"அரசியல் பயணத்தைத் துவங்கிவிட்டேன்": கமல்ஹாசன்

கமல்

பட மூலாதாரம், ARUN SANKAR/GETTY IMAGES

தனது கட்சியின் பெயரையும் கொடியையும் மதுரையில் நாளை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் கமல்ஹாசன்.

அரசியல் கட்சியைத் துவங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், பிப்ரவரி 21ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்திற்கு காலை ஏழே முக்கால் மணியளவில் செல்கிறார். அதற்குப் பிறகு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கூடத்திற்குச் சொல்லும் கமல், ராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மகாலில் மீனவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.

இதன் பிறகு காலை பதினொன்றே கால் மணியளவில் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் கமல், அங்கிருந்து மதுரைக்குப் புறப்படுகிறார். செல்லும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாயில், பரமக்குடி ஐந்து முனை சாலை, மானாமதுரை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

மலை ஐந்து மணியளவில் மதுரை ஒத்தக்கடைக்கு அருகில் உள்ள பொதுக்கூட்ட மைதானத்திற்கு வரும் கமல்ஹாசன், 6 மணியளவில் கட்சியின் கொடியை ஏற்றுகிறார். இதன் பிறகு, இரவு 8 மணியவில் உரையாற்றுகிறார். அப்போது தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

மதுரையில் கமல்ஹாசனின் பொதுக்கூட்டம் ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்திற்கான பணிகள் தற்போது மிக வேகமாக நடந்துவருகின்றன.

இந்தக் கூட்டத்திற்கென பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுவருகிறது. கமல்ஹாசனின் ரசிகர்கள் பலர், கமல்ஹாசனை வாழ்த்தி பேனர்களையும் பதாகைகளையும் மைதானத்தைச் சுற்றி வைத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கென குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்திற்குச் செல்வதற்காக இன்று காலையில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டார் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய அரசியல் பயணத்தைத் துவங்கிவிட்டேன். நாளை நடைபெறும் கூட்டத்தில் என் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள்" என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்கிறாரா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

மதுரைக்குப் புறப்படுவதற்கு முன்பாக கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கமல் தன்னை வந்து சந்திக்க விரும்பியதாகவும், ஆனால், அவர் மூத்தவர் என்பதால் தானே வந்து சந்தித்ததாகவும் தெரிவித்தார். அங்கு பேசிய கமல்ஹாசன், அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்து வருவதால், அந்தக் கட்சியைச் சேர்ந்த யாரையும் சந்திக்கவில்லையென்று தெரிவித்தார்.

கமல்ஹாசனை அரசியலுக்கு வரவேற்கும் விதத்தில், "வா ராசா, வா ராசா கமலஹாசா" என ஒரு வீடியோ பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :