கமல் ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு?

கமல் ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு?

நடிகர் கமல் ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமலின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

கமல் ஹாசன் தன்னை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் அவர் தன்னை சந்திப்பது மரியாதை ஆகாது என்பதால் தான் கமலை சந்தித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் நாளைய தினம் (புதன்கிழமை) தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

இச்சூழலில், இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவரது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல் ஹாசன் தொடங்கவிருக்கும் அரசியல் பயணம் வெற்றிபெற வேண்டும் என்று உளமாற வாழ்த்துவதாகவும், ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கும் அவரது பயணம் புரட்சிகர வெற்றிப் பயணமாக அவருக்கு அமைய வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் கூறினார்.

அரசியலில் கமல் ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இடைமறித்து பதிலளித்த கமல் ஹாசன், தனது கொள்கைகள் என்ன என்பது சீமானுக்கு தெரியாது என்றும், தனது அரசியல் பயணத்தை பார்த்துவிட்டு அவரது ஆதரவு முடிவை தெரிவிக்கலாம் அதுதான் நியாயம் என்றும் கூறினார்.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட போது அவரைப் பார்க்காமல் கமலை மட்டும் வந்து சந்தித்துள்ளீர்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இங்கு நெசவாளர் பிரச்சனை, தொழிலாளர் பிரச்சனை, மாணவர் பிரச்சனை என பல இருக்கின்றன அதை தெரிந்துகொண்டால்தான் பிரச்சனையை சரிசெய்ய முடியும் என்றும், அதுபற்றி தெரியாமல் திடீரென வருவது சரியாக இருக்காது என்றும் சீமான் பதில் கூறினார்.

சினிமா கலைஞர்கள் அரசியலுக்கு வருவதால் சமூகத்தில் மாற்றம் நிகழுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே தனது ஆசை என்றும், முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறு பொதுமக்கள் அரசியலுக்கு வந்திருந்தால் தன்னை போன்றவர்கள் வெறும் சினிமா தொழிலை மட்டும் பார்த்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒத்தக்கடை மைதானத்தில் பொதுக்கூட்டம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: