மய்யம் என்ற பெயர் ஏன்? - கமல் ஹாசன் விளக்கம்

  • 22 பிப்ரவரி 2018

மதுரையில் இன்று (புதன்கிழமை) மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார்.

''37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்து கொண்டிருந்த கூட்டத்தை தற்போது நீங்கள் பார்த்து கொண்டிருந்தீர்கள்'' என்று உரையின் தொடக்கத்தில் தனது ரசிகர்கள் குறித்து கமல் ஹாசன் பேசினார்.

''இன்று கட்சியின் பெயரை மட்டும் அறிவித்து சென்றுவிட நான் எண்ணியிருந்தேன். ஆனால், நண்பர் கேஜ்ரிவால் இன்றே நம் கட்சியின் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்று கமல் தெரிவித்தார்.

''எத்தனை நாட்கள் ஊமையாக இருப்பது? இன்று பேசும் நாள்'' என்று குறிப்பிட்ட கமல் தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் விளக்கினார்.

கட்சியின் கொள்கைகள் பின்வருமாறு:-

நல்ல மற்றும் தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.

சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியல் இருக்காது.

''நாங்கள் ததத்தெடுக்கும் 8 கிராமங்களில் அனைத்து பணிகளையும் நாங்கள் நிச்சயமாக செய்து முடிப்போம்'' என்று கமல் மேடையில் சூளுரைத்தார்.

''நல்ல கட்சிக்கு வாக்களித்து இருந்தால் 6000 ரூபாய் அல்ல ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் ரூபாய் சம்பாதிக்க முடியும்'' என்று அவர் மேலும் கூறினார்.

மய்யம் என்ற பெயர் ஏன்?

''மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று கமல் தெரிவித்தார்.

Image caption மதுரை பொதுக்கூட்டத்தில் கமல்
Image caption பொதுக்கூட்ட மேடை

தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சி பதிவாகி விட்டது. குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் நீடிக்கும் எண்ணத்தில் இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வருங்கலத்துக்கான விதையை தேடுகிறேன்

''எனது வயது 63. அடுத்த 40 ஆண்டுகள் ஆளும் கனவோடு நான் இங்கு வரவில்லை. எதிர்காலத்தின் விதையை தேடி இங்கு நான் வந்துளேன். என் வயதை கிண்டலடிக்கிறார்கள். ஆயுள் குறைவாக உள்ள சிலர்'' என்று கமல் ஹாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.

காவிரி பிரச்சனை தொடர்பாக பேசிய அவர் , ''முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் எந்த மாநிலத்திடமும் நமக்கு தேவையானதை கேட்டு பெற முடியும்'' என்று குறிப்பிட்டார்.

கட்சியின் சின்னம் குறித்து விளக்கம்

படத்தின் காப்புரிமை Twitter
Image caption கட்சியின் பெயரை அறிவித்தார் கமல்

தனது கட்சியின் சின்னம் குறித்து பேசிய அவர், '' இதில் உள்ள 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலங்களைக் குறிக்கும். இதை நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். அதேபோல், இதில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும்'' என்றும் கமல் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய டெல்லி மாநில முதல்வர் கேஜ்ரிவால், ''இந்த பொதுக்கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை கமல் ஹாசன் தொடங்கியுள்ளார். ஒரு திரையுலக பிரபலமாக நான் எப்போதுமே அவரது ரசிகனாக இருந்துள்ளேன் ஆனால், இப்போது அவர் களத்தில் நின்று போராடும் நிஜ கதாநாயகனாக திகழ்கிறார்'' என்று தெரிவித்தார்.

தமிழக மக்கள் கமலின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Image caption கேஜ்ரிவாலுடன் கமல்

முன்னதாக, இன்று காலையில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லம், பின் மீனவர்களுடன் சந்திப்பு, பரமக்குடியில் பொதுகூட்டம் என தொடர்ந்த இந்த பயணத்தில் மாலை மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: