பல வங்கிகளில் 3,695 கோடி கடன் வாங்கி கட்டாத பேனா கம்பெனி மீது வழக்கு

முக்கிய இந்திய நாளேடுகளில் இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்) - பல வங்கிகளில் 3,695 கோடி கடன் வாங்கி கட்டாத பேனா கம்பெனி மீது வழக்கு

பட மூலாதாரம், FACEBOOK/VIKRAM KOTHAR

கான்பூரில் இருந்து இயங்கும் ரோட்டாமேக் பேனா நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநர்கள் விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி சாதனா, மகன் ராகுல் ஆகியோர் மீதும் பல வங்கிகளில் ரூ.3,695 கோடி கடன் வாங்கி வேண்டுமென்றே கட்டாமல் ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது சி.பி.ஐ. என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மணி லாண்டரிங் எனப்படும் பண மோசடியில் ஈடுபட்டார்களா என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரிக்கிறது. திங்கள் கிழமை காலை கோத்தாரியின் கான்பூர் வளாகத்தை சிபிஐ சோதனையிட்டது.

தினமணி - 6 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

6 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி எஸ். மலர்விழி தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும், பிரசாந்த் மு.வடநரே கன்னியாகுமரி ஆட்சியராகவும், எம்.விஜயலட்சுமி அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், வி.பி.தண்டபாணி, கடலூர் மாவட்ட ஆட்சியராகவும், மரியம் பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட ஆட்சியராகவும், டி.அன்பழகன் கரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினகரன் - எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோதி பங்கேற்க வருகிறார் மோதி?

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 24ம் தேதி சென்னை வருவார் என்று கூறப்படுகிறது என்றும். அப்போது மானிய விலையில் தமிழக அரசு வழங்க உள்ள இரு சக்கர வாகன திட்டத்தையும் தொடங்கி வைப்பார் என்றும் தினகரன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு சார்பிலும் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் விழா நடத்தப்பட்டது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. எம்ஜிஆரின் புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது என்று அந்தச் செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :