நான்...சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டு விளக்கு: கமல்

"அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கியது பெரும்பேறு" - கமல்

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்று தன் அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.

அப்துல் கலாமின் இல்லத்திற்கு 7.45 மணிக்கு சென்ற கமல்ஹாசனை, கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் வரவேற்றார். கலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார். கலாம் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

அனுமதி மறுப்பு

கலாம் படித்த பள்ளிக்கு கமல் செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

"பெரும்பேறாக நினைக்கிறேன்"

இந்நிலையில், ராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாம் இல்லத்திலிருந்து ராமேஸ்வரம் மீனவர்களை சந்திப்பதற்காக புறப்பட்ட கமல் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,"பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பின் மீனவர்களை சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாடினார் கமல்.

புரிஞ்சதா புரியலையா...?

"தமிழகத்தின் முக்கியமான தொழில்களில் மீனவத் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகதான் வந்திருக்கிறேன்.

உங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிகை வாயிலாக அறிவதற்கு பதிலாக, நேரடியாக உங்களிடமிருந்து அறிய கடமைபட்டிருக்கிறேன். வாக்குறுதிகள் அள்ளிவீசிவிட்டு, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கும் போது, பிரச்சனையை திசை திருப்புவது இப்போது வாடிக்கையாக உள்ளது. கேள்வி கேட்பவர்கள், தங்கள் உரிமையை கேட்பவர்களுக்கு தடியடி செய்து பதில்தர முடியாது." என்றார்.

கூட்டத்தில் இரைச்சலாக இருந்ததால், மீனவர்களிடம் புரிஞ்சதா... புரியலையா என்று கேள்வி எழுப்பினார் கமல்.

கமலை சந்தித்து உரையாட பல மீனவர்கள் வந்திருந்தனர். ஆனால், அவர்களால் கமலை சந்திக்க இயலவில்லை.

வாய்ப்பில்லாமல் போய்விட்டது

பின் பிபிசியிடம் பேசிய மீனவ சங்க பொதுச் செயலாளர் போஸ், "உலகம் முழுவதும் அறியப்பட்ட நடிகர் கமல்ஹாசன் மூலமாக எங்கள் பிரச்சனை வெளியே சென்றால், அது கவனம் பெறும். அரசின் செவிகளில் விழும். எங்களை மேடையில் அழைத்து கமல் பேசி இருந்தால் இந்த நிகழ்வு முழுமை பெற்று இருக்கும்." என்றார்.

"எங்கள் தொழில் இருண்ட ஒரு தொழிலாக போய்விட்டது. இலங்கை ராணுவம் எங்களை சிறையில் அடைக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு டீசல் விலை உயர்ந்து, மீனவ தொழில் செய்ய முடியாத அளவுக்கு சென்றுவிட்டது. இது குறித்தெல்லாம் பேசதான் வந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இங்கே இல்லாமல் போய்விட்டது" என்றார்.

பின் அந்த மீனவ பிரதிநிதிகளை பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்ற இடத்தில் சந்தித்தார் கமல்.

மீனவர்கள் பொன்னாடை போர்த்த வந்தபோது, `வேண்டாம்` என்று மறுத்த கமல், அவர்களை ஆரத்தழுவினார்.

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?

பின் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார் கமல்ஹாசன். அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், " ஒரு காலத்தில் திலகர், ராஜாஜி, அம்பேத்கர் என வழக்கறிஞர்கள் மட்டுமே அரசியலுக்கு வந்தனர். அப்போது யாரும் இது போலெல்லாம் கேள்வி எழுப்பவில்லை. தொழிலுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. உணர்வும் உத்வேகமும் உள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்." என்றார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார் கமல்.

கொள்கை பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாதீர்கள். மக்களுக்கு என்ன தேவை என்பதை பட்டியிலிடுங்கள். இசங்களைவிட அதுதான் முக்கியம் என்று சந்திரபாபு தன்னிடம் கூறியாத பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் கமல்.

மேலும் அவர், அப்துல் கலாம் வீட்டிற்கு செல்ல விரும்பியதில் எந்த அரசியலும் இல்லை என்றார்.

ஏன் அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர், "நான் யாருடைய இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொள்வதில்லை. இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதில் நம்பிக்கை இல்லை." என்றார்.

பாடம் கற்பேன்

கலாம் படித்த பள்ளிக்கு அனுமதிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "என்னை பள்ளிக்கூடத்திற்கு அனுமதிக்காவிட்டால் என்ன... நான் பாடம் கற்பேன்." என்றார்.

உலக தாய்மொழி தினம்

குறிப்பாக பிப்ரவரி 21 ஆம் தேதியை கட்சி தொடங்குவதற்கு தேர்ந்தெடுக்க காரணமென்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "இன்று உலக தாய் மொழி தினம். அதனால்தான் இந்நாளை தேர்ந்தெடுத்தேன்." என்றார்

அங்கிருந்து கலாம் நினைவிடத்திற்கு புறப்பட்டார்.

ரசிகர்கள் மத்தியில்...

ராமநாதபுரத்தில் ஒரு பொதுகூட்டத்தில் கலந்துக் கொள்கிறார் கமல். ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையின் இரண்டு பக்கத்திலும் 'நாளை நமதே` என்று பெயர் பொறித்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் செல்லும் வழியில் பாம்பன் பாலம் மற்றும் மண்டபம் பகுதியில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மண்டபம் பகுதியில் ஒலிப்பெருக்கி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் உரையாடினார் கமல்.

சரிந்த எல்.ஈ.டி திரை

இதற்கு மத்தியில், இன்று மாலை மதுரையில் நடக்க இருக்கும் பொது கூட்டத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்த எல்.ஈ.டி திரைகள் சரிந்து விழுந்தன. அதனை சரி செய்யும் பணியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

நான் சினிமா நட்சத்திரம் அல்ல

"நான் இனி சினிமா நட்சத்திரம் அல்ல. உங்கள் வீட்டு விளக்கு இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" என்று ராமநாதபுரம் அரண்மனை வாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் கமல்.

இன்று மாலை மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகம் செய்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்