பாலியல் சேவையில் ஈடுபட்ட 21 ரெட் க்ராஸ் ஊழியர்கள் பணிநீக்கம்

ரெட் கிராஸ்

பட மூலாதாரம், Getty Images

கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக 21 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைக் (ரெட் க்ராஸ்) சங்கம் தெரிவித்துள்ளது.

"பாலியல் சேவைகளுக்கு" பணம் வழங்கிய ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், சிலர் தங்கள் பணியை ராஜினாமா செய்ததாகவும் செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குநர் டக்கார்ட் தெரிவித்தார்.

இத்துறையில் பல்வேறு பாலியல் புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் வெளிப்பாடாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக மனிதாபிமான அமைப்புகள் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, ஜெனிவாவை சார்ந்த செஞ்சிலுவை சங்கம் தங்கள் அமைப்பில் உள்ஆய்வு நடத்தியதாக டக்கார்ட் தெரிவித்தார்.

"நடத்தப்பட்ட உள்விசாரணையின்போது, 2015ஆம் ஆண்டில் இருந்து பாலியல் சேவைகளுக்கு பணம் வழங்கிய 21 ஊழியர்கள் பணிநீக்கம் அல்லது ராஜினாமா செய்துள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட இரு ஊழியர்களின் பணி ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், இது போன்ற அறிக்கைகள் வெளியிடுவது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் டக்கார்ட் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதிலும் மொத்தம் 17 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட செஞ்சிலுவை சங்கம், இது போன்ற சம்பவங்களை முறையாக அறிவித்ததா அல்லது சரியாக கையாண்டதா இல்லையா என்பது குறித்து கவலை கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு இது போன்ற நடத்தைகள் துரோகம் விளைப்பதுபோல் உள்ளதாக குறிப்பிட்ட டக்கார்ட், மனித கவுரவத்திற்கு எதிராக இது இருப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் மீது எதிர்காலத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வதேச செஞ்சிலுவைக் சங்கம் தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :