செம்மரக் கும்பலிடம் இருந்து தப்பி வந்தவர் என்ன சொல்கிறார்?

இடைத்தரகர்களுக்கு இரையாகிறார்களா மலைவாழ் மக்கள்?

வருவாய்க்காக கூலி வேலை எனக் கூறிச்சென்ற மலைவாழ் மக்கள் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட துயரம் சேலம் கல்வராயன் மலைக்கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் மற்றும் விழுப்புர மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ளது கல்வராயன் மலை. சேலம் மாவட்ட எல்லையில் 98 கிராமங்களையும், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 180 கிராமங்களையும் உள்ளடக்கியது இந்த கல்வராயன் மலை. இயற்கை வளங்கள் ஏராளமாக இருந்தும் பிழைக்க வழி இல்லை என்பதே இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் மனக்குமுறல்.

பிழைப்பு தேடி சென்றவர்களில் ஐந்து பேர்தான் ஒண்டிமெட்டு ஏரியில் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். செம்மரம் கடத்த வந்தவர்கள் என்றே குறிப்பிடப்படும் இவர்கள் விவரம் அறிந்தே ஆந்திர வனப்பகுதிக்கு செல்கின்றனரா என்பது கேள்விக்குறியே.

மைசூருக்கு மிளகாய்த் தோட்டக் கூலி வேலைக்கு செல்கிறேன் என்று கூறிதான் வீட்டை விட்டு புறப்படுவதாக சொல்லி வைத்தார்போல் கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி செம்மரம் வெட்ட இப்பகுதி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் மீண்டும் மீண்டும் பதிவாகும் வழக்குகளும், உயிரிழப்பும் இம்மக்களை மீளத்துயரில் ஆழ்த்துகின்றன என்பதே உண்மை.

கூலி வேலைக்கு அழைத்ததாகவும், அதனால் பலரும் சேர்ந்து குழுவாக வேலைக்குச் சென்றதாகவும், சென்ற இடத்தில் செம்மரம் வெட்ட கட்டாயப்படுத்தபட்டு, மறுத்ததால் உணவுக்கும் வழி இன்றி தப்பிப் பிழைத்து ஊர் வந்ததாகவும் பதிவு செய்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர். தங்களில் பலர் இவ்வாறு தப்பிக்க முயற்சி செய்ததாகவும் அவர் வேதனையோடு தெரிவித்தார்.

மலைவாழ் மக்களின் வறுமையின் தவிப்பை தங்களுக்கான வருமானத்துக்குரிய வழியாக இடைத்தரகர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இம்மக்களை உணர்ந்தவர்களோ, இவர்கள் வேலைக்காகவே அழைத்து செல்லப்பட்டனர் என்றும் எந்த முழுவிவரம் தெரியாமல் செல்லும் இம்மலைவாழ் மக்களை இடைத் தரகர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் எனவும் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

சில இடைத்தரகர்கள் ஆசை வார்த்தை கூறி இவர்களை அழைத்துச்செல்லும் இடமாக உள்ளது அண்டை மாநிலமான ஆந்திரா. ஏற்கனவே பல உயிரிழப்புகள் நிகழ்ந்த ஆந்திர வனப்பகுதியில் மலைவாழ் மக்களின் தொடரும் அவலமாக உள்ளது இந்த ஐந்து பேரது உயிரிழப்பு. மற்றவர்களின் நிலையோ கேள்வி குறியாக உள்ளது.

இடைத்தரகர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மலைப்பகுதி மக்ளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக முன் வைக்கப்படுகிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்த போதிலும், நிரந்தரத்தீர்வு எப்போது என்பதே அனைத்து மக்களின் கேள்வியாய் உள்ளது.

அரசின் நிவாரணம் சற்றே ஆறுதல் அளித்த போதிலும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு எட்டப்படுமா என்பதே மலைவாழ் மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்