வந்த்

வழக்கை விசாரித்துவந்த செங்கல்பட்டு பெண்கள் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் சற்று நேரத்திற்கு முன்பாக, தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதி கூறினார். இதையடுத்து நீதிபதியிடம் பேசிய தஷ்வந்த் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமெனக் கோரினார்.

தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைந்து, 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லாத நிலையில், அறிவியல்பூர்வமாக ஆதாரங்களைச் சமர்ப்பித்து வழக்கை நடத்தியதாக சிறுமியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார். அறிவியல்பூர்வமாக ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருந்ததாலேயே காலதாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி, சென்னையை அடுத்த போரூருக்கு அருகில் உள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி காணாமல் போனாள். சென்னை மாங்காடு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினரும் குழந்தையைத் தேடிவந்தனர்.

அப்போது குழந்தையின் வீட்டின் அருகில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரைக் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது குழந்தையைத் தான் தன் வீட்டிற்கு அழைத்துவந்து, பலாத்காரம் செய்து கொலைசெய்ததை தஷ்வந்த் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்தது. அதன் பிறகு, ஒரு பையில் குழந்தையின் சடலத்தை எடுத்துச் சென்று, நெடுஞ்சாலை ஓரத்தில், தீ வைத்து கொளுத்தியதை தஷ்வந்த் ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.

இதையடுத்து அவரைக் கைதுசெய்த காவல்துறை, குண்டர் சட்டத்தின் கீழும் அவரை கொண்டுவந்தது. இதையடுத்து, தஷ்வந்த்தின் தந்தை அவரை ஜாமீனில் விடுவிக்க மனுத்தாக்கல் செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல்செய்யப்பட்டது.

ஆனால், காவல்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்வதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, தஷ்வந்தை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.

இந்த விவகாரத்தின் காரணமாக, போரூர் பகுதியிலிருந்து வீட்டைக் காலிசெய்த தஷ்வந்த் குடும்பத்தினர் குன்றத்தூர் சென்று குடியேறினர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று தஷ்வந்த்தின் தாய் சரளா அவரது வீட்டில் அடித்துக்கொல்லப்பட்டார். செலவுக்குப் பணம் கேட்டு தராத காரணத்தால், தன் தாயை அடித்துக்கொன்ற தஷ்வந்த், அவரது நகைகளுடன் மும்பைக்குச் சென்றார். இதன் பிறகு, காவல்துறையின் தேடுதலில் டிசம்பர் ஆறாம் தேதியன்று தஷ்வந்த் கைதுசெய்யப்பட்டார்.

இதன் பிறகு, செங்கல்பட்டு பெண்கள் நீதிமன்றத்தில் ஹாசினி கொலைவழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்துவந்தது. இந்த வழக்கில் சட்டப்பிரிவுகள் 363 (கடத்தல்), 366 (தூக்கிச்செல்லுதல்), 354 B (ஆடையைக் களையும் நோக்கத்துடன் பெண்களைப் பலாத்காரம் செய்தல்), 302 (கொலை), 201 (தடயங்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்தது. இது தவிர, போஸ்கோ சட்டத்தின் 6, 7,8 பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

ஹாசினி வழக்கு தவிர, மும்பையில் காவல்துறையினரிடமிருந்து தப்பி வழக்கு, தாய் சரளாவைக் கொலைசெய்த வழக்கு ஆகியவை நிலுவையில் இருக்கின்றன. சரளாவைக் கொன்ற வழக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :