ஆந்திரா: இறந்தவர்களுடன் சென்ற 170 தொழிலாளர்கள் எங்கே?

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் 170 பேர் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை குறித்து எந்த தகவலும் இல்லை என்று உயிரிழந்தவர்களின் கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஒன்டிமிட்டா பகுதியில் ஏரியில், சேலத்தை சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கல்வராயன் மலையில் சேலம் மாவட்டத்தில் 98 மலை கிராமங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 180 மலைகிராமங்கள் உள்ளன.

இந்த மலை கிராமங்களில் இருப்பவர்கள் கூலி வேலைக்காக மைசூருக்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த நபர்கள் இங்குள்ள தொழிலாளிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்படி அழைத்துச் சென்றவர்களில் அடியனூர் பகுதியை சேர்ந்த முருகேசன், கீரன்காடு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் சின்னபையன், அரசமரம் பகுதியை சேர்ந்த முருகேசன், கீழவாரை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் ஆகியோர் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கருமந்துரை காவல்நிலைய போலீசார் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பெரியசாமி கூறும்போது, "சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள மலைகிராமங்களில் இருந்து 170 பேர் அழைத்துச் சென்றுள்ளனர். இதில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதி உள்ளவர்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை," என்றார்.

மேலும், ஆந்திராவில் இருந்து சடலங்களை கொண்டுவருவதற்காக உறவினர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து உறவினர்கள் கூறும்போது, "மைசூருக்கு கூலி வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி இங்குள்ளவர்களை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஆந்திராவிற்கு எதற்காக சென்றார்கள், எப்படி இறந்தார்கள் என்பது குழப்பமாக உள்ளது. இறந்தவர்களின் சடலத்தை சேலம் கொண்டுவருவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடும் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் கேட்டுக்கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்